search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளில் பிடித்த தீயை, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி.
    X
    வீடுகளில் பிடித்த தீயை, தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி.

    நாகையில் சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 20 கூரை வீடுகள் நாசம்

    இறுதி ஊர்வலத்துக்காக பட்டாசு வெடித்தபோது நாகையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து நாசமானது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த தையல் நாயகி (65) நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது, மருந்து கொத்தளத் தெரு பிரதான சாலையில் பட்டாசு வெடித்தனர். இதில் பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி சாலையோரம் இருந்த பாஸ்கரன் என்பவரின் கூரை வீட்டில் விழுந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், பனங்குடி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன், காரைக்கால் ஓ.என்.ஜி.சி. ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

    ஆனாலும் அப்பகுதியில் இருந்து 20 கூரை வீடுகள் மற்றும் வீட்டிலிருந்த பணம், நகை உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள், ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

    தீவிபத்தில் எரிந்த ஆவணங்களை சோகத்துடன் காண்பிக்கும் பெண்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தையல் நாயகியின் சடலத்தை மயானத்துக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா வந்து நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் சடலம் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் பாஸ்கர், சிவகுமார், நீலா, மதுரை வீரன், மகாலிங்கம், சவுந்தரராஜன், மனோகரன் உள்பட 20 பேர் நாகை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதில் ஊர்வலத்தில் வெடி வெடித்தவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×