என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும், தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மயிலாடுதுறையில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆட்சிக்கு வந்துவிட்டது போல் தி.மு.க.வினர், அராஜகத்தை தொடங்கி விட்டார்கள். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. அதேபோல துரோக கூட்டணி பணமூட்டையை நம்பி போட்டியிடுகிறது, அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். நடைமுறைக்கு சாத்தியம் உள்ள திட்டங்களை மட்டுமே நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். ஜெயலலிதா பெற்றுத்தந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதகமும் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். எந்த ஒரு சமுதாயத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும், தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
    மயிலாடுதுறை:

    நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இந்த கொரோனா நோய்தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

    அதன்படி மயிலாடுதுறை நகரில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வரவேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் வரும்போது கிருமிநாசினி கொண்டு கைசுத்தம் செய்யும் வசதி செய்திட வேண்டும்.

    இதனை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுப்பையா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அதிமுக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருக்கும் பி.வி. பாரதி, திமுக சார்பில் மு. பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    சொத்து மதிப்பு

    பி.வி. பாரதி

    1. கையிருப்பு- ரூ. 1,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 61,62,931
    3. அசையா சொத்து- ரூ. 84,82,215

    மு. பன்னீர்செல்வம்

    1. கையிருப்பு- ரூ. 20,000
    2. அசையும் சொத்து- ரூ. 27,02,000
    3. அசையா சொத்து- ரூ. 30,00,000

    தேவார பாடல்களை அருளிய உமையம்மையிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் அவதரித்த ஊர். உலகளவில் தமிழிசை வளர்த்த மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாபிள்ளை பிறந்த ஊராகும். உலக நூலக தந்தை என போற்றபடும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த ஊர். வெண்கலகுரலுக்கு சொந்தமான திரையிசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊர்.

    அதோடு நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலம் வைத்தீஸ்வரன்கோயில், புதன் ஸ்தலம் திருவெண்காடு மற்றும் 108 திவ்யதேசங்களில் 11 திவ்யதேசங்கள் கொண்ட திருநாங்கூர் உட்பட பல சைவ,வைணவ கோயில்களை கொண்ட சிறப்பு பெற்ற தொகுதியாகும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி (தனி) உள்ளடக்கியதாகும். சீர்காழி நகராட்சியாகவும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியாகவும், சீர்காழி, கொள்ளிடம் என 2 ஒன்றியங்கள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் பகுதி சீர்காழி தொகுதியில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு வடிகாலாக திகழும் கொள்ளிடம் ஆறு சீர்காழி அருகே பழையாரில் கடலில் கலக்கிறது.

    இப்பகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடி பிரதான தொழிலாக உள்ளது. அதோடு தைக்கால், சேந்தங்குடி, புத்தூர் ஆகிய பகுதிகளில் பாய் மற்றும் பிரம்பு கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலும் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

    சீர்காழி வட்டத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம் முதல் வானகிரி வரை 18 மீனவ கிராமங்களில் 80 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரம் மீனவர்கள் நேரடி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி மறைமுக மீன்பிடித் தொழிலில் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000 பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தோட்டபயிரான சாமந்தி பூ, செங்கரும்பு, மணிலா, வாழை, காய்கறி பயிர்களை விவசாயிகள் பயிர் இடுகின்றனர்.

    சீர்காழி தொகுதியில் ஆதிதிராவிடர்கள் பெரும்பாண்மையாக உள்ளனர். அதற்கு அடுத்த வன்னியர்கள் உள்ளனர். முக்குலத்தோர், மீனவர்கள்,நாடார், செட்டியார், பிள்ளைமார்கள், முதலியார்கள், யாதவர்கள் என அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் வாக்குகளும் ஆங்காங்கே உள்ளது.

    கடந்த 1952 முதல் தற்பொழுது வரை தனி தொகுதியாகவே சீர்காழி தொகுதி உள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை தேதி 1.1.21 அன்று ஆண்கள் 1,20,329, பெண்கள் 1,23,310 மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். மொத்தம் 2,43,651 வாக்காளர்களை உள்ளடக்கியது ஆகும்.

