என் மலர்
கிருஷ்ணகிரி
- அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
- வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 635 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு ஆற்றிலும், ஊற்றுக்கால்வாய்களிலும் 111 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பாரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மில்லி மீட்டரில், தேன்கனிக்கோட்டை 41, கிருஷ்ணகிரி 22.30, அஞ்செட்டி 15, சூளகிரி 12, சின்னாறு அணை 10, தளி 5, கிருஷ்ணகிரி அணை 1 பதிவாகி இருந்தது.
- அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.
- ஓ.பி.எஸ். அழைப்புக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதில்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மோசமான தோல்வியை தழுவின. தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ""ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்."
"நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க.-வினரை ஒன்றிணைந்து செய்லபட ஓ. பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை அ.தி.மு.க. நிராகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சசிகலாவை வெளியிட்டுள்ள அறிக்கை நானும் பார்த்தேன். அ.தி.மு.கவை காப்பாற்றுவேன். அனைவரும் வாருங்கள், என்றார். அவர் குடியிருக்கும் வீடடிற்கு அம்மாவின் பெயர் வைத்து இருக்கிறார் சசிகலா. அந்த வீட்டிற்கு அனைவரும் வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அறிக்கை வெளியிட்டு எவ்வளவு நேரமாகுகிறது. எத்தனை தொண்டர்கள் அவர் பின்னால் சென்றார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்."
"எப்படியாவது அ.தி.மு.க. தொண்டர்களிடையே குழப்பதை ஏற்படுத்தவே வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். இந்த குழப்பங்களை களைய எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள், நிர்வாகிகளை ஒன்றிணைந்து, கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்."
"2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய நீதிகட்சி, புதிய தமிழகம், த.மா.கா. போன்ற கட்சிகளுடன் கூட்டணியுடன் நாங்கள் வாங்கிய வாக்குகள் 18 சதவீதம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்து தற்போது வாங்கிய வாக்குகள் 20.46 சதவீதம் பெற்று இருக்கிறோம்."
"2019-ம் ஆண்டு தி.மு.க. 32.5 சதவீதம் பெற்றிருந்தது. தற்போது முடித்து நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 26.93 சதவீதம் பெற்றுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு 6 சதவீதம் வாக்குகள் குறைந்தள்ளது. ஆனால், அ.தி.மு.க. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட தற்போது நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 2 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. இதுவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை சிறப்பாக நடத்தி வருகிறார்."
"அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து கட்சிக்கு மேலும், மேலும் பல சோதனைகளை கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான். அ.தி.மு.க. பொதுக் குழுவை அவமதித்து விட்டு, தொண்டர்கள் கோவிலாக வணங்கும் அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ.பி.எஸ்.தான்."
"முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் இந்த ஓ பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை முடக்க முயற்சித்த அவர் தற்போது எம்.ஜி.ஆர். பாடலை பாடி அனைவரும் ஒன்றிணைவோம் வா என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும், தகுதியும் இல்லை," என்று தெரிவித்தார்.
- முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது.
- பாரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் நடவிற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கனஅடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் வழியாக நெடுங்கல் தடுப்பணைக்கு செல்கிறது.
இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரியை பொறுத்தவரை ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் தற்போது 9.50 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்ட பின்பு தான், கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்போக சாகுபடிக்காக பாரூர் ஏரியில் இருந்து திறக்க வேண்டிய உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், நீர்நிலைகளில் வறண்டு வரும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணைக்கு ஒரு மாதத்திற்கு மேலாக நீர்வரத்து ஜீரோ நிலையில் காணப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 38 அடிக்கும், பாரூர் ஏரியின் நீர்மட்டம் 3.60 அடிக்கு கீழே சரிந்தது.
இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது. இவ்வாறான நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால், அணைகள், ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 44.85 அடி, பாரூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் 9.50 அடியாக உயர்ந்ததுள்ளது குறிப்பிடதக்கது. பாரூர் ஏரிக்கு அணையின் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பாரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் நடவிற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
- பேசிய வருவாய் ஆய்வாளர் சொந்த அலுவல் காரணமாக வெளியே இருப்பதாகவும், நாளை வருகிறேன் என கூறியுள்ளார்.
