என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் நெருங்கி வருவதால் கடைசி நேர பணப்பட்டுவாடாவை தடுக்க ஒவ்வொரு வாகனமாக அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் ஆழியூர் பிரிவு சாலையில் பறக்கும் படை அதிகாரி ரேவதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் உள்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.

    அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.70 ஆயிரத்து 839 கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், திருவாரூர் மாவட்டம் பொன்னேரி அருகே இளவரசநல்லூரை சேர்ந்த ஐயாநாதன் என்பதும், தனியார் நிதி நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரத்து 839-ஐ பறிமுதல் செய்து நாகை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று துணை தாசில்தார் மாதவனிடம் ஒப்படைத்தனர்.

    அதேபோல திட்டச்சேரி அருகே வவ்வாடியில் பறக்கும் படை அதிகாரி தெய்வகுமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செந்தில் தலைமையில் ப.கொந்தகை பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை மறித்து சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. மொபட்டில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்து 500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் நாகை தாசில்தார் முருகுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நாகையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் சேமிக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி நாகையில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயிலில் 1,000 டன் சன்னரக நெல் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நாகை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ெரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி, மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இன்று கடலில் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பத்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    வயலில் உள்ள பனை மரத்தை வெட்டி கொண்டிருந்த தொழிலாளி மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது55). இவர் மரம் வெட்டி உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரது வயலில் உள்ள பனை மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென அதே பனைமரம் அன்பழகன் மீது விழுந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அன்பழகன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேட்ஜ் அணிந்து சிபிசிஎல் ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திட்டச்சேரி:

    நாகையை அடுத்த பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தால் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை உத்தரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூர்வமாக பணி வழங்க கோரியும் சி.பி.சி.எல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சி.பி.சி.எல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு ‘பேட்ஜ்’ அணிந்து சி.பி.சி.எல் ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
    கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்ன என்று தெரியாமல் கவலை அடைந்த அவரது உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கதறி அழுதனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கல்லார் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் கவிச்செல்வன் (வயது30). மீனவர். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில், கவிசெல்வனுக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம், மணிவண்ணன் ஆகிய 3 பேரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இவர்கள் சுமார் 2 நாட்டிக்கல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, அலை சீற்றம் காரணமாக படகில் இருந்து கவிச்செல்வன், கடலில் தவறி விழுந்தார். சிறிது தூரம் சென்றவுடன் படகின் பின்னால் அமர்ந்திருந்த கவிச்செல்வனை காணாததை அறிந்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து கடலில் நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த தகவலை கரைப் பகுதிக்கு வந்து கல்லார் மீனவ கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள், மீட்பு கவசங்களுடன் மாயமான மீனவர் கவிச்செல்வனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கல்லார் கடற்கரையில் மீனவர் கவிசெல்வனின் உறவினர்கள் கதறி அழுத போது எடுத்த படம்.
    இதனிடையே கடலில் தவறி விழுந்த கவிசெல்வனின் கதி என்ன என்று தெரியாமல் கவலை அடைந்த அவரது உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கதறி அழுதனர். மாயமான மீனவர் கவிச்செல்வனுக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நாகை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பப்ளிக் ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது54), ரவி (44) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    நாகை சட்டையப்பர் வீதி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு உட்பட்ட 27,28,30 ஆகிய வார்டு பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் அடிபம்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனை அந்த பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அடிபம்பில் இருந்து குடிநீருடன், கருப்பு நிறத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    நாகை சட்டையப்பர் வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. சில நேரங்களில் குழாயிலிருந்து குடத்தில் பிடிக்கும் தண்ணீரில் சோப்பு நுரை போல பொங்கி வருகிறது. இதனை குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் அந்த நீரில் மறுநாளே புழுக்கள் உருவாகிறது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். வசதிபடைத்தவர்கள் குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏழை மக்கள் வேறு வழி இன்றி இந்த கழிவுநீர் கலந்த குடிநீரையை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இந்த குடிநீரை குடித்தால் காலரா போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. எனவே நாகை நகராட்சிக்குட்பட்ட 27, 28, 30 ஆகிய வார்டு பகுதிகளில் தொற்று நோய் பரவுவதற்கு முன்பாகவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து. சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மீனவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பரும் படுகாயம் அடைந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருடைய மகன் சந்துரு (வயது18). அதே ஊரை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன் (21). இருவரும் மீனவர்கள். நண்பர்களாக இவர்கள் 2 பேரும் வெள்ளப்பள்ளத்தில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சந்துரு ஓட்டி சென்றார். அப்போது வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி எடை மேடு அருகே சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சந்துரு, கலைச்செல்வன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கலைச்செல்வன் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போர்வையால் கழுத்தை இறுக்கி வாலிபரை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள செருநல்லூர் மேலத்தெரு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் வந்தது.

    போலீசாரின் விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் கீழ்வேளூர் அருகே உள்ள காக்கழனி காலனி தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 22) என்பது தெரியவந்தது.

    அய்யப்பன் தூக்கில் தொங்கியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

    செருநல்லூரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி(34) மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி (26) ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு வைத்து வந்துள்ளதாக தெரிகிறது.

    இதை அய்யப்பன் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் இந்த கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு மதுகுடித்து விட்டு ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் தகராறில் ஈடு்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த தகராறு உச்சக்கட்டம் அடைந்த நிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போர்வையால் அய்யப்பனின் கழுத்தை இறுக்கியுள்ளனர்.

    இதில் மயங்கிய நிலையில் இருந்த அய்யப்பனை வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூக்கு மாட்டி தொங்க விட்டுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜிபாணி, கவுதமி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் அருகே வி‌ஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகையன் ராணி தம்பதியினர்.இவர்களுடைய மகன் அருண் பாண்டி (வயது 22), பெயிண்டர்.

    அலிவலம் பகுதியை சேர்ந்த செல்வம் மகள் கார் குலஸ்தேவி (21) காதல் திருமணம் செய்து கொண்டார்.

    அடிக்கடி இருவருக்கு தகராறு ஏற்பட்டதால் கார் குலஸ்தேவி அவருடைய தகப்பனார் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் சென்றுவிட்டார்.

    அதனால் மனமுடைந்த அருண்பாண்டி வீட்டில் வி‌ஷம் குடித்தார்.அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கீவளூர் போலீசில் ராணி வயது (50) புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழையூர் அருகே கல்லூரிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி பப்புசெட்டி தெருவை சேர்ந்த பாப்பையன் மகள் மாரியம்மாள் (வயது 20). இவர் நாகையில் உள்ள பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் மூன்றாம் ஆண்டு பட்டம் படிப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு செல்கிறேன் என கூறி வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பின் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது தாய் சின்ன பொண்ணு கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் என் மகள் மாரியம்மாளை அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (22) என்பவர் கடத்தி சென்றுவிட்டார். அவரிடமிருந்து என் மகளை மீட்டு தாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×