search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் டி.எஸ்.பி. மீதான புகாரை விசாரிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    போலீஸ் டி.எஸ்.பி. மீதான புகாரை விசாரிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் கோர்ட்டை நாடலாம்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டில் போலி டாக்டர் ராஜலட்சுமி என்பவருக்கு உதவியதாக என் மீது தொண்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் என் மீது பழி வாங்கும் நோக்கத்தில், டி.எஸ்.பி. தூண்டுதலின்படி போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    எனவே டி.எஸ்.பி. புகழேந்தி, தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி திருவாடானை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு எனது புகாரினை விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    ஆனால் அந்த உத்தரவை தொண்டி போலீசார் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே திருவாடானை கோர்ட்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரரின் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கீழ் கோர்ட் பிறப்பித்த உத்தரவை போலீசார் பின்பற்றவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபடும் போலீசார் மீதான புகார்கள் குறித்து மாவட்ட நீதிபதியே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் மனித உரிமை விதிகளும் தெரிவிக்கின்றன.

    சிறை குறிப்பை பார்க்கும் போது காவல்துறைக்கு எதிராக குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் மனுதாரர் புகாரை விசாரித்ததில் உண்மை தன்மை இல்லை என கூறி முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் இந்த கோர்ட்டை நாடலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    Next Story
    ×