என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்த நிலையில் நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே இன்று ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பற்றிய விவரம் வருமாறு:-
நாகை அடுத்த தெத்தி பகுதியில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா சுற்றி சுற்றி பறந்துள்ளது. சுமார் ½ மணி நேரம் கேமரா பறந்து சென்றது.
இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் அங்கு குவிந்த கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரவின் பிநாயரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய 3 மாணவர்கள் விடுமுறைக்காக நாகைக்கு வந்ததும், அவர்கள் கல்லூரி அருகே உள்ள கிராமத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டதில் அந்த கேமரா வாக்கு எண்ணும் மையம் மேல் பறந்ததும் தெரிவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் மாணவர்கள் 3 பேரையும் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் கழுகுபார்வை காட்சிகளை பதிவு செய்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியை. வசந்தா. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது இசைக்கலைஞர்கள், குடிசைவாழ்மக்கள், நாடோடிகள், நரிக்குறவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு என சுமார் ரூ.50 லட்சம் ரூபாய் செலவில் உணவு, மாஸ்க், உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
சமூக அக்கறையோடு கணவர் சித்திரவேல் உதவியோடு தற்போது 10 லட்சம் முகக்கவசங்கள் வாங்கி அதனை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கி வருகிறார்.
ஆசிரியை வசந்தா மற்றும் சித்திரவேலுவின் சமூகப்பணியை பொதுமக்கள் பாராட்டினர்.
இவர்களின் சமூக பணியை பாராட்டி இதுவரை 50-க்கும் மேற்பட்ட விருதுகளை சமூகநல அமைப்புகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு ஊசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் டோஸ் அளவிலான தடுப்பு மருந்துகள் பயனாளிகளுக்கு போட முடியாதபடி சுகாதாரத் துறையினர் சென்னைக்கு அதிக அளவில் தேவை என்று கூறி அனைத்து கிராம மற்றும் நகர்புற ஆஸ்பத்திரிகளில் உள்ள தடுப்பு மருந்துகளை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பயனாளிகளுக்கு போதுமான அளவில் தடுப்பூசி போடுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று பயனாளிகள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள சென்றால் ஊசிமருந்து கைவசம் இல்லை என்றும், இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் வந்து விடும் என்றும் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். தற்போது இரண்டாவது முறையாக தடுப்பு ஊசிமட்டுமே இப்போது உள்ளது என்றும் கூறுகின்றனர்.
இது தவிர பணியில் உள்ள சுகாதாரத்துறை பிரிவைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களில் பெரும்பாலோனோர் சென்னை உட்பட பெரு நகரங்களுக்கு தேவை என்பதால் அழைத்து செல்லப்பட்டு விட்ட நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் தடுப்பு ஊசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி இல்லை என மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வர வைக்கப்பட்டு 200 நபர்களுக்கு போடப்பட்டது. பின்பு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி டோக்கன் வழங்கி நாளை வாருங்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.






