என் மலர்
செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரி ரேவதி, துணை தாசில்தார் மாதவனிடம் ஒப்படைத்தபோது எடுத்த படம்.
நாகையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல்
நாகையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் கடைசி நேர பணப்பட்டுவாடாவை தடுக்க ஒவ்வொரு வாகனமாக அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் ஆழியூர் பிரிவு சாலையில் பறக்கும் படை அதிகாரி ரேவதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் உள்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.70 ஆயிரத்து 839 கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், திருவாரூர் மாவட்டம் பொன்னேரி அருகே இளவரசநல்லூரை சேர்ந்த ஐயாநாதன் என்பதும், தனியார் நிதி நிறுவன ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரத்து 839-ஐ பறிமுதல் செய்து நாகை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று துணை தாசில்தார் மாதவனிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல திட்டச்சேரி அருகே வவ்வாடியில் பறக்கும் படை அதிகாரி தெய்வகுமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செந்தில் தலைமையில் ப.கொந்தகை பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை மறித்து சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. மொபட்டில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்து 500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் நாகை தாசில்தார் முருகுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story






