என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்ற ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஓட்டல்களில் உணவு வகைள் மற்றும் சிக்கன் பிரியாணி தரமின்றி தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு ஓட்டல் இருந்த சிக்கன் பிரியாணியை மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பிரியாணி உணவு மாதிரி தரம் குறைவாகவும், சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர, சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், ஓசூர் ஜே.எம்.-2 கோர்ட்டில் ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், தரமற்ற முறையிலும், பாதுகாப்பற்ற முறையிலும் சிக்கன் பிரியாணியை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் மற்றும் கோர்ட் கலையும் வரை 1 நாள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
    தொழில் போட்டி காரணமாக தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 57). அதே பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர்கள் 2 பேரும் சிமெண்டு கடை வைத்துள்ளனர். இருதரப்பினருக்கும் தொழில் போட்டி காரணமாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், இருதரப்பிலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சிவகுமார் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ராயக்கோட்டை சாலை காமராஜர் நகரில் உள்ள காமராஜர் சிலை எதிரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி, மாவட்ட பொது செயலாளர் அப்சல், வட்டார செயலாளர் வெங்கடேசன், காசிநாதன், அண்ணாமலை, சக்கரவர்த்தி, லண்டன் கோபால், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் ரங்கசாமி, ஏழுமலை, அஜிஸ்வுல்லா, அக்பர், ஆஜித் பாஷா, முனியம்மாள், கோவிந்தசாமி, இருதயம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை தலைவர் அமாசி நன்றி கூறினார்.
    கிருஷ்ணகிரியில், 9-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று 9-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மீன்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் தேவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பேசினர்.

    போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பல்வேறு துறைகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட 27 பெண் ஊழியர்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
    தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று கிருஷ்ணகிரி பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன்படி தனது 5-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், “ அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். 


    ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலைவணங்காது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது. அடிப்படை தொண்டன்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும். இது தொண்டன் ஆளுகின்ற கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். பத்தாண்டுகளாக கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் இப்போது கட்சியை கைப்பற்ற சூழ்ச்சி வலையை பின்னி கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது. தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி இப்பொழுது பிரம்மாண்டமாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எண்ணேகோல் புதூர் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரைவில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரையில் உள்ள முப்பது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். 
    கண்டெய்னர் லாரியில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியின் தந்தையை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.
    ஓசூர்:

    சென்னையில் இருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றி கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி புறப்பட்டு சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை என்ற இடத்தில் சென்றபோது ஒரு மர்ம கும்பல் , டிரைவர்களை தாக்கி கண்டெய்னர் லாரியில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் பற்றி தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரத் தேஜ்வாணி (வயது 37), அமிதாப் பாத்தா, ராஜேந்திரா சவுகான், பவானி சிங், கமல்சிங், இந்தூரை சேர்ந்த அமீர்கான், பரத் அஸ்வாணி மற்றும் ஹேமர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சிறையில் உள்ளனர்.

    மேலும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகித் (26), சஜகான் சைமன் (33), ஆகியோர் ஓசூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான பரத் தேஜ்வாணியின் தந்தை வினோத் தேஜ்வாணி (வயது 61) துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தார். அவர் பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அனுப்பி இருந்தனர். அதனால் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை அங்கிருந்த அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தனிப்படை போலீசார் அங்கு சென்று வினோத் தேஜ்வாணியை நேற்று அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மத்தூர், காவேரிப்பட்டணம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கலர்பதி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 20). வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மாணவர் தமிழ்செல்வன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று தமிழ்செல்வன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள காவகட்டிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி அருகே நடந்து சென்ற மூதாட்டியை ஒற்றை யானை இன்று தூக்கி வீசியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
    சூளகிரி:

    கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு, அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, ஊடேதுர்க்கம் ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளன.

    அதே நேரத்தில் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினரும் கண்காணித்து வருகிறார்கள். யானைகள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் தெய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சூளகிரி அருகே நடந்து சென்ற மூதாட்டியை ஒற்றை யானை இன்று தூக்கி வீசியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி அடுத்த சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் சாதம்மா (வயது 65).

    இவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மறைவாக நின்று கொண்டிருந்த ஒற்றையானை திடீரென சாதம்மாவை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்து அலறினார்.

    அப்போது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். உடனே அவர்கள் கூச்சல் போட்டதால் அங்கு நின்ற ஒற்றை யானை சென்று விட்டது.

    பிறகு காயத்துடன் கிடந்த சாதம்மாவை மீட்டுஒசூர் மருத்தவமனை சேர்த்தனர். மேலும் ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கும் கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
    தங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை என சூளகிரி அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
    சூளகிரி:

    பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று சென்னைக்கு அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லாததால் அ.தி.மு.க. கொடியுடன் காரில் வரும் சசிகலாவுக்கு கொடி பறக்க அனுமதிக்க முடியாது என ஓசூர் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அளிக்க தயார்நிலையில் இருந்தனர்.

    தமிழக எல்லையை எட்டுவதற்கு 2 கிலோ மீட்டர் முன்பு வக்கீல்கள் ஆலோசனைப்படி திடீரென சாலையோரத்தில் காரை நிறுத்தி வேறு காருக்கு சசிகலா மாறினார். அந்த கார், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி கார் என்பதால் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது.

    பின்னர் அங்கிருந்து செல்லும் வழியில் ஓசூர், சூளகிரி வழியாக கிருஷ்ணகிரிக்கு சசிகலா காரில் வந்தார். அங்கு ஆவின் மேம்பாலம், தொன்னையன் கொட்டாய், கந்தி குப்பம் மற்றும் பர்கூர் என மாவட்டம் முழுவதும் கட்சியினர் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே சசிகலாவுக்கு வாகனம் வழங்கிய மற்றும் வரவேற்பு அளித்த சூளகிரி அ.தி.மு.க. நிர்வாகி சம்பங்கி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சந்திரசேகர ரெட்டி, மாவட்ட பிரதிநிதி ஜானகி ரவீந்திரரெட்டி, கெம்மேப்பள்ளி பஞ்சாயத்து தகவல் தொழிற்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த்குமார், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் நாகராஜ் ஆகிய 6 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பங்கி உள்பட 6 பேரும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி.யின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    எங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க. தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

    அப்படி இருக்கும்போது எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? கட்சியில் இருந்து எங்களை நீக்கியதை சட்டப்படி சந்திப்போம்.

    மாநில எல்லையில் அ.தி.மு.க. கொடியுடன் தான் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தோம். நாங்கள் அ.ம.மு.க. கொடியை ஏந்தவில்லை. மேலும் அக்கட்சியிலும் சேரவில்லை. இதனால் எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலா கார் பழுதானதால் எனது காரை வழங்கினேன். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காதலர் தின கொண்டாட்டங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யும் மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியானது நல்ல மண்வளம் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகையான ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய விழா கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அன்னிய முதலீடுகளும் பெறப்படுகின்றன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தின கொண்டாட்டங்களுக்காக வெளிநாட்டு ஆர்டர்கள் இதுவரை வரவில்லை என ஓசூர் பகுதி ரோஜாமலர் சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதி நாள் களில் உலகின் பல்வெறு நாடுகளிலிருந்து ரோஜா மலர்களை அனுப்பி வைக்க ஆர்டர்கள் வரும். ஆனால் நடப்பாண்டு தற்போது வரை வெளிநாடுகளிலிருந்து எந்த ஆர்டர்களும் வரவில்லை எனக்கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இன்றளவும் கொரோனா தாக்கம் இருப்பதால் காதலர் தினம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படவில்லை என்பதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    இந்தியாவிலுள்ள உள்ளுர் சந்தைகளில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. இருந்த போதிலும் காதலர் தின விழாவிற்காக வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதியானால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

    ரோஜாமலர் விவசாயத்தை நம்பி ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10,000க்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரோஜா மலர் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்த இவர்கள் தற்போது காதலர் தின ஏற்றுமதியை நம்பி உள்ளனர். காதலர் தின விழாவிற்காக இதுவரை வெளி நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் வேதனை அடைந்துள்ளனர்.
    காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று ச‌சிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
    ஓசூர்:

    பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.

    அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா.

    பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார். வேறு காருக்கு மாறிய நிலையில் அவர் முன்பு வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

    தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நோட்டீஸ் வழங்கினர்.

    நோட்டீசை பெற்றுக்கொண்ட அவர் காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று கூறினார்.
    ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.
    ஓசூர்:

    பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.

    அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.

    சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார். வேறு காருக்கு மாறிய நிலையில் அவர் முன்பு வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

    தமிழக எல்லைப்பகுதிக்குள் வந்தடைந்த சசிகலாவிற்கு அமமுக. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதிமுக கொடியுடன் தான் பயணிப்போம் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். காவல் துறை நோட்டீஸ் அளித்தால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    ×