என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழியில் பல கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு ரூ.4ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் உத்தரவின்படி சீர்காழி பழைய பஸ்நிலையம், தேர்வடக்குவீதி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிமேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதாரஆய்வாளர் மோகன், வருவாய்ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல கடைகளிலிருந்து 300 கிலோ வரை பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்ததாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.4ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பின்னர் அழித்தனர். வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்தால் கடும் நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் தெரிவித்தார்.
    கோடியக்கரையில் மீனவர் வலையில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் சிக்குவதால் வலைகளில் முறுக்கு ஏற்பட்டு மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரைதிரும்புகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அதிக அளவில் வி‌ஷத்தன்மையுள்ள ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. கடற்பரப்பில் அதிக அளவில் ஜல்லி மீன்கள் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலமாகும். இந்த மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பார்கள். சீசன் முடிந்த பிறகு உள்ளூர் மீனவர்கள் மட்டும் சிறிய பைபர் படகில் மீன் பிடிக்க செல்வார்கள்.

    தற்போது மீனவர் வலையில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் சிக்குகின்றன. இதனால் வலைகளில் முறுக்கு ஏற்பட்டு மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரைதிரும்புகின்றனர்.

    இது குறித்து கோடியக்கரை முன்னாள் மீனவர் நலச்சங்க சித்ரவேலு கூறும்போது, கோடியக்கரையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் வலையில் தற்போது அதிக அளவில் ஜெல்லி மீன்கள் சிக்குகின்றன.

    இந்த வகையான ஜெல்லி மீன்களை சொரிமீன் என்றும் அழைப்பார்கள். இதில் சொரி, செஞ்சொரி, நெருப்புசொரி, பணங்காசொரி என நான்கு வகை உண்டு. தண்ணீர் நிறத்தில் காணப்படும் இந்த சொரிமீன்கள் உடலில் பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    மற்ற சொரிமீன்கள் உடம்பில் பட்டால் அரிப்பு ஏற்படும். கோடியக்கரையில் காணப்படுவது பனங்காய் சொரி வகை மீன்கள் ஆகும். இந்த மீன் லேசான அரிப்பு தன்மை உடையது. இந்த மீன்களை இங்கிருந்து பிடித்து பாடம் செய்து சீன நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர் என்றார்.

    வேதாரண்யம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இந்த பள்ளியில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் 10 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் கம்யூட்டர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 2 லேப்டாப் திருடு போனது.

    இது குறித்து தலைமை ஆசிரியர் பழனிவேலன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா விசாரணை நடத்தினார். அதில் பள்ளி சீரமைப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் சிம்மராஜசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 22), வேலூரை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய 2 பேர் லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சிவக்குமார் மற்றும் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி அடுத்த திருக்குவளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அடுத்த திருக்குவளை அருகே எட்டுக்குடி வல்லம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது54). இவர் எட்டுக்குடி அ.தி.மு.க கிளைச் செயலாளராக இருந்தார்.

    இந்த நிலையில் காமராஜ் ஈசனூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த காமராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காமராஜ் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வியாபாரிகள் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் மாயூரம் வழக்குரைஞர் சங்க தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ. வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்ததும் தனி மாவட்டம் உருவாக்குவது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்று போலீசார் கூறினர்.

    அதனை ஏற்று வக்கீல்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    நாகை பகுதிகளில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்டவைகள் அமைந்த ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது. நாகைக்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நாகை ரெயில் நிலையம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும்.

    நாகை பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்கவும், அவை நடக்காமல் தடுக்கவும், போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான ரெயில் நிலையம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் நாகை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. குறிப்பாக நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே பழுதடைந்த கண்காணிப்பு கேமரா சீரமைக்கப்படாமல் வீட்டின் சுவரில் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் நாகை அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் போலீஸ்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சில புயலில் சேதமடைந்து உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை வெளிப்பாளையம், பரவை பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் 2 பெண்களிடம் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    மேலும் நாகை புதிய கடற்கரையிலும், கடற்கரை சாலையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அந்தபகுதியில் அடிக்கடி திருட்டுகள் நடக்கிறது. எனவே திருட்டுகளை தடுக்கும் வகையில் நாகை பகுதிகளில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் நாகை புதிய கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மயிலாடுதுறையில் தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம் ஆனது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தருமபுரம் எல்.பி நகர் ஆலமரத்தடி பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு பலர் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் உள்ள காமராஜ் என்பவரது வீட்டில் தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள கணேசன், குமார், முருகன், புனிதவள்ளி ஆகியோரது வீடுகளிலும் தீப்பிடித்தது. இதுபற்றி மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இருந்த போதிலும் 5 பேரின் குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து போனது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமானது. மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    மணல்மேடு களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஜெயராமன் (வயது 55). இவர் பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கிராமத்தில் கடையை வாடகைக்கு பிடித்து வெல்டிங் பட்டறை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது கடையில் மின்சாரம் இல்லாததால் அருகில் உள்ள மற்றொரு கடையில் தனது வெல்டிங் பொருட்களை வைத்து சென்றார்.

