என் மலர்tooltip icon

    மதுரை

    • கிராம நிர்வாகி அலுவலர்களின் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் வட்ட கிராமநிர்வாகஅலுவலர் அணிகள் தேர்வு செய்து அந்த அணிகளுக்கு கிரிகெட்போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில தலைவர் ராஜன் சேதுபதி போட்டியை தொடக்கி வைத்தார். இதில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக திருமங்கலம் சர்வேயர் மணி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு திருமங்கலம் தாசில்தார் பார்த்திபன் பரிசுகள் வழங்கினார். முடிவில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

    • ஊஞ்சலில் ஆடிய மாணவி சேலை கழுத்தை இறுக்கி பலியானார்.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி முத்து மாரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் முத்துமாரி தன்னுடைய தாய், தந்தை யுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (வயது14). இவர் சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் சேர்ந்து வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷீலா தொட்டி லில் ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சேலை முறுக்கியது. இதில் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். மாலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் தனது மகள் தொட்டிலில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார்.

    இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
    • இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 923 விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். தங்கமானது பத்திர வடிவில் இருப்பதால் இது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி இம்முதலீட்டிற்கு கூடுதலாக ஒரு ஆண்டிற்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • புதிய விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது.
    • வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மதுரை

    மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.நகர் பாரதிதாசன் தெரு விவேகானந்தர் தெரு சந்திப்பில் உள்ளது வர சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வன்னி மரத்தடியில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

    வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க வன்னி மரத்தடியில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யபட்டது. யாக சாலை பூஜைகள், வாசனை திரவியம், பாலாபிஷேகம் உள்பட அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் பக்தர்களூக்கு வழங்கபட்டது.

    • அமெரிக்கன் கல்லூரியில் உலக விண்வெளி தின நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் முதுகலை மாணவர் ஞானசேகர் நன்றி கூறினா்.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில்உலக விண்வெளி தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை, இஸ்ரோ மகேந்திரகிரி சார்பில் நடந்தது. முதுகலை இயற்பியல் துறை தலைவர் பால்மேரி டெபோரா வரவேற்றார். முதல்வர், செயலாளர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கான இளம் அறிவியலாளர் திட்டம் அல்லது யுவிகா ('யுவ விக்யானி கரியக்ரம்') திட்டம் பற்றி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், இளங்கலை இயற்பியல் துறை தலைவர் ரிச்சர்டு ராஜ்குமார் மற்றும் துறை ஆசிரியர்கள் பங் கேற்று விழாவை சிறப் பித்தனர். முடிவில் முதுகலை மாணவர் ஞானசேகர் நன்றி கூறினா்.

    • அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.
    • பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி மேலாண்மை பற்றிய 2 நாள் கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் தலைமை செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் படி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை தாங்கி நிதி மேலாண்மை என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் அவசியம் தேவை. நிதி மேலாண்மை தெளிவு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.இக்கருத்தரங்கில் பகிரக் கூடிய நிதி பற்றிய அனைத்து தகவல்களையும் மாண வர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு தேர்வுக்கு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வின் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முதலாம் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபி அமைப்பின் நிதி மேலாண்மை கல்விப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் நளினி நிதி சேமிப்பு, நிதி முதலீடு, மற்றும் நிதி பராமரிப்பு போன்றவற்றை பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு விரிவான பதில் அளித்தார். 2-ம் நாள் அமர்வில் மாணவ மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதி மேலாண்மை பற்றிய குழு விவாதம் நடத்தப் பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக மேலாண்மை துறை இயக்குனர் பேராசிரியர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், டாக்டர் திருப்பதி, பி.பி.ஏ. துறை தலைவர் கார்த்திகா பேராசிரியர்கள் அழகு லட்சுமி, கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் ஜமால், தினேஷ், திவ்யா, பத்மப்பிரியா ஆஃபரின், ரேஷ்மா, மகா, சுவேதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பேராசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

    • எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறுவது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல்.
    • இந்தியாவை பாரத் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக அறிவித்து ரத்தான புரட்சி பயணம் விரைவில் தொடங்க உள்ளது. சனாதனம் பற்றிய பிரச்சனைக்கு ஏற்கனவே முழுமையான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இறையாமையை போற்றும் ஒரே கட்சி தி.மு.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் சொல்வதையெல்லாம் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறுவது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல். இந்தியாவை பாரத் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர் அறிக்கை விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் கோர்ட்டை நாடலாம்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டில் போலி டாக்டர் ராஜலட்சுமி என்பவருக்கு உதவியதாக என் மீது தொண்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் என் மீது பழி வாங்கும் நோக்கத்தில், டி.எஸ்.பி. தூண்டுதலின்படி போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    எனவே டி.எஸ்.பி. புகழேந்தி, தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி திருவாடானை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு எனது புகாரினை விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    ஆனால் அந்த உத்தரவை தொண்டி போலீசார் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே திருவாடானை கோர்ட்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரரின் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கீழ் கோர்ட் பிறப்பித்த உத்தரவை போலீசார் பின்பற்றவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபடும் போலீசார் மீதான புகார்கள் குறித்து மாவட்ட நீதிபதியே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் மனித உரிமை விதிகளும் தெரிவிக்கின்றன.

    சிறை குறிப்பை பார்க்கும் போது காவல்துறைக்கு எதிராக குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் மனுதாரர் புகாரை விசாரித்ததில் உண்மை தன்மை இல்லை என கூறி முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் இந்த கோர்ட்டை நாடலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    • கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
    • காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, எம்.வேப்பங்குளம் கிராமத்தில் ஊர் பொது சாவடியின் முன்பாக இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு உள்ள மந்தைக்கு செல்லும் தெருவின் இரு புறங்களிலும் பல வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலமானது பொது பாதையாகவும், அறுவடை காலங்களில் பயிர்களை தூற்றும் களமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிலர் கோவில் கமிட்டி என்கிற பெயரில் தன்னிச்சையாக செயல்பட்டு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி ஏதும் பெறாமலும், திட்ட அங்கீகாரம் ஏதுமின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கனவே ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கோவில் கட்டுமான பணி நடைபெறாது என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் புதிய கோவில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே கோவில் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கட்டுமான பணிகள் நடைபெறாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எப்படி மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கியது? இதற்கு யார் அனுமதி வழங்கியது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் விசாரணையின் முடிவில், கோவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், யாரிடம் அனுமதி பெற்று கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா நடைபெற உள்ளது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைக்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மேற்கு 1-ம் பகுதி 83-வது வார்டு செயலாளரும், 83-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி. ரவி-வேணி தம்பதி யின் மகன் மனோஜ் பாண்டியனுக்கும், தல்லாகுளம் ம.தி.மு.க. பகுதி செயலாளர் வேல். புகழ்முருகன்- பாண்டி யம்மாள் தம்பதியின் மகள் கார்த்தி காவுக்கும் பெரி யோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது திருமணம் நாளை (10-ந் தேதி) மதுரை காமராஜர் சாலை நிர்மலா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். திருமண விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உற்றார், உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண ஏற்பாடுகளை எஸ். எம். டி. ரவி- வேணி, திவ்யதர்ஷினி -பாண்டி குமார், முருகன், தெற்கு 2-ம் பகுதி பேரவை செயலாளர் முத்துப் பாண்டி-முத்துமீனா மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • கற்களுக்கு இடையே பசு மாடு சிக்கிக்கொண்டது.
    • 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோடு பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே பராமரிப்பு பணிக ளுக்காக 650 கிலோ எடை கொண்ட 25-க்கும் மேற்பட்ட கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு பசுமாடு அங்கு இருந்த கற்களுக்குள் சிக்கி கொண்டது. உடல் பகுதி முழுவதும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ வந்த தீயணைப்புத் துறை யினர் கற்களுக்குள் சிக்கியபடி தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உயிருடன் பசு மாட்டை மீட்க வேண்டும் என்பதால் அவர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    பின்னர் தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் இணைந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

    பசுமாட்டை உயிருடன் மீட்ட எஸ்.எஸ்.ஓ. பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுப்புராஜ், கார்த்திக், ராமர், பால் பாண்டி, வில்வகுமார் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • வழுக்கு மரம், உறியடி போட்டியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள், கையில் புல்லாங்குழலுடன், கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணன் திருவுருவ சிலை மேளதாளம் முழங்க கிரா மங்களில் உள்ள வீதிகளில் உலா வந்தது. இதில் பலர் கிராமத்தில் உள்ள மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வ லத்தில் கலந்து கொண்டனர்.

    மஞ்சள் நீரை ஊற்றி மஞ்சள் நீராடினர். கிருஷ்ணன் வேடத்தில் இருந்த இளைஞர் உறியடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் 30 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.

    உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் நாட்டாமை அழகர்சாமி பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அச்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மல்லிகா பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

    ×