என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வளா்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி,கணபதிபுரம், திருக்கண்ணபு ரம்,திருப்பத்தாங்குடி உள்ளிட்ட ஊா்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது. இருப்பினும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவா்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்ட வா்களும்,விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவா்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அங்கு இரவுப் பணியில் இருக்கும் செவிலியா்கள் முதல் உதவி மட்டும் செய்துவிட்டு உடனடியாக நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனா்.

    எனவே, இப்பகுதிகளில் இரவு நேரத்திலும் முழு சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவு நேரப்பணியில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தினமும் 12 டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.
    • 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ. 65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 வாகனம் வாங்கபட்டது . இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் பணியினை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு இரண்டு டன் குப்பபைகளை அள்ளும் 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது ;-

    இந்த வாகனங்கள் மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என நாள்தோறும் 12 டன் குப்பைகள் அள்ளபட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லபடும்.

    அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி சலுகை விலையில் விலையில் வழங்கப்படும். மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ளப்படும் என்றார்.

    • மாணிக்கவாசகரின் சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • அவரது படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு நடராஜசுவாமி சன்னதியில் மாணிக்கவாசகர் உருவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பின்னர் நடராஜர், தியாகராஜசுவாமிகள், மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள மாணிக்கவாசக சுவாமிகள் மடத்தில் மாணிக்கவாசகர் உருவ படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது.

    இதில் யாழ்பாணம் கரணவாய் வரணி ஆதினம் மற்றும் மாணிக்கவாசக மடத்தின் தர்மகர்த்த செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஆதிவார மடம் நிர்வாகி குமரேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனர்.

    கோயில் ஓதுவார் மூர்த்தி பரஞ்சோதி ஓதுவார் தலைமையில் தேவார திருப்பதிகம் பாடப்பட்டது. அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.

    • அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
    • சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 100 நாள் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கியது.

    திருப்புகலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று என்ற முறையில் 100 நாட்கள் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் ஐசக்காட்சன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.
    • உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய 621 காலி பணியிடங்களுக்கான தேர்விற்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.

    மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவிக்கையின்படி இணைய வழி விண்ணப்பம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு ள்ளது.எனவே, நாகை மாவட்ட த்தை சேர்ந்த கல்வி தகுதியுள்ள அனைவரும், இந்த காவலர் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்து நாகப்ப ட்டினம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெ றி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறுப வர்களுக்கு அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்க ப்படும். இப்பயிற்சி யில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் 10 ஆயிரம் மின்இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த கீழக்கரையிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 10 ஆயிரம் மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால் மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு குறைந்த அளவு மின்சாரம் வருவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள், உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது.இதனால் திருமருகல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருமருகல் அரசு ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகம்,போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே திருமருகல் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது.
    • துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவரது மனைவி துர்கா தேவி (வயது 42). இவர்களது மகன் தினேஷ் (20) . இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கி விவசாய தொழிலை செய்து வருகிறார்.

    சுந்தரமூர்த்தியின் மனைவி துர்கா தேவி 18-ந்தேதி இரவு வீட்டில் இருந்து 8 மணிக்கு மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடன்தொகை கட்டி விட்டுவருவதாக சென்றுள்ளார். இரவு 11 மணி ஆகியும் தூர்காதேவி வீட்டுக்கு வராதால் கணவரும் அவரது மகனும் அக்கம்பக்கம் தேடி பார்த்து உள்ளனர்.

    எங்குதேடியும் கிடைக்காததால் காலையில் தேடிக் கொள்ளலாம் என இருவரும் தூங்கிவிட்டனர். பின்பு காலையில் எழுந்து தேடி பார்க்கும் பொழுது புஷ்பவனம் கடற்கரையில் ஒரு பெண் பிணம் படுகாயத்துடன் கிடப்பதாக வாட்ஸ்அப்பில் வந்த தகவலை பார்த்த கணவன் சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று போய் பார்த்தபோது இறந்தது துர்காதேவி தான் என தெரிய வந்தது. இது குறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார்.

    வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பசுபதிமற்றும் போலீசார் புஷ்பவனம் கடற்கரைக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு நாகையிலிருந்து தடவியியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.

