என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்மமான முறையில் இறந்துகிடந்த செல்வகுமாரி மற்றும் அவரது மகள் லிவிசா.
    X
    மர்மமான முறையில் இறந்துகிடந்த செல்வகுமாரி மற்றும் அவரது மகள் லிவிசா.

    திருமணமான 2 ஆண்டுகளில் தூக்கில் பிணமாக தொங்கிய பெண்- போலீசார் விசாரணை

    திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அருகே அவரது குழந்தையும் இறந்து கிடந்தது.
    மயிலாடுதுறை:

    திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அருகே அவரது குழந்தையும் இறந்து கிடந்தது. இதனால் குழந்தையை கொன்று விட்டு அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பார்த்திபன்(வயது 31) இவர், ரெயில்வேயில் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார்.

    இவருக்கும், நரசிங்கம்பேட்டையை சேர்ந்த செல்லதுரை மகள் செல்வகுமாரிக்கும்(24) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1¼ வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

    பார்த்திபன், விருதுநகரில் வேலைபார்த்து வருவதால் திருவாவடுதுறையில் செல்வகுமாரியும், அவரது மாமியாரும் மட்டும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் செல்வகுமாரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அருகில் அவரது குழந்தை லிவிஷாவும் இறந்து கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது செல்வகுமாரி மரணத்தில் வேறு எதுவும் மர்மம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 2 ஆண்டுகளில் செல்வகுமாரி இறந்ததால் அவரது இறப்பு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×