என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பையை மறைத்து வைத்துக்கொண்டு ஏதோ சீட்டுகளை விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தோப்புத்துறை பகுதியை சேர்ந்த முகமது யூசுப் (வயது39) என்பதும், அவர் பையில் மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யத்தில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வருவதால் பழுதடைந்துள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அரசுக்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம்- நாகை சாலையில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது. வேதாரண்யம் வட்டாரத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு தலைமை அலுவலகம் இதுதான். இந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த அலுவலகம் அருகே உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. பின்னர் சேதுசாலையில் புதிதாக கட்டப்பட்ட புயல் பாதுகாப்பு கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    தற்போது வேதாரண்யம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்களும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழ்வேளூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த மாதம் நிவர், புரெவி புயல்களால் 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.

    மேலும் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கின. மழை விட்டதை தொடர்ந்து வெயில் அடித்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீ்ரை வெளியேற்றி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கீழ்வேளூர் ஒன்றிய பகுதியில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கீழ்வேளூர் வட்டார பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் நெற்பயிர்கள் மூழ்கின.

    பின்னர் வயலில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்றினோம். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கீழ்வேளூர், அகரகடம்பனூர், கோவில் கடம்பனூர், திருக்கண்ணங்குடி, ஆனைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.

    இனிமேல் இந்த பயிர்களை காப்பாற்ற முடியாது. நெற்பயிர்களை அறுவடை செய்து பொங்கல் பண்டிகைக்கு புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வேதாரண்யம் அருகே மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு வடக்கு ஜல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருமறைச்செல்வி (வயது32). இவருடைய கணவர் ராஜ்குமார்(37). ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் திருமறைச்செல்வி வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, ராஜ்குமாரையும், திருமறைச்செல்வியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் திருமறைச்செல்வி அங்கிருந்து சென்று வேதாரண்யம் பஸ் நிலையத்தில் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் மனைவி திருமறைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
    வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1890 லி்ட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் போலீசார் கோனேரிராஜபுரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த கோபு மகன் சூர்யா(வயது24) அதே பகுதியில் உள்ள ராமதுரை என்பவரது வீட்டின் பின்புறத்தில் 54 கேன்களில் 1890 லிட்டர் சாராயத்தை மண்ணில் புதைத்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராய கேன்களை பறிமுதல் செய்து பாலையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து தப்படித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்களுடன் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து தப்படித்தும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் தலைமை தாங்கினார்.

    இதில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    புயல், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.32 ஆயிரம் உடனடியாக நிவாரணம் வழங்க கோரியும், வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் காரணமாக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்று அழைக்கப்படுவதால் வேளாங்கண்ணிக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் வந்து மாதாவை வழிபட்டு செல்கின்றனர்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் "பசிலிக்கா" என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் இரவு 10.30 மணியளவில் நன்றி அறிவிப்பு வழிபாடும் 11 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    ஆண்டுேதாறும் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையேற்று திருப்பலி நடத்துவது வழக்கம். ஆனால் அவர் இந்த ஆண்டு கலந்து கொள்ள முடியாத காரணத்தால் பேராலய அதிபர் திருப்பலியை நடத்தினார்.

    முன்னதாக பாதிரியார்களின் திருப்பலி ஆயத்த பவனி நடந்தது. பின்னர் 11.30 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி ஆங்கில புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மன்றாட்டுகள் நடந்தது.

    புத்தாண்டையொட்டி பேராலயம் அருகில் தியான மண்டபம் செல்லும் சாலை, விண்மீன் ஆலயம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் யாரும் வேளாங்கண்ணி கடற்கரையில ்அனுமதிக்கப்படவில்லை.

    நாகப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருப்பு துணியை தலையில் கட்டி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்தும் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த முல்லக்குடியில் பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாய சங்கத்தினர் கருப்பு துணியை தலையில் கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவகுமார் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகேசன், உதயகுமார், சேகர், காசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    பொறையாறு அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இந்த குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காட்டுச்சேரி கிராமத்தில் பூசை குளம் என அழைக்கப்படும் பொதுக்குளம் உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் பூஜை செய்வதற்கும் குளிப்பதற்கும், கால்நடை குளிப்பாட்டவும் இக்குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். நேற்று காலை இந்த குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த குளத்தில் தண்ணீர் குடித்த ஆடு ஒன்றும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குளத்து நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களையும் குளத்து நீரையும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். குளத்தில் மீன்கள் செத்து மிதக்க என்ன காரணம்? மர்ம நபர்கள் குளத்தில் விஷம் கலந்தார்களா? என பொறையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே கீழ்நெடுங்காட்டை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் அறிவானந்தம் (வயது 27). வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை காரைக்காலில் சில வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    காரைக்கால் மேற்கு புறவழிச்சாலையில் சென்றபோது எதிரே வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அறிவானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேன் டிரைவர் கீழகாசாகுடியை சேர்ந்த அமிர்தாஸ் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக நாகையில் வெயில் அடித்தது. பின்னர் கடந்த 15-ந் தேதி முதல் 3 நாட்கள் மீண்டும் மழை பெய்தது. பின்னர் வெயிலும், கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் நாகையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நாகை, செல்லூர், பாலையூர், ஐவநல்லூர், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கடைமடை விவசாய சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், தொடர் புயல்கள் காரணமாக நாகை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்தன. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடியாத நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நாகை, செல்லூர், பாலையூர், ஐவநல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளது.

    பருவம் தவறி டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து பெய்துவரும் தொடர் மழையால், பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கதிர்கள் சாய்ந்து, நெல்மணிகள் பதர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளோம் என்றார்.

    செல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி ராயப்பன்:- நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். புயலால் அழிந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தது விவசாயிகளுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் பாதிப்புகளை முறையாக கணக்கெடுக்கவில்லை. தை பொங்கல் அன்று புத்தரசியில் பொங்கலிட்டு, கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகளுக்கு நெற்பயிர்கள் சாய்ந்தது பெரும் ஏமாற்றத்தையும், இழப்பையும், ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
    கொள்ளிடம் அருகே கார் மரத்தில் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலத்தில் இருந்து திருக்கடையூருக்கு சாமி கும்பிட வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
    கொள்ளிடம்:

    சேலம் ரெயிலடி போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் கணேசன். (வயது 61). இவருடைய மனைவி சுலோச்சனா, மகன் சுரேஷ், உறவினர் துளசிராமன். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூருக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரை கணேசனின் மகன் சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 6 மணி அளவில் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையி்ல் கொள்ளிடம் மதகடி புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் காரில் வந்த கணேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த சுலோச்சனா, சுரேஷ், துளசிராமன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×