search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்டுமான பணிக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

    அரசு புறம்போக்கு நிலத்தில் கோவில் கட்டுமான பணிக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    • கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
    • காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, எம்.வேப்பங்குளம் கிராமத்தில் ஊர் பொது சாவடியின் முன்பாக இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு உள்ள மந்தைக்கு செல்லும் தெருவின் இரு புறங்களிலும் பல வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலமானது பொது பாதையாகவும், அறுவடை காலங்களில் பயிர்களை தூற்றும் களமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிலர் கோவில் கமிட்டி என்கிற பெயரில் தன்னிச்சையாக செயல்பட்டு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி ஏதும் பெறாமலும், திட்ட அங்கீகாரம் ஏதுமின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கனவே ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கோவில் கட்டுமான பணி நடைபெறாது என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் புதிய கோவில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே கோவில் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கட்டுமான பணிகள் நடைபெறாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எப்படி மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கியது? இதற்கு யார் அனுமதி வழங்கியது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் விசாரணையின் முடிவில், கோவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், யாரிடம் அனுமதி பெற்று கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×