    நாகையிலிருந்து மோப்பநாய் தூலிப் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பம் பிடித்து சிறிது நேரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்பு போலீசார் சம்பவம் நடைபெற்ற புஷ்பவனம் செம்போடை, தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று குழுவிற்கு பணம் கட்டி விட்டு வருவதாக கூறிச் சென்ற தூர்காதேவியை யாரேனும் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து கடற்கரையில் பிணத்தை வீசினார்களா? அல்லது தேத்தாகுடி தெற்கில் கொலை செய்து வாகனத்தில் வந்து புஷ்பவனம் கடற்கரையில் பிணத்தை வீசிவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துர்கா தேவி வசித்த தேத்தாகுடி தெற்கிற்கும் பிணம் கிடந்த புஷ்பவனம் கடற்கரைக்கும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துர்கா தேவி வீட்டில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரம் அவரது செல்ஃபோன் வேலை செய்துள்ளது. பின்பு அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது என்பது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று காலை வேதாரண்யம் தென்னம்புலம் பெட்ரோல் பங்கு அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அழகுக்கண்டர் காட்டை சேர்ந்த சுந்தரவடிவேலுவின் மகன் அருண் (வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அருண் சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருகிறார். இவர் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் விற்பனை செய்வதற்கு தனது வாட்ஸ்அப் மூலம் விளம்பரபடுத்தி இருந்தார். இதில் தூர்கா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளனர். இதில் அருண் பிறந்தநாள் அன்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்பொழுது அருண் தூர்கா தேவிக்கு 1 பவுன் நகை பரிசாக கொடுத்துள்ளார். இது போல் பலமுறை பணம் கொடுத்து தூர்கா தேவியுடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.

    இதே போல் சம்பவத்தன்று தூர்காதேவியை புஷ்பவனம் கடற்கரைக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். பின்பு துர்கா தேவி அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறி காரை எடுக்கும் பொழுது துர்கா தேவிக்கும் அருணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் தங்களின் உறவை வெளியே சொல்லி விடுவேன் என துர்கா தேவி மிரட்டி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருண் மூன்று முறை காரை விட்டு துர்கா தேவியை மோதி உள்ளார். இதில்சம்பவ இடத்திலேயே துர்கா தேவி இறந்து விட்டார். பின்பு அருண் துர்கா தேவி பிணத்தை எடுத்து கடற்கரையில் போட்டு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அருணை போலீசார் கைது செய்து உள்ளனர். கள்ளக்காதலில் உல்லாசமாக இருந்து விட்டுஅதை வெளியில் சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்த இச்சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உலகயோகா தினத்தை முன்னிட்டு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ேயாகாசனம் செய்தனர்.
    • வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    நாகப்பட்டினம்

    நாகை அருகே உதவி கலெக்டர் தலைமையில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை தாங்கி, யோகாசனம் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் கூறியதாவது:-

    யோகா பயிற்சிகளை செய்ய வேண்டியும், அதன் பயன்களை அனைவரும் பெறவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமின்றி, மன நலனும் மேம்படுகிறது. மனதை புத்துணர்ச்சி ஆக்குகிறது. எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    மாணவ- மாணவிகளுக்கு ஒழுக்கம் என்பது முக்கியமானதாகும். சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், என்னை போன்று உயர் பதவிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆனந்த் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • 13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், மாணவர்கள் அங்குள்ள கலையரங்க மேடையிலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். வகுப்பறை இல்லாமல் கடும் வெயிலில் மாணவர்கள் அவதிப்படுவது அண்மையில் சமூக வலை தளங்களில் வெளியானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கூறியதாவது,

    நாகையில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இதுவரை 6 பள்ளிகளுக்கு இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசின் பொது நிதியின் கீழ் 7 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    முட்டம் பள்ளியின் நிலையை ஏற்கெனவே நேரில் பார்வையிட்டு தெரிந்து கொண்டேன். 2023-24 ஆம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதியளித்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன.
    • பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான்.

    நாகப்பட்டினம்:

    நாகை தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் பா.ஜனதா அரசு கைது செய்யவில்லை.

    பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறு உருவமாக செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறறும்.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×