என் மலர்
காஞ்சிபுரம்
துரைப்பாக்கம் சந்திரசேகர் அவென்யூவை சேர்ந்தவர் பிரிட்டோ (40). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஆன் லைனில் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த டிப்-டாப் வாலிபர்கள் 2 பேர் இன்று காலை பிரிட்டோ வீட்டுக்கு வந்தனர்.
விற்பனைக்குரிய காரை பார்த்த அவர்கள் பணம் முழுவதையும் உடனடியாக கொடுத்து வாங்க இருப்பதாக கூறினர். அதற்கு முன்னதாக காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்றனர்.
அவர்களது பேச்சை நம்பிய பிரிட்டோ அதற்கு சம்மதித்தார். அதன்பின்னர் காரை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்களும் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. எனவே காருடன் அவர்கள் மாயமாகி விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கண்ணகி நகர் போலீசில் பிரிட்டோ புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரையும், அதை ஓட்டிச் சென்ற வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலை கடற்கரையில் அரிய வகையான ஆலிவ்ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. இது சுமார் 3 அடி நீலமும், 2 அடி அகலமும் இருந்தது.
இதையடுத்து வனத்துறை மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்குனர் சுப்ரஜா தாரணி ஆகியோர் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது நீலாங்கரை கபாலீஸ்வரர் கடற்கரையில் ஆமைகள் முட்டையிட்டு சென்றிருப்பது தெரிந்தது. அதனை பாதுகாப்பாக எடுத்தனர். மொத்தம் 132 முட்டைகள் சேகரிக்கப்பட்டது.
இது குறித்து சுப்ரஜா தாரணி கூறும்போது, “ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆமைகளின் இனபெருக்க காலம் ஆகும். சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் கடற்கரை மணற்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து குழி தோண்டி பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.
குளிர் காலத்தில் 52 நாட்களிலும், கோடை காலத்தில் 45 நாட்களுக்குள்ளும் குஞ்சு பொறித்து தானாக வெளியே வந்து கடலுக்குள் சென்று விடும்” என்றார்.
காஞ்சீபுரம்:
பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
இன்று காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் (எண்.148) வந்து கொண்டிருந்தது.
பஸ்சை தற்காலிக டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த நேதாஜி ஓட்டினார். சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். உடனே மர்ம நபர்கள் இருவரும் பஸ்சின் கண்ணாடிகள் மீது மேலும் கல்வீசி நொறுக்கி தப்பி சென்றுவிட்டனர்.
இதில் டிரைவர் நேதாஜி பலத்த காயம் அடைந்தார். பயந்து போன பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த டிரைவர் நேதாஜி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அங்கிருந்து சென்றனர்.
உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அரசு பஸ் சென்றது. குமாரவாடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி தப்பினர்.
இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. இந்த 2 கல்வீச்சு சம்பவத்திலும் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். இது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவான்மியூர்:
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர் சர்வேஸ்வரன் (வயது 19). தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது நண்பர் சுபாஷ். விழுப்புரத்தை சேர்ந்த அவர் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் நேற்று மாலை நீலாங்கரையில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றனர். ராட்சத அலையால் இருவரும் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி இறந்தனர்.
இருவரது உடல்களும் இன்று காலை கரை ஒதுங்கியது. நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெரீனாவில் கண்ணகி சிலை பின்புறம் மணிப்பூரை சேர்ந்த லால்ராம் என்ற வாலிபர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடலில் இறங்கி குளித்தார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் தத்தளித்தனர். இதனைப் பார்த்த மீனவர்கள் கடலில் குதித்து அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் லால்ராம் உயிரிழந்தார். மீட்கப்பட்ட நண்பர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 35). பாரதிய ஜனதா கட்சியில் காஞ்சீபுரம் ஒன்றிய செயலாளராக இருந்தார்.
இவர் வேடல் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். தினமும் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளில் வேடல் நோக்கி சென்றார். கீழம்பி கூட்டு சாலையில் வந்தபோது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து பாலு செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் டிரைவரை தேடி வருகிறார்.#tamilnews
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் குறைவான பஸ்களே தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன.
இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர். பெரும் பாலானோர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ததால் அங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டது. அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 பணிமனைகளில் 740 பஸ்கள் உள்ளன. இன்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 370 பஸ்கள் இயக்கப்பட்டன.
கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்கள் ஆட்டோ, வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் ஏராளமானோர் பஸ் கிடைக்காமல் தவிப்புடன் நின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
செங்கல்பட்டு பணிமனையில் 105 பஸ்களில் 20 பஸ்கள் மட்டும் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப் பட்டது.