    சீர்காழி நகர் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சென்று சேர வழியில்லாமல் நகரில் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்றுகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் கடந்த தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லப்பட்டும் அவை நிறைவேற்றப்படவில்லை.

    சீர்காழி தொகுதி
    அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி, திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம்

    சீர்காழி நகரில் ஏழை, எளிய மாணவ- மாணவிகள் கல்வி பயில நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவில்லை. நூலக தந்தை பிறந்த ஊரில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை. மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அவை முடிக்கப்பட வேண்டும்.

    வைத்தீஸ்வரன் கோயிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை சாலைக்கு புதிய வழிதடம் ஏற்படுத்தவேண்டும். திருவாலி ஏரியை புனரமைத்து, நீர்பிடிப்பு காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரிக்கு நடவடிக்கை எடுப்பது.

    கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை ஏற்படுத்திட வேண்டும். பழையார், திருமுல்லைவாசல் மீனவர்களின் நீண்டநாள் பிரச்சனை முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்.மீனவ சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், கடலோர கிராமங்கள் அனைத்திற்கும் கடைகோடி வரை குடிநீர் தட்டுபாடு இல்லாமல் போக்க கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தினை முழுமையாக விரிவுப்படுத்திடவேண்டும். 

    கடல்நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்புகுந்து 100-க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி பகுதியில் கதவணை கட்ட வேண்டும். உப்பனாற்றின் வழியே கடல் நீர் உட்புகுவதை தடுக்க கதவணை திட்டங்களை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும்.

    மேலும் மிக முக்கிய கோரிக்கையாக சுதந்திரமடைந்து 70 வருடம் கடந்தும் தொகுதி மறுவரையறை செய்யாமல் தனி தொகுதியாக உள்ளது. பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.

    2016 தேர்தல் வெற்றி

    பி.வி. பாரதி (அ.தி.மு.க)- 76,487
    எஸ். கிள்ளைரவீந்தரன் (தி.மு.க)- 67,484
    முத்துகுமார்.பொன் (பா.ம.க)- 14,890
    உமாநாத் (தே.மு.தி.க)- 12,060
    ஜோதி (நாம் தமிழர்)- 1,430
    இளவழகன் (பா.ஜ.க)- 1,187
    கலைவாணி (சிவசேனா)- 822
    குத்தாலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    குத்தாலம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மருத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் கார், வேன், பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
    அதிமுக கூட்டணி சார்பில் பா.ம.க.வின் சித்தமல்லி ஏ.பழனிச்சாமி நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் எஸ். ராஜகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
    சொத்து மதிப்பு

    சித்தமல்லி ஏ.பழனிச்சாமி

    1. கையிருப்பு- ரூ. 1,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 46,80,000
    3. அசையா சொத்து- ரூ. 5,00,000

    மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கடந்தாண்டு மார்ச் 24-ந்தேதி நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை தொகுதி

    ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்ற சொலவடையை பெற்ற நகரம் மயிலாடுதுறை. 2021 சட்டமன்ற தேர்தல், தமிழகத்தின் 38-வது மாவட்டமாக அவதரித்த உடன் மயிலாடுதுறை எதிர்கொள்ளப்போகும் முதல் தேர்தல். ஆடி அசைந்து செல்லும் காவிரியின் தயவால் 16,000 ஹெக்டேரில் நெல் விளைகிறது.

    ஆலைக் கரும்பு, பொங்கல் கரும்பும் குறைவின்றி நிறைவாக விளையும் பூமி மயிலாடுதுறை. மாயூரநாதர் கோயில் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் என பழங்காலக் கோயில்கள் சூழ்ந்த ஊர். மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் நடக்கும் துலா உற்சவ திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் திரளுவார்கள்.

    மேலும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா புஷ்கரம் கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்தபோது 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்று காவிரியில் நீராடினர்.

