என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் கியாஸ் விலை உயர்வால் டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் எந்த டீக்கடைக்கு சென்றாலும் குடிக்க தண்ணீர் கேட்டால் தயக்கமின்றி குடிநீரை வழங்கி வருவதில் முன்னணியில் உள்ளது டீக்கடைகள் மட்டுமே. மேலும் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ வெந்நீர் கேட்டால், டீ போடுவதற்கு பாய்லரில் சூடாகி கொண்டே இருக்கும் வெந்நீரை தயக்கமின்றி பிடித்து கொடுப்பார்கள். இதை இன்றும் டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்தநிலையில் மயிலாடுதுறை பட்டமங்கல கடைவீதியில் உள்ள பிரபல டீக்கடையின் டேபிள் பக்கத்தில் ஒரு நோட்டீசை ஒட்டி வைத்துள்ளனர்.

    அதில் கியாஸ் விலை உயர்வு காரணமாக அரை லிட்டர் வெந்நீர் ரூ.10, 1 லிட்டர் வெந்நீர் ரூ.20, வென்னீர் இலவசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டீக்கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், 2014-ம் ஆண்டு கடைகளுக்கு உபயோகப்படுத்தும் 19 கிேலா எடை கொண்ட கமர்சியல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,050 என்று விற்பனை செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கியாஸ் விலை உயர்வினால் வெந்நீரை விற்பனை செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
    மயிலாடுதுறையில் குளத்தில் மூழ்கி மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சீர்காழி மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் வினோத் குமார் (வயது 38). இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதில் இளையமகன் சாம்சன் (10) 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அங்கு உள்ள குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரில் மூழ்கி சேற்றில் சிக்கினார். அதில் இருந்து வெளியில் வர முடியவில்லை. சாம்சனை காணாதது கண்டு அவரது நண்பர்கள் திடுக்கிட்டனர். அவனுடைய நண்பர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    தகவல் அறிந்த அவனுடைய தாய் அலறி அடித்து அழுதுகொண்டு குளத்துக்கு சென்றார். இதற்கிடையே ஊர் மக்கள் திரண்டு குளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் பிணமாக சாம்சனை மீட்டனர். அவர் சேற்றில் சிக்கியதால் மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

    தனது மகன் இறந்த தகவல் தகவலை தந்தை வினோத்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்கு வந்த அவர் மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை அறிந்த மயிலாடுதுறை போலீசார் தந்தை, மகன் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டசபை தொகுதி வேட்பாளர் செந்தமிழனை மாற்றக்கோரி செம்பனார்கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தமிழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார் கோவிலில் உள்ள வடக்கு ஒன்றிய செயலாளர் அலுவலகம் முன்பு வேட்பாளர் செந்தமிழனை மாற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், பூம்புகார் தொகுதியில் அனைவரையும் கவர்ந்த செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனனை வேட்பாளராக தேர்ந்தெடுக்காமல் தொகுதியில் அதிகம் அறிமுகமில்லாத செந்தமிழனை தேர்வு செய்ததால் அ.ம.மு.க. வெற்றி வாய்ப்பு பறிபோய்விடும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
    திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கடையூர்:

    திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இ்ங்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது31) என்பவர் மேற்கண்ட வணிக வளாகத்தில் தனி அறையில் தங்கி தச்சு வேலை செய்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் அவருடன் வேலை செய்து வரும் நண்பர் ஒருவர் அவரை வேலைக்கு அழைத்து செல்வதற்காக அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் வணிக வளாக நிர்வாகத்தில் தெரிவித்து அவர்களின் உதவியுடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மின் விசிறியில் துணியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேரில் சென்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செம்பனார்கோவில் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் உள்ள ஒரு காம்பளக்சின் அறையில் 42 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தூக்கில் கிடந்தவர் கிடங்கல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் வேலை பார்ப்பவர் என்பதும், அவரது காம்பிளக்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரிய வந்தது.

