search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் காட்சி
    X
    மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் காட்சி

    தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மயிலாடுதுறையில் கடையடைப்பு - வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மயிலாடுதுறையில் இன்று காலை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கோர்ட்டு முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதேபோல் கும்பகோணமும் புதிய மாவட்டமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், வக்கீல் சங்கத்தினர் உள்பட பல்வேறு பொதுநல அமைப்பினர் கடந்த 40 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வந்தனர்.

    நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் , தமிழக அரசு இதுபற்றி அறிவிப்பு வெளியிடாததால் பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை வர்த்தக சங்கம் சார்பில் அவசர கூட்டம் சங்க தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு இதுகுறித்து அறிவிப்பை வெளியிட வலியுறுத்தி மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார் கோவில், பொறையாறு, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மயிலாடுதுறை பஸ் நிலையம், பட்டமங்கலத்தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மயிலாடுதுறை பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் செம்பனார் கோவில், பொறையாறு ஆகிய பகுதிகளிலும் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம் ஆகிய பகுதிகளில் இன்று காலையில் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. இந்த பகுதிகளில் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் இராம.சேயோன் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது.

    இதில் மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்கக்கோரி இன்று (19-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 22-ந் தேதி மயிலாடுதுறையில் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மயிலாடுதுறை கோர்ட்டு முன்பு வக்கீல் சங்க தலைவர் இராம.சேயோன் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மயிலாடுதுறை பகுதியில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    Next Story
    ×