என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் குலுக்கல் முறையில் தேர்வு நடந்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் குலுக்கல் முறையில் தேர்வு நடந்த போது எடுத்த படம்.

    பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 137 நுண் பார்வையாளர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்

    நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 137 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் நுண் பார்வையாளர்கள் பணியாற்றிட குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் (பொது) பட்டேல், திலீப் பந்தர்பட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் பிரவீன் நாயர் பேசும் போது கூறியதாவது:-

    நாகை. மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,861 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறிப்பட்டுள்ளது.

    இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவை கண்காணித்திட மத்திய அரசு பணியில் உள்ள 137 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளிலிருந்து 72 மணி நேரத்திற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்்சைகள் ஆகியோர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை.தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டுஅறை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1035 அழைப்புகளும், தேர்தல் தொடர்பான புகார்களாக 27 அழைப்புகளும் என மொத்தம் 1,062 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டுஅறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 272 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 487 மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

    அதேபோல் இதுவரை ரூ.28 லட்சத்து 5 ஆயிரத்து 715 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்து 715 மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×