என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு உறுப்பினர் படிவங்கள் வினியோகம் செய்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

    முதல் கட்டமாக ஒரு சட்டசபை தொகுதிக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். காமராஜர் பிறந்தநாளுக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

    கட்சி தேர்தல் குறித்து இன்று சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன்.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்திருக்கிறார்கள். டெங்குவை தடுக்க சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவை ஒழிக்க மத்திய அரசு மாநில அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளில் இருதய, சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்கு செலவு அதிகம் ஆவதால் ஏழை - எளியோருக்கு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதை வேண்டுகோளாக தமிழக அரசுக்கு வைக்கிறேன்.



    தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் மெரினாவில் போலீஸ் அனுமதியுடன் நடிகர் சிவாஜி சிலை வைக்கப்பட்டது. தற்போது சிவாஜி சிலை அகற்றப்பட்டு இருப்பது சரியல்ல. சிவாஜி உலக புகழ் பெற்ற மிகப்பெரிய நடிகர்.

    காங்கிரசில் காமராஜருக்கு வலது கையாக திகழ்ந்தவர். அவரது சிலையை மீண்டும் மெரினாவில் வைக்க வேண்டும்.

    அடுத்த காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் ஜெயிலில்தான் நடக்கும் என்று சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். அவர் எப்போதும் கேலி-கிண்டலாக பேசி வருபவர். அதனால் அவரது பேச்சை நான் பொருட்படுத்தவில்லை.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு பேச்சுவார்த்தை நடக்கும்.

    அன்புமணி, அமைச்சர் செங்கோட்டையனை மேடையில் விவாதிக்க அழைப்பது குஸ்தி போடுவது போன்று இருக்கிறது. இதை நான் விளையாட்டாக பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்தியவரையும், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் திருச்சியை சேர்ந்த பக்ரூதீன் (வயது 51) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்து இருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை என்பதால் அவரை வெளியே அனுப்பிவிட்டனர்.

    ஆனால் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அவர் விமான நிலையத்தில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு அதன் பிறகு வெளியே செல்ல முயன்றார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை மீண்டும் அழைத்துவந்து சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் இருந்த உடைமைகளில் கருப்பு நிற பொட்டலம் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 18 தங்க கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    முதலில் சோதனை செய்தபோது இல்லாத தங்கம் பின்னர் எப்படி வந்தது? என குழம்பிய அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது பக்ரூதீன் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வரும்போது குடியுரிமை சோதனைக்கு முன்னர் விமான நிலைய தற்காலிக ஊழியர் மணிகண்டன் (31) என்பவரிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்துவிட்டு வருகிறார்.

    குடியுரிமை சோதனை முடிந்து பக்ரூதீன் வெளியே வந்ததும் அந்த பொட்டலத்தை மணிகண்டன் மீண்டும் அவரிடம் தருவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து தங்கம் கடத்திவந்த பக்ரூதீன் மற்றும் அவருக்கு உதவிய விமான நிலைய தற்காலிக ஊழியர் மணிகண்டன் இருவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

    மணிகண்டன், இதேபோல் தங்கம் கடத்தலுக்கு மேலும் பலருக்கு உதவியுள்ளாரா? வேறு ஊழியர்கள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? பக்ரூதீனுக்கு சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குரோம்பேட்டையில் அரசு பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் நடுவீரப்பட்டு கிராமம் எட்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி கோமதி. குரோம்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது கூடுவாஞ்சேரி-வடபழனி மாநகர பஸ் கோமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவர் பழனியிடம் விசாரித்து வருகிறார்கள்.

    நீலாங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தல் நகர் வடக்கு 18-வது தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுமதி (38), இவர்கள் கிண்டியில் மகளிர் தங்கும் விடுதிகள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இவர்கள் வீட்டை பூட்டி விட்டு கிண்டி விடுதிக்கு சென்று விட்டனர். அங்கிருந்து நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புறக்கதவு பூட்டியபடியே இருந்தது.

    அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆதம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வருகிறார்.

    பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந்தேதி ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது கத்தி முனையில் அவரை மிரட்டி ஒரு வாலிபர் கற்பழித்தார்.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் இது தொடர்பாக இன்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம்தான் முடிவு எடுக்க வேண்டும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து நேற்று இரவு வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நானும், முதல்-அமைச்சரும் பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம். அதற்கு பிரதமர் ஆவண செய்வதாக கூறி உள்ளார். அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    நீட் தேர்வு முடிந்து போன பிரச்சனை. தற்போது மாணவர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும். சட்ட விதிகளுக்குட்பட்டு மாணவர்களை சேர்க்க பிரதமர் ஆலோசித்து வருகிறார்.