    சம்பவத்தன்று வெல்டிங் பொருட்களை எடுப்பதற்காக ஜெயராமன் சென்றுள்ளார். அப்போது இரும்பு ‌ஷட்டரை திறக்கும் போது மின் கசிவின் காரணமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயக்க மடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் ஜெயராமனின் இறப்பு சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு ஜெயராமன் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வந்தபோது அப்பகுதி கிராம மக்கள் மின்சாரம் பாய்ந்து இறந்து போன ஜெயராமனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சந்தேக மரணத்தை, விபத்து மரணமாக போலீசார் மாற்ற வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    தகவலறிந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    வேதாரண்யம் அருகே நடந்த சாலை விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் குமார் (வயது 40), டிராக்டர் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த கபில் (26) என்பவரும் கடந்த 6-ந் தேதி டிராக்டரில் சென்றனர். குமார் டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது காற்று பலமாக வீசியதால் டிராக்டர் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த குமார் மீது டிப்பர் ஏறியது. இதில் அவர் படுகாயமடைந்தார். கபில் லேசான காயத்துடன் தப்பினார்.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குமாரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வேதாரண்யத்தை அடுத்த கரியாபட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார் (வயது 39). இவர் தனியார் உப்பு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள சோமநாதர் கோவிலடி என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மயிலாடுதுறையில் இன்று காலை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கோர்ட்டு முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதேபோல் கும்பகோணமும் புதிய மாவட்டமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், வக்கீல் சங்கத்தினர் உள்பட பல்வேறு பொதுநல அமைப்பினர் கடந்த 40 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வந்தனர்.

    நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் , தமிழக அரசு இதுபற்றி அறிவிப்பு வெளியிடாததால் பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை வர்த்தக சங்கம் சார்பில் அவசர கூட்டம் சங்க தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு இதுகுறித்து அறிவிப்பை வெளியிட வலியுறுத்தி மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார் கோவில், பொறையாறு, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மயிலாடுதுறை பஸ் நிலையம், பட்டமங்கலத்தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மயிலாடுதுறை பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் செம்பனார் கோவில், பொறையாறு ஆகிய பகுதிகளிலும் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம் ஆகிய பகுதிகளில் இன்று காலையில் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. இந்த பகுதிகளில் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் இராம.சேயோன் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது.

    இதில் மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்கக்கோரி இன்று (19-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 22-ந் தேதி மயிலாடுதுறையில் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மயிலாடுதுறை கோர்ட்டு முன்பு வக்கீல் சங்க தலைவர் இராம.சேயோன் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மயிலாடுதுறை பகுதியில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    நாகை அருகே வெவ்வேறு இடங்களில் வியாபாரி மற்றும் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூரை அடுத்த பழையனூர் மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பிரேம்நாத் (வயது 18) கூலி தொழிலாளி.

    இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பெற்றோர் பிரேம்நாத்தை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூரை அடுத்த சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (55), பால் வியாபாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே தலைஞாயிறுராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் தொ.மு.ச தலைவர் டிஎஸ்.குமார் தலைமையில் ஆலை நுழைவு வாயில் முன்பு ஆலை பணியாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான குத்தாலம்.கல்யாணம் கண்டன உரையாற்றினார். இதில் 2018-19ஆலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். அதே போல் ஆலைக்கு நிரந்தர மேலாண்மை இயக்குனர் நியமிக்க வேண்டும். நடப்பு ஆண்டு கரும்பு அரவை அரசு உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் எஸ்.கமலநாதன். பீ.மோகன்.ஐ.ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×