என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு குவிந்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அவமதிக்கப்பட்ட புகைப்படம் முகநூலில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடனடியாக அங்கு சென்று பெரியார் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த மாலைகளை அகற்றி, விபூதி, குங்கும பொட்டு ஆகியவற்றை அழித்து சிலையை சுத்தம் செய்தனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு குவிந்தனர்.

    பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் இட்ட நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
    பொதுமக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் இரட்டை காளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் விடுவதால் தொடர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சீர்காழி நகராட்சியில் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று ஆத்திரமடைந்த இரட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் இரட்டை காளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி வரும் காலங்களில் வடிகாலில் கழிவுநீர் விடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்பேரில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    செம்பனார்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வரும் நபர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌‌ஷமிட்டனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ரவிச்சந்திரன், அமுல்காஸ்ட்ரோ, கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வரும் நபர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌‌ஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறையில் சொத்து பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி சாந்தா (வயது 61). இவர்களது மூத்த மகன் செந்தில்குமார் (42), இவருடைய சகோதரர்கள் சிங்காரவேல் (39), வெற்றிவேல் (36), சரவணன் (32). இவர்களில் செந்தில்குமார் மனைவி சத்யபிரியாவுடன் தனியாக வசித்து வருகிறார். செந்தில்குமாருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்தநிலையில் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த குளியலறை இடிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சத்யபிரியா கணவரின் குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டுள்ளார்.

    அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன், வெற்றிவேல், சிங்காரவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து சத்யப் பிரியாவை அடித்து தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது தாய் சாந்தாவை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக சத்யபிரியா கொடுத்த புகாரின் பேரில் சிங்கார வேல், வெற்றிவேல், சரவணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல சாந்தா கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் செந்தில்குமார், மருமகள் சத்யபிரியா (30) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட மோதலால் ஒரு பெண் மற்றும் அண்ணன் தம்பிகள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொள்ளிடம் பகுதியில் முதல் நாளில் 60 வயதை கடந்த 65 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என மருத்துவ அலுவலர் கூறினார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கொள்ளிடம் வட்டார அளவிலான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொள்ளிடம் பகுதியில் இன்று (அதாவது நேற்று) முதல் 60 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

    முதல் நாளில் 60 வயதை கடந்த 65 பேர் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், புற்றுநோய் ஆகிய இணை நோய்களினால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படும்.

    மருத்துவமனைகளில் நடைபெறும் முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வருபவர்கள் பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை அவசியம் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன் சதீஷ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தரங்கம்பாடி, கருவி, கிடாரங்கொண்டான், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், ஆறுபாதி, உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    பொறையாறு:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகாவில் 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நேற்று பறக்கும் படை தாசில்தார் ராகவன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பொறையாறு, ராஜீவ்புரம், தரங்கம்பாடி, கருவி, கிடாரங்கொண்டான், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், ஆறுபாதி, உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசியல் கட்சியினர் சாலை ஓரங்களில் வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சின்னமேட்டில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று மாசிமக திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் படகு போட்டி நடைபெற்றது.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சின்னமேட்டில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாசிமக திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் படகு போட்டி நடைபெற்றது. இதில் 25 படகுகளும், ஒவ்வொரு படகிற்கும் 3 மீனவர்கள் வீதம் கலந்து கொண்டனர். கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எல்லையில் படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். அந்த படகில் இருப்பவர்களிடம் இருந்து போட்டியில் கலந்து கொள்பவர்கள் கொடியை பெற்று திரும்பி கரைக்கு வரவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை 10 மணிக்கு படகு போட்டி தொடங்கியது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.7 ஆயிரத்து 500-ம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும், 4-வது பரிசு ரூ.4 ஆயிரமும், 5-வது பரிசு ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டன.

    இதனை மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சின்னமேடு ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    சீர்காழி அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட பட்டியல் எழுத்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனூர் பகுதியை சேர்ந்த விவசாயி துரைகண்ணு என்பவர் வயலில் அறுவடை செய்த 172 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தவற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது கொள்முதல் செய்திட மூட்டைக்கு ரூ.40வீதம் 172 மூட்டைக்கு ரூ.6880 பணம் தரவேண்டும் என பட்டியல் எழுத்தர் கேட்டாராம்.

    இதனையடுத்து விவசாயி துரைகண்ணு, நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுலைப்படி ரசாயான பொடி தடவிய ரூ.7 ஆயிரம் பணத்தை கொண்டல் நேரடி நெல்கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் இளங்கோவனிடம் துரைக் கண்ணு கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நந்தகோபால், இன்ஸ் பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள் பிரியா மற்றும் போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் பீச் தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் மகள் கலையழகி(வயது 26). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெருந்தோட்டத்திற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது தாயார் தமிழ்ச்செல்வி, உறவினர் திருமணத்திற்காக வைத்தீஸ்வரன் கோவில் சென்று விட்டார்.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை தமிழ்ச்செல்வி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சியால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். வீட்டில் தனது மகள் கலையழகி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

    அவரது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போதுதான் வீட்டில் தனியாக இருந்த கலையழகியை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவ ப்பிரியா, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, அழகேந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆதவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கலையழகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலையழகியை கொலை செய்தவர்கள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(வயது 57). இவர், தனது காலி மனைக்கு பட்டா வழங்கக்கோரி தரங்கம்பாடி தாசில்தாருக்கு மனு கொடுத்து இருந்தார். அந்த மனுவை விசாரணை செய்த தாசில்தார், மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து மனுவை அனுப்பி இருந்தார்.

    மனு பரிசீலனைக்கு பின்னர் மனோகரனுக்கு காலி மனை பட்டா தயாராக உள்ள நிலையில் அதை பெறுவதற்காக மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு மனோகரன் சென்றுள்ளார்.

    அப்போது உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மலர்விழி, பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பட்டாவை பொறையாறு சிவன் கோவில் வடக்கு வீதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரை கையும், களவுமாக பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை மனோகரனிடம் கொடுத்து அதனை மலர்விழியிடம் கொடுக்குமாறு கூறி மலர்விழி வீட்டுக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்பிரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அடங்கிய 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை பொறையாறில் உள்ள மலர்விழி வீட்டின் அருகில் மறைந்து நின்றனர்.

    போலீசார் கூறியபடி மனோகரன், மலர்விழியிடம் லஞ்ச பணம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்து காலி மனை பட்டாவை பெற்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக மலர்விழியை பிடித்தனர்.

    மேலும் அவரது கைப்பையில் கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் இருந்ததை பறிமுதல் செய்து அவரிடம் இருந்த மேலும் இரண்டு பட்டாக்களையும் கைப்பற்றினர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்விழியை(57) கைது செய்தனர். அவரிடம் காலை 8 மணிக்கு விசாரணையை தொடங்கிய போலீசார் மாலை 4 மணிக்கு விசாரணையை முடித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நாகைக்கு அழைத்து சென்றனர்.

    பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொள்ளிடம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை வைரவனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது32). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பழவனாற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கி மாயமானார்.

    இது குறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி கணேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 1½ மணி நேரம் தேடுதலுக்கு பிறகு கணேசன் உடலை மீட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொள்ளிடம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழியில் டிராக்டர் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பி.எம்.ஆர். தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 60). இதேபோல் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (34) இருவரும் தனித் தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது தமிழிசை மூவர் மணிமண்டபம் எதிரே இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது ஜீவானந்தம் அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
    ×