    100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சித்தர்காடு கருவாட்டுச் சந்தை இந்த தொகுதியின் இன்னொரு அடையாளம். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இந்த சந்தைக்கு தஞ்சை, கரூர், கோவை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் வந்து குவிகிறார்கள்.

    மயிலாடுதுறை தொகுதி

    சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம்,கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர். கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன்,

    பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம், பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள்,

    மயிலாடுதுறை தொகுதி

    குத்தாலம் வட்டம் ஆலங்குடி, திருமணஞ்சேரி, வாணாதிராஜபுரம், 51,கடலங்குடி, வில்லியநல்லூர், சேத்திரபாலபுரம் மணல்மேடு பேரூராட்சி, மயிலாடுதுறை நகராட்சி மற்றும் குத்தாலம் பேரூராட்சி.

    இந்த தொகுதியில் 40 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் மக்கள் இன்னலையே அனுபவித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 20 முறை பாதாளச்சாக்கடைத் திட்ட பிரதானக் குழாய் உடைந்து சாலை உள்வாங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தலைஞாயிறு சர்க்கரை ஆலை புனரமைப்பு என இந்த தொகுதி மக்களின் கோரிக்கை.

    மயிலாடுதுறை தொகுதி

    அதிமுக கூட்டணி சார்பில் பா.ம.க.வின் சித்தமல்லி ஏ.பழனிச்சாமி நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் எஸ். ராஜகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    1977- கிட்டப்பா (தி.மு.க)
    1980- கிட்டப்பா (தி.மு.க)
    1984- இடைத்தேர்தல்.சத்தியசீலன் (தி.மு.க)
    1984- தங்கமணி (அ.தி.மு.க) 
    1989- செங்குட்டவன் (தி.மு.க) 
    1991- எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் (காங்கிரஸ்)
    1996- எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் (த.மா.கா)
    2001- ஜெக.வீரபாண்டியன் (பா.ஜ.க)
    2006- ஷி.ராஜ்குமார் (காங்கிரஸ்)
    2011- ஏ.ஆர்.பாலஅருட்செல்வம் (தே.மு.தி.க)
    2016- வீ.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க)
    அதிமுக சார்பில் ஏற்கனவே தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று, தற்போது எல்எல்ஏ-வாக இருக்கும் பவுன்ராஜ் களம் காண்கிறார். திமுக சார்பில் நிவேதா முருகன் நிறுத்தப்பட்டுள்ளார்.
    சொத்தி மதிப்பு

    பவுன்ராஜ்

    1. கையிருப்பு- ஒரு லட்சம் ரூபாய்
    2. அசையும் சொத்து- ரூ, 52,12,594
    3. அசையா சொத்து- ரூ. 30,00,000

    நிவேதா முருகன்

    1. கையிருப்பு- ஒரு லட்சம் ரூபாய்
    2. அசையும் சொத்து- ரூ, 65,25,832
    3. அசையா சொத்து- ரூ. 4,65,74,000

    1972-ம் ஆண்டு பூம்புகார் தொகுதி உருவானது. பூம்புகாரில் கண்ணகி, கோவலன், கலைக்கூடம். உலகப் புகழ் வாய்ந்த திருக்டையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனீஸ்கோட்டை அமைந்துள்ளது சிறப்பு. வரலாற்று சிறப்பு மிக்க திருவாவடுதுறை ஆதீனம் மடம் இத் தொகுதியின் சிறப்பம்சமாகும். கம்பர் கோட்டம் அமைந்துள்ளது.

    பூம்புகார் தொகுதி

    மொத்த வாக்காளர்கள் 2,75,582. ஆண்கள்-- 1,35,862. பெண்கள் -- 1,39,713. மற்றவை 7.

    தரங்கம்பாடி வட்டம் முழுமையும் சீர்காழி தாலுக்காவின் கீழையூர், மேலையூர், மற்றும் வாணகிரி கிராமங்களையும் உள்ளடக்கியது இந்த தொகுதியில் தொகுதி சீரமைப்பில் கலைக்கப்பட்ட குத்தாலம் தொகுதியில் இருந்து அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு,

    கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் உட்பட ஊராட்சிகள் இணைந்துள்ளன.