    தமிழக சட்டசபையில் இரண்டு முறை நீட் தேர்வில் விலக்கு கோரிய தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களின் ஆய்வில் இருக்கிறது. அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், பாதி அளவு நாங்கள் வந்து விட்டதாக கூறி உள்ளார். அவருக்கே நாங்கள் பாதி அளவு வந்து விட்டது தெரிகிறது. மீதி பாதி அளவில் அவர்கள்தான் வர வேண்டும்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை பற்றி ஆட்சியாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நான் எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் 7 அடி உயர முழு உருவ எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி திறந்து வைக்கிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் 7 அடி உயர முழு உருவ எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் திறக்கப்பட உள்ளது.



    இந்த சிலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை வைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளின் உயரம், அதன் மாதிரி வடி வங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சிலைகளை வைப்பதற்கான இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், வி.சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 5 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியை நகராட்சி தனி அலுவலர் சர்தார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் என்ஜினீயர் மகேந்திரன், நகரமைப்பு அலுவலர் முரளி, உதவி பொறியாளர் சத்தியசீலன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணி காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) சுதந்திரத்தினத்தன்று 633 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) சுதந்திரத்தினத்தன்று 633 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் தனி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் இந்த கிராம சபைக்கூட்டம் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பான சிக்கன நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல், சுற்றுப்புறங்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாம்பரத்தில் 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் டிரைவர். இவரது மகன் தேஜஸ்வரன் (வயது 4). அவனுக்கு கடந்த 9-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் காய்ச்சல் குறையாததால் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தேஜஸ்வரனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தான். தாம்பரத்தில் 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியானதால் பரபரப்பு நிலவுகிறது.

    காஞ்சீபுரம் அருகே விபத்துக்களில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (45) விவசாயி. இவர் காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு செல்ல அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் சின்னகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (23). தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வரதராஜபுரம் என்ற பகுதியில் மினிலாரி மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் இருந்த விஜய் (24), நாராயணன் (27) ஆகியோர் படுகாயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கிசிக்சை பெற்று வருகின்றனர். சோமங்கலம் போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.

    காஞ்சீபுரம் அடுத்த உத்திரமேரூர் தாலுகா நெல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (50) விவசாயி. இவர் அருகில் உள்ள பாக்கம் கிராம சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

    அணுமின்நிலைய ஊழியர் கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய ஆராய்ச்சி மையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் ஆண்ட்ரூஸ் ராஜய்யா (52). நேற்று காலை அவர் கல்பாக்கத்தை அடுத்த இளையனார் குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    விசாரணையில் மதுக் கடை அருகே காலி பாட்டில்களை எடுத்து விற்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் ஆண்ட் ரூஸ் ராஜய்யாவை கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தன்னை தரக்குறைவாக பேசியதால் ஆன்ட்ரூஸ் ராஜயாவை ஆத்திரத்தில் கொலை செய்ததாக பூபதி தெரிவித்துள்ளார்.

    தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் பாதி வந்துவிட்டார்கள் என்றும், மீதி வரட்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    ஆலந்தூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும்போது, “டெல்லியில் துணை ஜனாதிபதி பதவி பிரமாண விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்து உள்ளது. அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறேன்” என்றார்.

    மேலும் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என கோரி இருந்தீர்கள். ஆனால் தற்போது டி.டி.வி.தினகரன் நியமனம் செய்த அறிவிப்புகள் செல்லாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதே?



    பதில்:- கடந்த 6 மாதங்களுக்கு முன் நாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்தின் போது சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர்கள் கருத்துகளை அறிக்கையின் மூலம் தீர்மானமாக கொண்டு வந்து உள்ளார்கள். பாதி வந்து உள்ளார்கள். மீதி வரட்டும். அதன் பின்னர் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம்.

    கேள்வி:- நீங்கள் அறிவித்த 2 பிரதான கோரிக்கைகளை ஏற்றால்தான் இணைப்புக்கு சாத்தியமா?

    பதில்:- ஏற்கனவே நாங்கள் எங்கள் முடிவை சொல்லிவிட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாறுதலும் கிடையாது.

    கேள்வி:- டெல்லிக்கு செல்லும் நீங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச வாய்ப்பு இருக்குமா?

    பதில்:- இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை.

    கேள்வி:- பதவி ஆசைக்காக தான் நாடகம் ஆடுகிறார்கள் என்று தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரே?

    பதில்:- யார் நாடகம் ஆடுகிறார்கள்?

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கூறி இருக்கிறார்?

    பதில்:- அவர்களைத்தான் கூறி இருக்கிறார். எங்களை எதுவும் கூறவில்லையே.

    கேள்வி:- தலைவர்கள் பேசவேண்டும். இரு அணிகளும் இணைய வேண்டும் என தொண்டர்கள் விருப்பப்படுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன?

    பதில்:- இரு அணிகளும் இணைந்தால் அது, தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கேள்வி:- இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

    பதில்:- இணைப்புகளுக்கான வாய்ப்பு இருந்தால் முதலில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×