என் மலர்
கிருஷ்ணகிரி
- பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் காளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக அவர் வந்தார்.
அப்போது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு காளியம்மன் சாமி கழுத்தில் இருந்த தங்கத்தாலி ¾ பவுன் நகையும், உண்டியல் பணம் ரூ.5000-த்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்தது.
உடனே அவர் ஊர் கிராம மக்களிடம் தகவலை தெரிவித்தார். தகவலறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலிலை ஆய்வு செய்தனர்.
மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிகோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி, ஜவளகிரி போன்ற வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது வழக்கம்.
இந்நிலையில் தேன்கனிகோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்திற்கு அடுத்துள்ள ஏரி பகுதியில் நேற்று இரவு மக்னா யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியை விட்டு கிராமத்திற்கு நுழைந்துள்ளது.
இதையடுத்து அங்குள்ள ஏரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.
தொடர்ந்து இன்று காலை அந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனச்சரகர் விஜயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்ய உள்ளனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் யானைகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
- கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் மாணவர்கள் 7801 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.34 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய மாணவிகளில் 9,538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவிகளில் 17,339 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 91.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
- தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேடுமுத்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பைய்யா (வயது55). விவசாயியான இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அப்பைய்யா இன்று அதிகாலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக சென்றார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த ஒற்றை யானை ஒன்று வேகமாக வந்து அப்பைய்யாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஒற்றை யானையை விரட்டினர்.
பின்னர் காயமடைந்த அப்பைய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, ஜவளகிரி வனச்சரகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அப்பைய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவரது மகள் சுப்ரியா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவர் இன்று காலை தக்காளி பறிப்பதற்காக அவரது வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவி சுப்ரியா தவறி விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் மற்றும் சாமல்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மாணவி சுப்ரியாவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன்தீஸ்வரர் கோவில் உள்ளது.
- கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது அனுமான் தீர்த்தம். இங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் தீஸ்வரர் கோவில் உள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு வருவர்கள். இவர்கள் ஆற்றில் குளித்து விட்டு அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள், இந்நிலையில், கே.ஆர்.பி., அணையில் இருந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது தற்போது வறட்சி என்பதால் நிறுத்தப்பட்டது.
கே.ஆர்.பி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், அரசம்பட்டி வரை மட்டுமே செல்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்பொழுது கோவில் நிர்வாகம் சார்பாக தண்ணீர் தனியாக பைப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிப்பதற்காக காலையில் குறித்த நேரத்துக்கு மட்டும் தண்ணீர் விடுதொக கூறப்படுகிறது. மேலும் இந்த பைப்புகளில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒரே இடத்தில் குளிப்பதால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு அறைகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
- தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மிட்டப்பள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது குழந்தை வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.
தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் முழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.
இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
- மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.
- கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை அருகே உள்ள திண்ணக்காலனி கிராமத்தில் முனியப்பன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலின் அருகே புதர் நிறைந்த இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் சிலர் மது குடிப்பதும், போதையில் பாட்டில்களை போட்டு உடைப்பதும், தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிலர் முனியப்பன் கோவிலின் அருகே மது குடித்தனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டனர். இதனை அதே பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பியும் அவரது மகன் வெற்றியும் அந்த போதை ஆசாமிகளிடம் குடித்துவிட்டு ஏன் இப்படி தகராறில் ஈடுபடுகிறீர்கள். இங்கிருந்து உடனே புறப்படுங்கள் என்று கூறினர். இதனால் சின்னதம்பிக்கும் போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே போதையில் இருந்து அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் சிலரை முனியப்பன் கோவில் அருகே அழைத்து வந்தனர்.
அப்போது சின்னதம்பியையும் அவரது மகன் வெற்றியையும் போதை ஆசாமிகளுடன் அந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினார்.
அப்போது வெற்றி தனது நண்பரான எலக்ட்ரீசியன் கார்த்திகையை செல்போனில் உதவிக்கு அழைத்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு கார்த்தக்கும் அவரது தந்தை தேவராஜும் விரைந்து வந்தனர்.
மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம கும்பல் தேவராஜையும் அவரது மகன் கார்த்திகையும் சரமாரியாக தாக்கினார். பின்பு கார்த்திக்கின் கால்களின் இடையே மோட்டார் சைக்கிளை மர்ம கும்பலை சேர்ந்த சிலர் ஏற்றி வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சமம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அங்க விரைந்து வந்து காயமடைந்த தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் இறந்த கார்த்திக் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களும் திரண்டு வந்து போதையில் தகராறில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த ஏ.டி.எஸ் பி சங்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உறவினர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த கார்த்திக்குக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தன் திருமணம் ஆனது. அவருடைய மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
ஒசூர் அருகே உள்ள தளியில் ஜெயந்தி காலனி அருகே பிரபல ரடிவுயான தளி சதீஷ் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தளி போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர் யார்? என்ற விவரம் குறித்து விசாரித்தனர்.
இதில் தளி அருகே குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (வயது34) என்பவர் தெரியவந்தது.
பிரபல ரவுடியான இவர் கஞ்சா கடத்தல், கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
வீட்டில் இருந்த சதீஷை நேற்று இரவு சில மர்ம நபர்கள் மதுகுடிப்பதற்காக ஜெயந்தி காலனியில் உள்ள எஸ்டேட்டிற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர். இதில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வாங்கி கொண்டு அவர் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சதீஷின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து போன சதீஷ் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கில் சிக்கியுள்ள சதீஷை யாராவது பழிவாங்குதற்காக வெட்டி கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி கொலை செய்துள்ளனரா? அல்லது குடிபோதை தகராறில் நண்பர் வெட்டி கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.
- உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில எல்லைப்பகுதியான வேப்பனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி, பாராளுமன்ற தேர்தல் முடிந்தது. கர்நாடகத்தில் நாளை மறுநாள், மே 7 என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதேபோல ஆந்திராவில் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் மே 13-ல், நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.
எனவே வேப்பனபள்ளி அருகில், கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி சோதனைசாவடி, அத்திகுண்டா சோதனை சாவடி, வேப்பனபள்ளிஅடுத்த ஆந்திர மாநில எல்லையிலுள்ள ஒ.என்.கொத்தூர் சோதனைசாவடி உள்ளிட்டவற்றில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எத்தனை முறை சோதனையிடுவீர்கள் என சலித்து கொண்டவாறு செல்கின்றனர்.
- கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 31).
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை உடன் மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.
இந்த நிலையில் பாலச்சந்தர், தனது மனைவி, குழந்தையுடன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான உத்திரமேரூருக்கு சென்றுள்ளார். மேலும் சொந்த ஊரிலிருந்து நேற்று மத்தூருக்கு பாலச்சந்தர் மட்டும் வந்துள்ளார்.
அப்போது வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவில் இருந்து 8 பட்டு புடவைகள், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள டி.வி., 2ஜோடி வைர தோடுகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாலச்சந்தர் மத்தூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்தர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், வைர தோடு, புடவை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவ குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.
- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 76 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 8 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 305 திருநங்கைகளும் என மொத்தம் 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத், அ.தி.மு.க. சார்பில் ஜெயபிரகாஷ், பா.ஜனதா சார்பில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி, சுயேச்சைகள் உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், நேற்று காலை 7 மணியளவில் 1,888 வாக்குச்சாவடிகளில் (கருக்கனஹள்ளி தவிர்த்து) வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, காலை 9 மணிக்கு பிறகு விறுவிறுப்பாக நடந்தது.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 9 மணியளவில் 8.78 சதவீத வாக்குகளும், காலை 11 மணியளவில் 23.97 சதவீத வாக்குகளும், பகல் 1 மணியளவில் 39.78 சதவீத வாக்குகளும், மாலை 3 மணியளவில் 51.60 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 64.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.
மேலும், மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் 71.31 சதவீத வாக்குகள் பதிவானது.
இதற்கிடையே ஆந்திர மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் எல்லையோர வாக்குச்சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆந்திரா, கேரளா போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படை, துணை ராணுவப்படையினர் உட்பட 3,722 பேர் ஈடுபட்டனர்.
இதே போல் வாக்குச்சாவடி மையங்களில் 9,281 பணியாற்றினார்கள். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு, தேர்தல் புறக்கணிப்பு, கட்சியினரிடையே வாக்குவாதம் என இருந்த போதிலும், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.






