search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்த போது எடுத்த படம்.
    X
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்த போது எடுத்த படம்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி:

    சிலுவையில அறையப்பட்டு உயிரை விட்ட ஏசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ‘ஈஸ்டர்’ பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நள்ளிரவில் ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன. பின்னர் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.

    கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஜெபம் செய்தனர். இரவு 11.40 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கியபடி ஏசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
    ஈஸ்டர் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் ஈஸ்டர் திருநாளை கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் திரண்டிருந்தனர்.

    ஈஸ்டர் திருநாளையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. மாலை 6.45 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் தேர் பவனியும் நடைபெற்றது.
    Next Story
    ×