    பூம்புகார் தொகுதி

    புகழ்பெற்ற பரிகாலத் தலமான திருக்கடையூர், கேது தலமான கீழப்பெரும்பள்ளம், காந்திஜியோடு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வள்ளியம்மை பிறந்த தில்லையாடி உள்ளிட்ட முக்கியமான இடங்களும், பூம்புகார், தரங்கம்பாடி, பொறையார், உள்ளிட்ட பல முக்கிய நகரங்களும் இத்தொகுதியில் உள்ளன. தரங்கம்பாடி மட்டுமே பேரூராட்சி பகுதி, மீதமுள்ளவை ஊராட்சிகள். கிழக்கு பூம்புகார் கடல் வரை, மேற்கு திருவாவடுதுறை வரை, தெற்கு கொள்ளிடம் ஆறு வரை தொகுதியின் எல்லை பரப்பாகும். பஞ்சாயத்துக்கள் 93. ஒன்றியம் 2. பேரூராட்சி 1. நகரம் இல்லை.

    பூம்புகார் தொகுதி

    ஆதி-திராவிடர்கள் ஓட்டு 40 சதவீதம், 38 சதவீதம் வன்னீயர், மற்றவை முஸ்லீம், கிறிஸ்துவர்கள், மீனவர்கள் என அனைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆதி- திராவிடர்களே அதிகமாக வசிக்கிறார்கள்.

    இந்த தொகுதிகளில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாவிட்டாலும் ரப்பர் தொழிற்சாலை உள்ளது. முக்கிய தொழிலே விவசாயம். மீன்பிடி தொழிலும் பிரதானம். தொகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

    பூம்புகார் தொகுதி

    ஏழை மக்கள் வசிக்கும் உள் பகுதிகளில் சரியான ரோடு, அடிப்படை வசதி இல்லாதது முக்கிய பிரச்சனையாக உள்ளது. மயிலாடுதுறை- தரங்கம்பாடிக்கு நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

    பூம்புகார் தொகுதி

    தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள எஸ். பவுன்ராஜ் மீண்டும் அதிமுக சார்பில் களம் காண்கிறார். திமுக சார்பில் நிவேதா முருகன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    பூம்புகார் தொகுதி

    1977- விளாநகர் கணேசன் (தி.மு.க.)
    1980- எ.சி.என்.விஜயபாலன் (அ.தி.மு.க)
    1984 எ.சி.என்.விஜயபாலன் (அ.தி.மு.க.) 
    1989 எம்.எம். சித்திக் --முஸ்லீம் லீக் (தி.மு.க. சின்னத்தில்) 
    1991 எம். பூராசாமி (அ.தி.மு.க)
    1996- கோ.மோகனதாசன் (தி.மு.க)
    2001- என்.ரெங்கநாதன் (அ.தி.மு.க) 
    2006- மு.க.பொஜீயசாமி (பா.ம.க)
    2011 எஸ்.பவுன்ராஜ் (அ.தி.மு.க)
    2016 எஸ். பவுன்ராஜ் (அ.தி.மு.க)
    திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அருகே அவரது குழந்தையும் இறந்து கிடந்தது.
    மயிலாடுதுறை:

    திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அருகே அவரது குழந்தையும் இறந்து கிடந்தது. இதனால் குழந்தையை கொன்று விட்டு அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பார்த்திபன்(வயது 31) இவர், ரெயில்வேயில் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இவருக்கும், நரசிங்கம்பேட்டையை சேர்ந்த செல்லதுரை மகள் செல்வகுமாரிக்கும்(24) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1¼ வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

