search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் பெண்"

    ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக மணிப்பூர் பெண் தொடர்ந்த வழக்கில், சென்னை போலீஸ் கமிஷனர் பதில் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சோம்ரின் வாஷினோ டேவிட்(வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பேமின் ஆப்ரா டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். இதற்கு எங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், என் சகோதரி வில்லிவாக்கத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    என் தாயார் உடல்நலம் சரியில்லை என்று கூறி என்னை மட்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து சென்றார். பின்னர், என்னை அங்கு என் உறவினர்கள் சிறை பிடித்து வைத்தனர்.

    இதையடுத்து என் கணவர் ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போலீசார், என்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். நான் உறவினர்களுக்கு பயந்து, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினேன். இதையடுத்து உறவினர்களுடன் சேலையூரில் வசித்து வந்தநான், மீண்டும் என் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

    இதையடுத்து என் உறவினர்கள் மிரட்டினார்கள். அவர்கள் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதி முன்பு ஆஜரான நான், கணவருடன் வாழ விரும்புவதாக கூறினேன்.

    பின்னர், என்னை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டிற்கு என் உறவினர்கள் அழைத்து சென்றனர். அவர், என்னை பெற்றோருடன் செல்லுமாறு வற்புறுத்தினார். இதை நான் கேட்கவில்லை. என் கணவருடன் நான் சென்றுவிட்டேன். அதன்பின்னரும், என்னை என் உறவினர்கள் மிரட்டியதால், வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பின்னர் என் உறவினர்கள் எனக்கு எதிராக வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது என் குடும்பத்தினருடன் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    நான் கணவருடன் செல்ல விரும்புவதாக கூறியதால், வில்லிவாக்கம் போலீசாரால் எதையும் செய்ய முடியவில்லை. அதேநேரம், விசாரணை என்ற பெயரில் அடிக்கடி என் வீட்டிற்கு வந்தனர். இதனால் என்னுடைய திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பின்னர், தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தில் விசாரணை நடப்பதாகவும், அந்த விசாரணைக்கு செல்ல வேண்டும் என்றும் வில்லிவாக்கம் போலீசார் என்னை கட்டாயப்படுத்தினர். நான் கணவருடன், அந்த விசாரணை ஆணையத்துக்கு சென்றபோது, என் பெற்றோருடன் ஏராளமானோர் வந்திருந்தனர். 4,5 கிறிஸ்துவ மதபோதகர்களும் அங்கு வந்திருந்தனர்.

    அவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தங்களை அனுப்பிவைத்துள்ளதாக கூறினார்கள். அதேபோல, ரெயில்வே பாதுகாப்பு உயர் போலீஸ் அதிகாரி அங்கு வந்து என்னையும், என்கணவரையும் மிரட்டினார். பெண்கள் ஆணையத்தின் வெளியில் நின்ற வாகனத்தில் இருந்த போலீசாரும், எங்களை மிரட்டினார்கள்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கரின் தூண்டுதலின் பேரில்தான், இத்தனை பேரும் எங்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். என்னை கணவரிடம் இருந்து பிரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் முயற்சிக்கிறார். என் உடலில் தீய ஆவி புகுந்துள்ளதாகவும், அதை விரட்ட வேண்டும் என்றும் உமா சங்கர் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், மருத்துவ பரிசோதனைக்கு உட்படும்படி என்னை பெண்கள் நல ஆணையம் வற்புறுத்துகிறது.

    விருப்பம் இல்லாமல், என்னை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த முடியாது. மேலும், என்னை மிரட்டுவதால், போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த ஆகஸ்டு 28ந்தேதிக்கு புகார் செய்தேன். ஆனால், என் புகாரை வாங்க அவர் மறுத்துவிட்டார்.

    மேலும், வில்லிவாக்கம் போலீசார் என்னையும், என் கணவரையும் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். அவ்வாறு எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதி பி.என். பிரகாஷ் விசாரித்தார். பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமி‌ஷனர், வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
    ×