- சத்தியசீலன் போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரனிடம் சென்று முறையிட்டுள்ளார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 42).
இவரது மகள் 12-ம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு கல்லூரிக்காக விண்ணப்பம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விண்ணப்பத்திற்கு முதல் பட்டதாரி சான்று தேவைப்படுவதால், கையொப்பம் பெற போச்சம்பள்ளி வருவாய் அலுவலகத்திற்கு சத்தியசீலன் தனது மகளுடன் வந்தார். அங்கு வருவாய் ஆய்வாளர் இல்லாததால், அலுவலகத்தின் வெளியே எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பேசிய வருவாய் ஆய்வாளர் சொந்த அலுவல் காரணமாக வெளியே இருப்பதாகவும், நாளை வருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து சத்தியசீலன் போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரனிடம் சென்று முறையிட்டுள்ளார்.
தாசில்தாரின் உத்திரவின் பேரில் அங்கு வந்த வருவாய் ஆய்வாளர், இந்த விண்ணப்பத்தில் கையொப்பம் போட முடியாது, இது உனது மகளே இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியசீலன் தனது உறவினர்களுடன் வருவாய் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். விபரம் அறிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன் மற்றும் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் சத்தியசீலன் கொண்டு வந்த மனுவில் கையொப்பம் பெற்ற பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது வண்டியை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
- கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் மினி பஸ் ஒன்று சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 22 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சென்னை அம்பத்தூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் வாடகைக்கு ஒரு மினி பஸ்சை பேசி நேற்று இரவு புறப்படனர்.
இந்த மினி பஸ்சில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் மினிபஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே வந்தபோது வண்டியை டிரைவர் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
இதனை அறிந்த பஸ்சில் இருந்தவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து இறக்கி டீ வாங்கி கொடுத்து தூங்கச் சொல்லி உள்ளனர். அதற்கு டிரைவர் தானே வண்டியை ஓட்டி செல்வதாக கூறி வண்டியை மீண்டும் ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மினிபஸ் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அரசு என்ஜினியரிங் கல்லூரி முன்பு வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் கலிமுல்லா உட்பட 22 பேரும் காயமடைந்தனர்.
அப்போது வண்டியில் இருந்தவர் கதறினர். உடனே சாலையோரம் இருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் உடனே கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நிலையில் 17 பேர் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்கு வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் பாதாள சாக்கடையில் மழைநீருடன், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.
- கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் எதிரே சாலையில் தேங்கிய மழைநீரை, தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் லேசாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகலில் மிதமானது முதல் கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், நேற்று மாலை 5.15 மணிக்கு, சூறாவளி காற்று மற்றும் பயங்கர இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மழை 6 மணி வரை நீடித்தது. மேலும், சூறாவளி காற்றால் நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக கிருஷ்ணகிரி தேர்நிலைய தெருவில் மரங்கள் முறிந்து விழுந்ததால், சிமெண்ட் கூரை வீடுகள் சேதமானது.
மேலும், கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் பாதாள சாக்கடையில் மழைநீருடன், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது. 5 ரோடு ரவுண்டனா பகுதியில் பெங்களூரு சாலையிலும், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே செல்லும் சர்வீஸ் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்றனர்.
இதே போல், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும், அதிக சத்ததுடன் இடி, மின்னல் காரணமாக நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் எதிரே சாலையில் தேங்கிய மழைநீரை, தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர். 30 நிமிடங்களில் பெய்த மழையால் நகரில் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழையளவு மில்லிமீட்டரில், அதிகபட்சம் ஓசூரில் 40.3, நெடுங்கல் 33, பெணுகொண்டாபுரம் 17.2, கிருஷ்ணகிரி 16, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளில் தலா 9, போச்சம்பள்ளி 8.5, பாம்பாறு அணை, ராயக்கோட்டையில் தலா 7, பாரூர் 6.8, ஊத்தங்கரை 6.6, அஞ்செட்டி 5.4, சூளகிரி 5, சின்னாறு அணை 4, தேன்கனிக்கோட்டை 3 மில்லி மீட்டர் பதிவானது.
- தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
- அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழைநீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்க தண்ணீர் வந்தது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் கவலை அடைந்தனர்.
இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரையில் சென்ற நிலையில் நேற்று காலை 7 டன் அளவிற்கு மீன்கள் அணையில் செத்து மிதந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
கடந்த வாரம் அணைக்கு வந்த கழிவுநீர் கலந்த நீரால் மீன்கள் செத்தன. நேற்று முன்தினம் இரவிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. தற்போது யாருமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மீன் பிடி தொழிலை நம்பி உள்ள 500-க்கும்மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரத்னம் கூறியதாவது:-
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகே மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்றன்பின் ஒன்றாக 500-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர்.
- காளைகள் முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோவில் தேர்்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை எருதாட்டம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை பேருராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் காளைகளை கொண்டு வந்திருந்தனர்.
போட்டியை காண சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். முதலில் ஊர் காளை அவிழ்த்து விடப்பட்டது.தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக 500-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர்.
இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்ற காளை களை இளைஞர்கள் பாய்ந்து சென்று மடக்கினர். அப்போது, காளைகள் முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
- வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஆலள்ளி, மரகட்டா, ஜார்க்கலட்டி, நொகனூர், நெல்லுக்குந்தி, ஜவளகிரி, அய்யூர், அஞ்செட்டி போன்ற பகுதிகளில் தனித்தனியாக ஒற்றை காட்டு யானைகள் சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காட்டு யானைகள் தாக்கி கடந்த 2 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில், உள்ள திப்ப சந்திரம் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு உணவுத் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்துள்ளது. இரவு நேரத்தில் கிராமத்தின் அருகே வந்த காட்டு யானை, அங்குள்ள வீட்டின் முன்பு நின்ற நாய்களை பிளிறியபடி துரத்தி சென்றது.
இந்த காட்சிகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நீண்ட நேரம் சுற்றித்திரிந்த அந்த யானை, பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது.
இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல்அளித்தனர். விரைந்த வந்த வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், அச்சுறுத்தி வரும் காட்டுயானையை அடர்ந்தவனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது.
- கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இந்த ஆண்டில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல், மார்ச் 25-ந் தேதி வரை இரண்டு முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. மூன்றாவது முறையாக கடந்த மார்ச் 31-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், மே 7-ந் தேதி முதல் 9&ந் தேதி வரை மூன்று நாட்கள் அணைக்கு நீர்வரத்து இருந்த நிலையில் பின்னர் மழையின்றி நான்காவது முறையாக மே 10 முதல் நேற்று வரை 5 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் நேற்று காலை 1,126 கன அடியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தடைந்தது. கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து அணைக்கு நீர் வந்ததால், அணையின் மேல் பகுதியில் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை வரையில் வளர்ந்திருந்த மீன்கள் செத்து மிதந்தன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வந்த அசுத்தமான நீரால், 3 டன் அளவிற்கு மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 40.20 அடியாக இருந்தது.
- கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 12,716 மாணவர்கள் 12,425 மாணவிகள் என மொத்தம் 25,141 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் தேர்வு எழுதிய 12716 மாணவர்களில் 11345 பேரும், 12425 மாணவிகளில் 11642 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 22987 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 6.07 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜேந்திரன் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார்.
- யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்படதக்கது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டுள்ளன. மேலும் இலை, தழைகளும், காய்ந்து சருகாகி வருவதால், வன விலங்கினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதனால், பயிர் சேதம் ஏற்படுவதோடு உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.
தேன்கனிக்கோட்டைம் அருகே ஆலள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்(வயது 48)என்பவர், இன்று காலை விவசாய நிலத்திற்கு சென்றார்.
அப்போது, அங்கு வந்த ஒற்றை யானையை கண்டு திடுக்கிட்டார். திடீரென ராஜேந்திரனை நோக்கி வந்துள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார். இதில், அந்த யானை ராஜேந்தரின் வலது காலை மிதித்து, தும்பிக் கையால் தூக்கி வீசி விட்டு சென்றது.
ஒற்றை யானை தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் வன துறையினரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேன்கனிகோட்டை டி.எஸ்பி. சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையிடம் சிக்கி விவசாயி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அப்பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்படதக்கது.