    பார்த்திபன், விருதுநகரில் வேலைபார்த்து வருவதால் திருவாவடுதுறையில் செல்வகுமாரியும், அவரது மாமியாரும் மட்டும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் செல்வகுமாரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அருகில் அவரது குழந்தை லிவிஷாவும் இறந்து கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது செல்வகுமாரி மரணத்தில் வேறு எதுவும் மர்மம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 2 ஆண்டுகளில் செல்வகுமாரி இறந்ததால் அவரது இறப்பு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சீர்காழி அருகே காரில் கொண்டு சென்ற 30 பவுன் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    அந்த காரில் இருந்த ஒரு பையில் 30 பவுன் நகைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் ஹரிஹரனிடம் ஒப்படைத்தனர். அந்த நகைகளுக்கான உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு நகைகளை பெற்றுச்செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சீர்காழி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே சூரக்காடு பாலத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரியும், குடிமைப்பொருள் தாசில்தாருமான முருகேசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், காவலர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ மூவர்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த விமல் (வயது35) என்பவர் காரில் சீர்காழியில் இருந்து கீழ மூவர்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து சீர்காழி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் நாராயணனிடம் ஒப்படைத்தனர்.
    திருக்கடையூர் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், கிள்ளியூர், மாமாகுடி உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 5 நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சம்பா நெல் சாகுபடி செய்து அறுவடை நேரத்தில் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதமடைந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதில் ஓரளவு காப்பாற்றப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் அங்கு ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கிறது. இதற்கு காரணம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றி செல்வதற்கு சரியாக லாரிகள் வருவதில்லை என நேரடி கொள்முதல் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அப்படியே வந்தாலும் ஓரிரு லாரிகள் மட்டுமே வருகிறது. நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதற்கு முக்கிய காரணம் லாரிகள் தட்டுப்பாடு என கூறப்படுகிறது. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

    எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் விரைவில் ஏற்றி செல்ல வேண்டும் என்றும், விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    சாமி சிலைகள் வடிவமைக்கும் சிற்பிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே மயிலாடுதுறை சாலையில் வைத்தீஸ்வரன் கோவில் சந்தவெளி என்ற இடத்தில் ஓலை கொட்டகைக்குள் கருங்கல்லில் இருந்து கலைநயத்துடன் தத்துரூபமாக முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர், நடராஜர், சாய்பாபா, முனீஸ்வரர், அம்பாள், வீரனார் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் ஒரு அடி முதல் 4 அடி வரை சிற்பிகள் வடிவமைத்து வருகிறார்கள்.

    கலை நயத்துடன் வடிவமைத்து வரும் சிலைகளை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்துவிட்டுத்தான் செல்வர்.

    இதுகுறித்து சிற்பி ஒருவர் கூறுகையில் சாமி சிலைகளை வடிவமைப்பதற்கு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற ஊரில் இருந்து கருங்கற்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு, ஆர்டரின் பெயரில் ஒரு அடி முதல் 4 அடி வரை பல்வேறு சாமி சிலைகள் உருவாக்கி தருகிறோம்.

    ஒரு அடி சாமி சிலைகள் செய்வதற்கு இரண்டு நாட்கள் ஆகும். இதற்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. எங்கள் தொழில் மேலும் சிறப்படைய மானியத்துடன் அரசு கடனுதவி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடையும். சிலைகள் செய்ய கருப்பு கருங்கல் கூடுதல் விலை கொடுத்து கொண்டுவர வேண்டியது உள்ளது.

    எனவே போதிய நிதி உதவி எங்களிடம் இல்லாததால் பக்தர்களுக்கு உரிய நேரத்தில் சாமி சிலைகளை வடிவமைத்து கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அரசு எங்களை போன்ற சிற்பிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    கொடியம்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கடலோர இந்த தீவு கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு ேமல் ஆகிறது. எனவே இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் கட்டிடத்தின் மேல் கூரையின் உள்பகுதியில் காரை பெயர்ந்து காணப்படுகிறது. மழை பெய்தால் மழைநீர் கசிந்து கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் வருகிறது. இதனால் கட்டிடத்தில் உள்ள கணினி பொறிகள் மற்றும் பதிவேடுகள் நனைந்து பாதிக்க கூடிய நிலையில் உள்ளன.

    செயல்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×