search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் ரோஜா மலர்கள்
    X
    ஓசூர் ரோஜா மலர்கள்

    ஓசூர் ரோஜா மலர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி பாதிப்பு- விவசாயிகள் கவலை

    காதலர் தின கொண்டாட்டங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யும் மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியானது நல்ல மண்வளம் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகையான ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய விழா கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அன்னிய முதலீடுகளும் பெறப்படுகின்றன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தின கொண்டாட்டங்களுக்காக வெளிநாட்டு ஆர்டர்கள் இதுவரை வரவில்லை என ஓசூர் பகுதி ரோஜாமலர் சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதி நாள் களில் உலகின் பல்வெறு நாடுகளிலிருந்து ரோஜா மலர்களை அனுப்பி வைக்க ஆர்டர்கள் வரும். ஆனால் நடப்பாண்டு தற்போது வரை வெளிநாடுகளிலிருந்து எந்த ஆர்டர்களும் வரவில்லை எனக்கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இன்றளவும் கொரோனா தாக்கம் இருப்பதால் காதலர் தினம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படவில்லை என்பதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    இந்தியாவிலுள்ள உள்ளுர் சந்தைகளில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. இருந்த போதிலும் காதலர் தின விழாவிற்காக வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதியானால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

    ரோஜாமலர் விவசாயத்தை நம்பி ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10,000க்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரோஜா மலர் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்த இவர்கள் தற்போது காதலர் தின ஏற்றுமதியை நம்பி உள்ளனர். காதலர் தின விழாவிற்காக இதுவரை வெளி நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் வேதனை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×