என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.

    இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

    மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வா தாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
    • 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கோழிக்கடையில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே சென்று அங்குள்ள கல்லாப்பெட்டியை எடுக்க முயன்றுள்ளார்.

    இதை வீட்டில் இருந்த படி கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களை கடையில் போய் பார்க்க கூறியுள்ளார்.

    அவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே நின்றது தெரிய வந்தது.

    உடனே பொதுமக்கள் அவரை பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து, கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவருடன் 5 பேர் வந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.
    • டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்தார் முருகன் என கந்தபுராணம் கூறுகிறது.

    அதன்படி வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயத்தின் கந்த சஷ்டி விழா 13-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.

    இதனையொட்டி, நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    • தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    நாகை ஒன்றியம் பாலையூர் பகுதியில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ நேரடி ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி, விற்குடி, வடகரை, கீழப்பூதனூர் ஆகிய பகுதிகளிலும் வயல்களில் இறங்கி பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

    மழை பாதிப்புகள் குறித்து ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது, ஏற்கெனவே, காவிரி நீர் வராமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது மழை வெள்ளத்தால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    வறட்சி என்றாலும் வெள்ளம் என்றாலும் அதிக பாதிப்பை சந்திக்கும் நாகையின் மீது அரசு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன், இளஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது.
    • இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நாகப்பட்டினம்;-

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவரது மனைவி கொடியரசி (வயது 28).

    இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் மழை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற நிலையில் வெள்ள அபாயத்திலிருந்து பொது மக்களை காப்பாற்ற நாகை மாவட்ட காவல்துறையின் சார்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஅறிவுறுத்தலின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள காவல்துறையினரைக் கொண்டு பேரிடர் மீட்புக் குழு அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

    மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.

    அவசர உதவிக்கு உங்கள் நாகை போலீஸ் சூப்பிரண்ட்யிடம் பேசுங்கள் என 84281 03090 என்ற எண்ணையும் வெளியிட்டார். 

    • வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது.
    • மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உப்பள உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று 14 தேதி 11 செ.மீ மி.மீட்டா் மழையும், இன்று காலை 8 மணி வரை 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன் பள்ளி கோடியக்காடு கடிநெல் வயல் ஆகிய பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி கடந்த வாரம் வரை நடைபெற்ற உப்பு உற்பத்தி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இனி மழை காலம் முடிந்து பிப்ரவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்ற 10 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளனர். தொடர்ந்து விட்டு விட்டுமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தி ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டு உள்ளது.

    • நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் கலெக்டர், எம்,எல்.ஏ திடீர் ஆய்வு செய்தனர்.
    • பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    குறிப்பாக எக்ஸ்ரே பிரிவு மற்றும் ஜெனரேட்டர் வசதி குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், குறைகளை விரைந்து சரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.
    • விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு (வயது 30).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் மெடிக்கல் காலேஜ் ரோடு அருகே செட்டிச்சேரி என்ற இடத்தில் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.

    இந்த விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • 17-ம் தேதி அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர் முடித்ததாக கந்தபுராண வரலாற்றில் கூறும் சிங்கார வேலவர் கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .

    பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கண்ணி சக்தி வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்த புராண வரலாறு.

    நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் திருமஞ்சனத்தில் எழுந்தருளி அதனை தொடர்ந்து வீதி உலா காட்சி நடைபெற்றது முன்னதாக பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகிற 17-ம் தேதி இரவு 8 மணிக்கு பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அப்போது சிங்காரவேலருக்கு வேர்வை சிந்தும் காட்சி உலகில் வேறு எங்கும் நடைபெறாத அபூர்வ காட்சி ஆகும் மறுநாள் சூரசம்கார விழா எதிர்வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.
    • விற்பனையாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் அரசு மதுபான கடை உள்ளது.

    அதில் பாலதண்டயுதம் (வயது 50) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி அன்று கடினவயல் நடுக்காட்டைச் சேர்ந்த கோபால் (45) என்பவா் டாஸ்மாக் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.

    இது குறித்து விற்பனை யாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவம் நடந்தது.
    • வரும் 18-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

    இந்த கோவிலின்உட்பிர காரத்தில் வள்ளி, தேவயானை சமேத ஆறுமுகக்கடவுள் அமைந்துள்ளது.

    இந்த ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நேற்று 13.11.2023 மாலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுப்பிர மணியசுவாமி கேடயத்தில் நான்கு வீதிகளில் வீதியுலா காட்சி நடந்தது.

    விழா நாட்களில் மயில் வாகனத்தில் எழுந்தருளி தினசரி வீதியுலா நடை பெறும்.

    வரும் 18.11.2023 அன்று இரவு வேதாரண்யம் மேலவீதியில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ×