என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாகையில் நடந்தது.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியல் கல்லூரி கூட்டரங்கில் நடைப்பெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலமையில் நடைப்பெற்ற விழாவில் கூட்டுறவு வார உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல், கீழையூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2870 பயணாளி களுக்கு 12 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

    • நேற்று வேல் நெடுங்கன்னியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சிக்கலில் வேல்வாங்கி திருசெந்தூரில் சம்ஹாரம் செய்தார் முருகன் என்று கந்தபுராண த்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வேல்நெடுங்கன்னியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியதை தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் சூரபத்மன் தலையை , வெட்ட வெட்ட முளைக்கும் தலைகளை சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் தொடர்ந்து முருகப்பெரு மானுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    • கடந்த 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் சம்பந்த விநாயகர், சிவசித்தி விநாயகர் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 17-ம் தேதி காலை கணபதி,நவகிரக,லட்சுமி ஹோமமும்,மாலை அங்குரார்பணம், கும்பாலங்காரம்,பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது. 18-ம் தேதி காலை யாகபூஜை, கன்னியா பூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. இன்று யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    இதில் வேளாக்குறிச்சி 18 - வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாண்டித்துரை (வயது 28) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில 570 மது பாட்டில்கள் மற்றும் 140 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதே போல புதிய பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவன்காளை என்பவரது மனைவி மகேஷ்வரி (40), விஜயகுமார் என்பவரது மனைவி திவ்யா (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 300 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாகையில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று காலை நடைபெற்றது.
    • முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது உலகிலேயே எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் பிரசித்திப் பெற்ற சிங்கார வேலவர் கோவில் அமைந்துள்ளது. சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக வரலாறு கூறுகிறது. வேல் வாங்கிய முருகனின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும் அற்புதம் உலகிலேயே எங்கும் இல்லாத ஒன்றாகும். இவ்வாறு பல்வேறு சிறப்பு மிக்க கந்த சஷ்டி விழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சிங்காரவேலவர் பவள ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் என பல்வேறு வகையான வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. தெய்வானை, வள்ளி சமேத சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு தேரிலிருந்து இறங்கி சிங்காரவேலவர் கோவிலுக்குள் சென்று, அன்னை வேல்நெடுங் கண்ணியை வணங்கினார்.

    பின்னர், சூரனை சம்ஹாரம் செய்வதற்காக சக்திவேலை வாங்கினார். அப்போது வீர ஆவேசத்தில் சிங்கார வேலவரின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது உலகிலேயே எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும். இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு மனமுருகி முருகனை வழிப்பட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 12 மணி யளவில் சிங்கார வேலவருக்கு மஹாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் , 30 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
    • சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறையில் உள்ள சுகாதாரக்கேடு தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சமையல் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது.

    அந்த வகையில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமையல் கூடத்தை, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா ? உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன்சுத்தத்தை பேணவும், தேவையான அளவு சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
    • மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது .இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    அதேபோல் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன்,இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வருகிற 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
    • கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், சிவன ருட்செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை பணியா ளர்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலி பாட்டில்கள் சேகரிக்க நிர்பந்திக்க கூடாது. காலி பாட்டில்களை சேகரிக்க நிர்பந்திக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து வரும் 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பறவைகள் சரணாலயத்தில் 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
    • ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலாபறவைகள் வந்துகுவிந்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க கோடியக்கரைக்கு 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்த நிலையில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்துகுவிந்துள்ளது.

    ரஷ்யா, ஈராக் நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை.

    சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம்.உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளது.

    பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் பிளம்மிங்கோ (பூநாரை,) பறவைகள் வந்து குவிந்துள்ளன இதற்கு காரணம் அதற்கு ஏற்ற உணவான பிளாங்டன் லார்வா அதிக அளவில் இந்த சரணயத்தில் கிடைக்கின்றன. மேலும் பறவைகள் வரத்து ஏற்ற சூழல் நிலவுவதால் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன வழக்கத்துக்கு மாறாக இலங்கையில் இருந்து பூநாரை சிறு குஞ்சுகளும் வந்துள்ளன.

    பறவைகளின் நூழைவாயிலாக கருதப்படும் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.
    • 9 துறைமுகங்களில் 2-k; எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    மத்திய மேற்கு வங்கக் கடலில், விசாகப்பட்டனத்திற்கு தென்கிழக்கே சுமார் 220 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.

    எனவே, தொலை தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்பொழுது 9 துறைமுகங்களில் தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது.
    • வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது.

    இக்கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி இன்றளவும் காணப்படுகிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதிகளில் சென்று தேர்நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பலபகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் பகுதிகளை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்க வைக்க ஏதுவாக, மாவட்டத்தில் மண்டல அளவிலான குழுக்கள், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்படும் மக்களை மீட்டு தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

    இதில் ஒரு முகாமில் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் மக்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு துணையாக 5000 முதல்நிலை பொறுப்பாளர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் 300 தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 206 மரம் அறுக்கும் இயந்திரம், 4,300 மணல் மூட்டைகள், 40,000 சாக்கு பைகள், 2,115 சவுக்கு மரங்கள், 59 நீர் இறைக்கும் இயந்திரம், 24 நீர் உறிஞ்சும் இயந்திரம், 163 லைப்பாய், 142 லைப் ஜாக்கெட் மற்றும் தேவையான மீட்பு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாத்துறை சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் இதர வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

    மின் பகிர்மான கழகம் சார்பில் 4,500 மின் கம்பம், 100 மின்மாற்றிகள், 120கி.மீ. மின் கம்பிகள் போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல குறுவை நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் நிவாரண கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

    ×