என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை

    என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ.8 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே விளநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 50). இவர், கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(45). இவர்களது மகள்கள் சவுமியா(18), சிவானி(11).

    சாந்தகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் விளநகர் கிராமத்தில் வசித்து வருகிறார். சாந்தகுமாரின் மூத்த மகள் சவுமியாவிற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து இருந்தனர். இன்னும் இரண்டு மாதத்தில் இந்த திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த திருமணத்திற்காக ராஜேஸ்வரி வங்கியில் இருந்த மற்றும் திருமணத்திற்காக வாங்கிய 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் ஆகியவற்றை வீட்டில் வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவெண்காட்டில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஜேஸ்வரி தனது மகள்களை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு தங்கி விட்டு நேற்று காலை 11 மணி அளவில் மீண்டும் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டின் முன் பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் அவரது மகள்கள் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணி, மணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. . அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி நகை பெட்டிகளை திறந்து பார்த்தபோது திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த சங்கிலி,, மோதிரம், வளையல், தோடு ஆரம் உள்ளிட்ட 100 பவுன் நகைகள் மற்றும் ரூ, 8 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×