என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    இறுதி ஊர்வலத்துக்காக பட்டாசு வெடித்தபோது நாகையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து நாசமானது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த தையல் நாயகி (65) நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது, மருந்து கொத்தளத் தெரு பிரதான சாலையில் பட்டாசு வெடித்தனர். இதில் பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி சாலையோரம் இருந்த பாஸ்கரன் என்பவரின் கூரை வீட்டில் விழுந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், பனங்குடி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன், காரைக்கால் ஓ.என்.ஜி.சி. ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

    ஆனாலும் அப்பகுதியில் இருந்து 20 கூரை வீடுகள் மற்றும் வீட்டிலிருந்த பணம், நகை உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள், ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

    தீவிபத்தில் எரிந்த ஆவணங்களை சோகத்துடன் காண்பிக்கும் பெண்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தையல் நாயகியின் சடலத்தை மயானத்துக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா வந்து நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் சடலம் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் பாஸ்கர், சிவகுமார், நீலா, மதுரை வீரன், மகாலிங்கம், சவுந்தரராஜன், மனோகரன் உள்பட 20 பேர் நாகை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதில் ஊர்வலத்தில் வெடி வெடித்தவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழையூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் தீனாஈஸ்வரன் (வயது 20). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திருப்பூண்டி அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள், தீனாஈஸ்வரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தீனாஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தது திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் வீரபாண்டி (24) என்பது தெரியவந்தது.இந்த விபத்தில் வீரபாண்டிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    நாகையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மீனவ கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்தநிலையில் ஆரிய நாட்டு தெருவில் வசித்த மீனவர்கள் நகரில் பல்வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இதனால் மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும், ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்கு சேகரிப்பதில் தி.மு.க,, அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

    அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று மகாலட்சுமி நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது29), நகுலன் (27), குகன் (30), நித்தியன் (36), நாகேந்திரன் (30) ஆகியோரை ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் நாகை காடம்பாடி, ஏழைப்பிள்ளையார் கோவில் ஆகிய பகுதியில் வழி மறித்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். 

    அவர்களை பார்க்க வந்த மகாலட்சுமி நகர் மீனவர்களை நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரிவாளுடன் வந்து வெட்ட முயன்றனர்.

    தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அதிவிரைவு படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவ கிராமத்தில் இரு தரப்பினர் இடையே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகின.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    நாகப்பட்டினத்தில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    நாகப்பட்டினம் - 71.99%
    கீழ்வேளூர் - 80.10%
    வேதாரண்யம் - 80.60%

    நாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றன.
    நாகூர்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றன.

    பகலில் சுட்டெரிக்கும் இந்த வெயில் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டுசெல்கிறது.

    உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், நுங்கு, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். நாகூரில் நுங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து நுங்கு வியாபாரி கூறியதாவது:-

    வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் நுங்கை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு நுங்கு சுளை ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு பனை மரங்களில் நொங்கு காய்ப்பது இல்லை.

    மரங்களில் ஏறி நுங்கு வெட்டும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த ஆண்டு ஒரு நுங்கு சுளை ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி:

    சிலுவையில அறையப்பட்டு உயிரை விட்ட ஏசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ‘ஈஸ்டர்’ பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நள்ளிரவில் ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன. பின்னர் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.

    கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஜெபம் செய்தனர். இரவு 11.40 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கியபடி ஏசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
    ஈஸ்டர் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் ஈஸ்டர் திருநாளை கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் திரண்டிருந்தனர்.

    ஈஸ்டர் திருநாளையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. மாலை 6.45 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் தேர் பவனியும் நடைபெற்றது.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர், புதுப்பத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சக்கரபாணி (வயது65) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரபாணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல காவாலக்குடி அம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற ஆந்தக்குடி அறுபதாம் கட்டளை பகுதியை சேர்ந்த பழனிவேல் (58) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வாஞ்சூரில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    விசாரணையில் அவர், செல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் மருத கண்ணன் (வயது 38) என்பதும், அவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நாகை பகுதி மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் மொத்தமாக பைகளில் வாங்கி சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வரும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே-2-ந்தேதியும் மதுக்கடைகள், மற்றும் அதனுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் முறைகேடான மது விற்பனையை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை பொறுத்தவரை மொத்தம் 102 மதுக்கடைகள் உள்ளன. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து 3 நாட்களுக்கு சேர்த்து குடிப்பதற்காக சிலர் பைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் சில கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் வேகமாக விற்றதால், வேறு வழியில்லாமல் சிலர் விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். 3 நாட்கள் விடுமுறை என்பதால் நாகையில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    தேர்தலை முன்னிட்டு அதிக அளவு மது பாட்டில்கள் முன்கூட்டியே விற்பனையாகி விட்டதால் விரும்பிய மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என்று மதுப்பிரியர்கள் கூறினர்.
    தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர்

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரமாக கடந்த 28-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியை யொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி ஆலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் ஆகியோர் சிலுவை ஆராதணை செய்தனர்.

    ஆண்டு தோறும் புனித வெள்ளி அன்று ஏசு சிலையின் பாதத்தை பங்கு தந்தைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து கலையரங்கத்தில் இருந்து ஏசு சிலை ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. அபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையை ஆராதணை செய்தனர். பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக மேல்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்லினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 137 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் நுண் பார்வையாளர்கள் பணியாற்றிட குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் (பொது) பட்டேல், திலீப் பந்தர்பட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் பிரவீன் நாயர் பேசும் போது கூறியதாவது:-

    நாகை. மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,861 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறிப்பட்டுள்ளது.

    இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவை கண்காணித்திட மத்திய அரசு பணியில் உள்ள 137 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளிலிருந்து 72 மணி நேரத்திற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்்சைகள் ஆகியோர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை.தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டுஅறை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1035 அழைப்புகளும், தேர்தல் தொடர்பான புகார்களாக 27 அழைப்புகளும் என மொத்தம் 1,062 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டுஅறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 272 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 487 மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

    அதேபோல் இதுவரை ரூ.28 லட்சத்து 5 ஆயிரத்து 715 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்து 715 மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×