    இதையடுத்து பாஸ்கர் மற்றும் சிலரிடம் இறந்தவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமு இவரது மனைவி புனிதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 

    இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதில் மனமுடைந்த புனிதா கடந்த 7-ந் தேதி விஷத்தை குடித்து வி்ட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புனிதாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட புனிதாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மணல்மேட்டில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    மணல்மேடு:

    மணல்மேடு துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, வடவஞ்சார், திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.
    சீர்காழி அருகே மக்களுக்கு தொல்லை அளிக்கும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி பகுதியில் கம்பன் நகர், மனோன்மணியம் நகர், கே.வி.எஸ். நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளில் புகுந்து வீடுகளில் உள்ள மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்களை எடுத்து செல்கிறது. சில நேரங்களில் வீடுகளில் உள்ள பொருட்களை பிளாஸ்டிக் டப்பா, சில்வர் டப்பாக்களுடன் எடுத்து கொண்டு ஓடிவிடுகிறது. அப்போது விரட்ட முயலும் நபர்களை குரங்குகள் கடித்து விடுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டநாதபுரம் ஊராட்சி கே.வி.எஸ். நகரை சேர்ந்த 70 வயது முதியவரை குரங்கு கடித்தது. இதைப்போல கம்பன் நகரை சேர்ந்த ஆசிரியை ஒருவரையும் குரங்கு கடித்து காயப்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ.8 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே விளநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 50). இவர், கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(45). இவர்களது மகள்கள் சவுமியா(18), சிவானி(11).

    சாந்தகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் விளநகர் கிராமத்தில் வசித்து வருகிறார். சாந்தகுமாரின் மூத்த மகள் சவுமியாவிற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து இருந்தனர். இன்னும் இரண்டு மாதத்தில் இந்த திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த திருமணத்திற்காக ராஜேஸ்வரி வங்கியில் இருந்த மற்றும் திருமணத்திற்காக வாங்கிய 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் ஆகியவற்றை வீட்டில் வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவெண்காட்டில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஜேஸ்வரி தனது மகள்களை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு தங்கி விட்டு நேற்று காலை 11 மணி அளவில் மீண்டும் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டின் முன் பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் அவரது மகள்கள் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணி, மணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. . அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி நகை பெட்டிகளை திறந்து பார்த்தபோது திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த சங்கிலி,, மோதிரம், வளையல், தோடு ஆரம் உள்ளிட்ட 100 பவுன் நகைகள் மற்றும் ரூ, 8 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சீர்காழியில் பெரியார் சிலையை அவமதித்த விவசாயியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் நிலையம் எதிரில் பெரியார் சிலை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மாலை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விபூதி மற்றும் குங்குமம் வைத்து அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சியினர் பெரியாரை அவமதிப்பு செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியார் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்தனர். மேலும் பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் சீர்காழி அருகே பழையபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடக்காரமூளை கிராமத்தை சேர்ந்த விவசாயி மனோகரன் (வயது52) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், அரசு பட்டா பெற தன்னை அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததாகவும் இதனால் மனமுடைந்து , பெரியாரை கடவுளாக நினைத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து விபூதி மற்றும் குங்குமம் வைத்தேன் என கூறினார்.

    இதையடுத்து சீர்காழி போலீசார் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சீர்காழியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசு மற்றும் ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பாிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சங்க சார்பதிவாளருமான மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த பாக்சந்த் மகன் அபிஷேக் (வயது30) தனது காரில் அந்த வழியாக வந்தார்.

    இந்த காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை நடத்தினர். சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இ்ன்றி 4 கிலோ பழைய வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. கொலுசுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து காரை ஓட்டி வந்த அபிஷேக்கிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அபிஷேக் சீர்காழியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்ததும் கொலுசுகள் மற்றும் பணத்தை சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான ஹரிஹரனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    குத்தாலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி (வயது73). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக பாலமுருகன் மற்றும் குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து ஊரில் வசிக்கும் பாலமுருகனின் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து அதில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் 450 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.5½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் குத்தாலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ×