என் மலர்
நீங்கள் தேடியது "worker murder case"
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 24). இவர் அங்கு சொந்தமாக செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்த சூளையில் அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (40) என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லையாம். இவர் அங்குள்ள வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
வேல்முருகனின் உடன் பிறந்த அண்ணன் முத்துப்பாண்டி (45). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்து உள்ளது. இது சம்பந்தமாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சினையில் வேல்முருகன் மீது, முத்துப்பாண்டி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு செங்கல் சூளைக்கு பைக்கில் முத்துப்பாண்டி வந்துள்ளார். பின்னர் வேல்முருகன் தங்கியிருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த வேல்முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் தம்பி என்றும் பாராமல் தலையில் வெட்டியுள்ளார். இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு சூளை உரிமையாளர் கருப்பசாமி வந்துள்ளார். இதை பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு முத்துப்பாண்டி தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தப்பி ஓடிய முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #murder






