search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பங்கி
    X
    சம்பங்கி

    எங்களை கட்சியில் இருந்து நீக்க சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது- சூளகிரி அதிமுக நிர்வாகி பேட்டி

    தங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை என சூளகிரி அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
    சூளகிரி:

    பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று சென்னைக்கு அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லாததால் அ.தி.மு.க. கொடியுடன் காரில் வரும் சசிகலாவுக்கு கொடி பறக்க அனுமதிக்க முடியாது என ஓசூர் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அளிக்க தயார்நிலையில் இருந்தனர்.

    தமிழக எல்லையை எட்டுவதற்கு 2 கிலோ மீட்டர் முன்பு வக்கீல்கள் ஆலோசனைப்படி திடீரென சாலையோரத்தில் காரை நிறுத்தி வேறு காருக்கு சசிகலா மாறினார். அந்த கார், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி கார் என்பதால் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது.

    பின்னர் அங்கிருந்து செல்லும் வழியில் ஓசூர், சூளகிரி வழியாக கிருஷ்ணகிரிக்கு சசிகலா காரில் வந்தார். அங்கு ஆவின் மேம்பாலம், தொன்னையன் கொட்டாய், கந்தி குப்பம் மற்றும் பர்கூர் என மாவட்டம் முழுவதும் கட்சியினர் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே சசிகலாவுக்கு வாகனம் வழங்கிய மற்றும் வரவேற்பு அளித்த சூளகிரி அ.தி.மு.க. நிர்வாகி சம்பங்கி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சந்திரசேகர ரெட்டி, மாவட்ட பிரதிநிதி ஜானகி ரவீந்திரரெட்டி, கெம்மேப்பள்ளி பஞ்சாயத்து தகவல் தொழிற்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த்குமார், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் நாகராஜ் ஆகிய 6 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பங்கி உள்பட 6 பேரும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி.யின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    எங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க. தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

    அப்படி இருக்கும்போது எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? கட்சியில் இருந்து எங்களை நீக்கியதை சட்டப்படி சந்திப்போம்.

    மாநில எல்லையில் அ.தி.மு.க. கொடியுடன் தான் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தோம். நாங்கள் அ.ம.மு.க. கொடியை ஏந்தவில்லை. மேலும் அக்கட்சியிலும் சேரவில்லை. இதனால் எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலா கார் பழுதானதால் எனது காரை வழங்கினேன். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×