என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே மதுஅருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மணக்காடு கிராமம் பிடாரி கட்டளை தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் காளிதாஸ் (வயது 29). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தானே ஓட்டி தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. மனைவி தேன்மொழி. இவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் காளிதாஸ் குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் மறுத்ததால் பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு போய் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    இந்த நிலையில் மனைவி தேன்மொழி பக்கத்து வீட்டிற்கு சென்றபோது காளிதாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    நாகையில் ஓட்டல் தொழிலாளிகளிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் தியேட்டருக்கு முன்பு உள்ள ஓட்டலுக்கு அதே ஊரை சேர்ந்த அருண்குமார் (வயது24), சிவா(23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து ஓட்டலில் 2 தோசை ஆர்டர் செய்தார்கள்.

    சப்ளையர்கள் வேறு ஒரு நபருக்கு தோசை வைத்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார், சிவா ஆகியோர் வாக்குவாதம் செய்து சப்ளையர்கள் மோகன், பாஸ்கர் ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த 2 பேரும் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அருண்குமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    நியாயவிலை கடைகளுக்கு புழுங்கல் அரிசி 3 ரகமாக வழங்காமல், ஒரே ரகமாக வழங்க வேண்டும். திருக்குவளை வட்டம், வடக்கு பனையூர் மற்றும் திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். கொரோனா கால பலன்கள் அனைத்தையும் சீர் செய்து வழங்க வேண்டும். சிக்கல், நரிமணம், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசாணை நிலை எண் 25-ன் படி தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    கொள்ளிடத்தில் குடும்ப பிரச்சினையால் பழக்கடை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் பிரேம்குமார்(வயது41).இவர் கொள்ளிடம் ரெயில்வே ரோட்டில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த இவர் நேற்று இரவு வீட்டிற்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரேம்குமார் மனைவி மனோரஞ்சனி (35) கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பிரேம்குமார் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் புல்வெளி கிராம பகுதியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டிலுள்ள தனிப்படையினர் ஆகியோர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் கலவை மண் இருந்ததும் அந்த கலவை மண்ணை ஏற்றி வருவதற்கு எவ்வித அனுமதியும் ஆவணம் இல்லாததால் போலீசார் டிராக்டர் பறிமுதல் செய்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த கத்திரிபுலம் பகுதியை சேர்ந்த கார்த்தி வயது 20 என்பவரையும் டிராக்டருக்கு சொந்தக் காரரான தேத்தாகுடி வடக்கு மதன்மோகன் (43) என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே வாழ்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதிமோகன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 21). தொழிலாளி. இவருக்கும் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபாகரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிந்த பெற்றோர் இது குறித்து அவளிடம் கேட்டனர். அப்போது பிரபாகரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் சிறுமி கூறினார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே தம்பி வீட்டில் இருந்து காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காமல் தபாலில் அழைப்பிதழ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது52). ஜெயலட்சுமியின் தம்பி குழந்தைக்கு காதணி விழா நடைபெற்றது. இதற்காக ஜெயலட்சுமி தம்பி அடித்த அழைப்பிதழில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் பெயர் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அழைப்பிதழை ஜெயலட்சுமிக்கு நேரில் வழங்காமல் தபாலில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஜெயலட்சுமி தனது வீட்டின் பின்புறம் உள்ள முந்திரி தோப்புக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாய்மேடு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    நாகூரில் சரக்கு ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார். இதனால் ரெயில் முன்பு அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    நாகூர்:

    நாகூர் வெட்டாறு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சரக்கு ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் நாகூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் கமல்ராஜ்(வயது32) என்றும் இவர் ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கமல்ராஜ் சரக்கு ரெயிலில் அடிபட்டு இறந்ததை அறிந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து சரக்குரெயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் அங்கு சென்று மறிலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து நாகை ரயில்வே போலீசாருக்கு நாகூர் போலீசார் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த நாகை ரெயில்வே போலீசார் கமல்ராஜ் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நாகூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்து உள்ளது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்தவுடன் கடந்த பிப்ரவரி மாதம் உப்பு பாத்திகள் சரிசெய்யப்பட்டு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு டன் உப்பு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரை பணியில் ஈடுபடுகின்றனர்.

    ஒரே நேரத்தில் அதிக அளவு உற்பத்தி பணிகள் நடைபெறுவதால் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து வேலை கிடைப்பதால் இந்த தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேளாங்கண்ணியில், லாட்ஜில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ். இவரது மகன் ஜார்ஜ் லூர்துராஜ்(வயது 24). இவர், கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் தங்கி உள்ளார்.

    நேற்று காலையில் விடுதியை காலி செய்வதற்காக பணியாளர்கள் ஜார்ஜ் லூர்துராஜ் தங்கி இருந்த அறையின் கதவை தட்டினர். அப்போது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அறையில் உள்ள கழிவறையில் ஜார்ஜ் லூர்துராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ் லூர்துராஜ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருணாநிதி பெற்ற வெற்றிகளை தாண்டி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரலாறு படைப்பார் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை வந்த நாஞ்சில் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. கருணாநிதி பெற்ற வெற்றிகளை தாண்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரலாறு படைப்பார்.

    தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்படாமல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை சரியான முறையில் பங்கீடு செய்து கொடுத்து ஸ்டாலின் தனது ஆளுமை திறனை நிருபித்துள்ளார்.

    தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு கிராமசபை கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டு எல்லா தொகுதி மக்களையும் சந்தித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வழிவகை செய்தது பாராட்டத்தக்கது. எனவே தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

    அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தேர்தல் நேரத்திற்கான கூட்டணி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நான் இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என கூறினார். ஆனால் அவரது பெயரை சொல்லி கட்சியை நடத்துபவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் அய்யாபிள்ளை, தி.மு.க தலைமை கழக பேச்சாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    நாகையில் ஆதரவற்றோர்களுக்காக குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகரத்திற்குட்பட்ட தேசிய மேல்நிலைப்பள்ளி, சவுந்தரராஜபெருமாள் கோவில் தென் மடவிளாகம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அன்பு சுவர் என்ற பெயரில் பொதுமக்களால் கொடுக்கப்படும் பழைய மற்றும் புதிய துணிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அன்பு சுவரில் வைக்கப்படும் துணிகளை ஆதரவற்றோர்கள் மற்றும் யாசகம் தேடுபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    இந்தநிலையில் நாகை வெளிப்பாளையம் பகுதிகளில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் சமூக ஆர்வலர் ஒருவர் குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார்.

    இந்த குளிர்சாதன பெட்டியில் பொதுமக்கள் தங்களால் முடிந்த உணவுகளை வைத்து விட்டு செல்கின்றனர். அவர்கள் வைக்கும் உணவு மற்றும் பொருட்களை ஆதரவற்றோர்கள் எடுத்து சாப்பிட்டு பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த குளிர்சாதன பெட்டி ஆதரவற்றோர்களுக்கு உதவும் வகையில் வைக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×