இதனால் தனியார் வேன், ஷேர் ஆட்டோ, ஆட் டோக்களில் கூட்டம் அலைமோதியது.. தனியார் பஸ்கள் அதிக அளவில் ஓடின. கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பல பஸ்களில் பயணிகளுக் கும், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுராந்தகம் பணிமனையில் இருந்து 54 பஸ்களில் 10 பஸ்கள் ஓடின.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளில் திருவள்ளூரில் 64, திருத்தணியில் 76, ஊத்துக் கோட்டையில் 46, பொன்னேரியில் 50, பொதட்டுர் பேட்டையில் 13 கோயம்பேடு பகுதி இரண்டு 28 என மொத்தம் 277 பஸ்கள் உள்ளன.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக திருவள்ளூரில் 25, ஊத்துக்கோட்டையில் 20, திருத்தணியில் 43, பொதட்டுர் பேட்டையில் 5, பொன்னேரியில் 28 பஸ்களும் மொத்தம் 85 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
குறைவான பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களை தேடி ஓடினர். புறநகர் பகுதிக்கு செல்பவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். இதனால் திருவள்ளூர் ரெயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.
திருவள்ளூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் லோடு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர்.
மாணவர்கள் இலவச பஸ்பாசை அரசு பஸ்களில் காண்பித்தபோது அதனை ஏற்க தற்காலிக கண்டக்டர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தற்காலிக டிரைவர்கள் ஓட்டும் பஸ்கள் விபத்தில் சிக்குவதாக கூறுகின்றனர். இதனால் குறைந்த அளவு பஸ்கள் ஓடினாலும் அதில் பயணம் செய்ய தயக்கமாக உள்ளது. தனியார்கள் பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு முடிவு எட்டவேண்டும்’ என்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தாம்பரம் டெப்போவில் 90 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று 79 பஸ்கள் ஓடின. குரோம்பேட்டை பணிமனையில் 210 பஸ்களில் 110 பஸ்கள் இயங்கின.
பூந்தமல்லி பணிமனையில் 161 பஸ்களில் 80 பஸ்கள் ஓடின. குன்றத்தூர் பணிமனையில் 29 பஸ்களில் 22 பஸ்கள் இயக்கப்பட்டது.
பாடியநல்லூர் பணிமனையில் மொத்தம் 74 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று 36 பஸ்கள் மட்டும் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டது.
திருவான்மியூர் டெப்போவில் 106 பஸ்களில் 7 வண்டிகளும், அடையாறு பணிமனையில் 142 பஸ்களில் 20 பஸ்களும் ஓடின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து 40 சதவீத மாநகர பஸ்கள் ஓடின. சென்னை மாநகரத்துக்குள் 40 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல ஆரணி, காஞ்சீபுரம், வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று காலை நிலவரப்படி 50 தனியார் பஸ்கள் சென்றன. 30 அரசு விரைவு பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டன. #tamilnews
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் பாண்டியன் (27). வியாபாரி. இவர் காஞ்சீபுரத்தில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
வேளியூர் அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அருள்பாண்டியனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். #tamilnews
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரத்தில் உள்ள ஒரு குடோனில் செம்மரகட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக டி.எஸ்.பி. சிலம்பரசனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
போலீசார் குடோனுக்குள் சென்ற போது அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணன், சிதம்பரத்தை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரிய வந்தது.
குடோனில் சோதனை செய்த போது 622 செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செம்மர கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் குடோனில் உரிமையாளர் பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பஸ் சேவை பெருமளவில் முடங்கி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், மதுராந்தகம், கல்பாக்கம், தாம்பரம், உத்தரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 பணிமனைகளில் இருந்து நாள் தோறும் 510 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 100 பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சீபுரம் பணிமனையில் இருந்து தினந்தோறும் 51 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் இன்று காலை 21 பஸ்கள் ஓடின.
ஓரிக்கையில் உள்ள 2 பணிமனைகளில் இருந்த 73 பஸ்களில் 15 பஸ்களே இயங்குகின்றன. பஸ் சேவை குறைந்ததால் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர். அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
காஞ்சீபுரம் பஸ்நிலை த்தில் இருந்து அதிக அளவிலான பயணிகள் சென்னை தாம்பரத்துக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். ஸ்டிரைக் காணமாக அருகில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிக அளவில் தாம்பரத்துக்கு இயக்கப்பட்டன.
திருவொற்றியூர், எண்ணூர் பஸ் பணிமனையில் இருந்து குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவொற்றியூர் பணிமனையில் 107 பஸ்கள் உள்ளன. இதில் 20 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. எண்ணூர் பணிமனையில் 67 பஸ்கள் உள்ளன. இதில் 10 பஸ்கள் மட்டுமே ஓடின.
இங்கிருந்து பாரிமுனை வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படவில்லை.
பூந்தமல்லி போக்குவரத்து பணிமனையில் 160 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 34 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. குன்றத்தூர் பணிமனையில் 29 பஸ்கள் உள்ளன. இதில் 7 பஸ்கள் மட்டுமே ஓடின.
கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா, பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லி வழியாகவே செல்கின்றன. இதனால் பூந்தமல்லியில் இருந்து இந்த பஸ்களில் பயணிகள் ஏறுவது வழக்கம்.
இன்று குறைவான பஸ்களே இயக்கப்பட்டதால் பூந்தமல்லியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ் கிடைக்காமல் அவர்கள் தவித்தனர். பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருவான்மியூர் போக்குவரத்து பணிமனையில் 100 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 5 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அடையாறு போக்குவரத்து பணிமனையில் 142 பஸ்கள் உள்ளன. இதில் 56 பஸ்கள் ஓடின. அந்த பஸ்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
பாரிமுனையில்இருந்து கோவளத்துக்கு மாநகர பஸ் புறப்பட்டு சென்றது. திருவான்மியூர் சிக்னல் அருகே அந்த பஸ்சை போக்குவரத்து தொழிலாளர்கள் மறித்தனர். அதில் இருந்த பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டனர்.
இதனால் போக்குவரத்து ஊழியர்களுடன் பயணிகள் தகராறு செய்தனர். கோவளம் செல்ல வேண்டுமானால் ஆட்டோவுக்கு ரூ. 500 வரை கேட்பார்கள். பஸ்சை இயக்குங்கள் அல்லது ஆட்டோவில் செல்ல ரூ. 500 கொடுங்கள் என்று பயணிகள் போக்குவரத்து தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் பணிமனையில் 190 பஸ்கள் உள்ளன. இதில் 48 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. குரோம்பேட்டை பணிமனையில் 200 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலையில் 50 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் திருவள்ளூரில் 64, திருத்தணியில் 76, ஊத்துக்கோட்டையில் 46, பொன்னேரியில் 50, பொதட்டூர்பேட்டையில் 13, கோயம்பேடு பகுதி-2ல் 28 என மொத்தம் 277 பஸ்கள் உள்ளன.
போராட்டம் காரணமாக திருவள்ளூரில் 8, ஊத்துக்கோட்டையில் 10, திருத்தணியில் 13, பொன்னேரியில் 26, கோயம்பேடு பகுதி-2ல் 28 பஸ்கள் என மொத்தம் 85 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் பஸ்சுக்காக காத்திருந்த பொது மக்களும், மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் சாலைகளில் தவித்தனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு இயங்கும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. சிலர் பல மணி நேரம் காத்திருந்து வேன், ஷேர் ஆட்டோக்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கட்டணத்தை வசூலித்தனர்.
மதுராந்தகம் பணிமனையில் இருந்து 54 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று காலை 17 பஸ்கள் தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்கப்பட்டது. போக்குவரத்து பணிமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அரசு பணிமனையில் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம், கல்பாக்கம், காஞ்சீபுரம், உத்தரமேரூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் 17 பஸ்கள் மட்டுமே இன்று ஓடின. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையங்களில் ஏராளமானோர் காத்துக் கிடந்தனர்.
பொன்னேரி பணிமனையில் இருந்து 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. பழவேற்காடு, அண்ணாமலைசேரி, கள்ளூர், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஷேர் ஆட்டோ, ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் மொத்தம் 56 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 5 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ, வேன் டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்தனர்.
விழுப்புரம் சென்னை- திருச்சி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கமலக்கண்ணன்(21). இவர் காஞ்சீபுரம் இளமை நகர் பகுதியில் தங்கியிருந்து காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் தனது தந்தையிடம் தனக்கு பணம் அனுப்பிவிட போன் செய்தார். ஆனால் அவர் பணம் அனுப்ப தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கமலக்கண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் விரைந்து வந்து பிணத்தை விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் குழந்தைகள், இளைஞர்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நேரில் கண்டுகளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை முடிவு செய்தது.
மாமல்லபுரம் அடுத்த கிருஷ்னன்காரனை கிழக்கு கடற்கரை சாலையோரம் நடத்த திட்டமிட்டு அதற்காக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூருராகும் என்பதால் கல்பாக்கத்தில் இருந்து 15கி.மீ தூரத்தில் உள்ள சீக்கினாங்குப்பம் மார்க் சுவர்ணபூமி அருகே நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து 400-க்கு மேற்பட்ட காளைகள் 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை வர வைத்து வரும் ஜன 7-ம்தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கும்பணி நடந்து வருகிறது. #tamilnews
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் புரதான சின்னங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை காண வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை தாங்களே ஓட்டிச் செல்லவும் விரும்பி வந்தனர். இதற்கு சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் சேலஞ் அமைப்பினர் உதவி செய்து வருகிறார்கள். இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் ஆட்டோ ஓட்ட பயிற்சி கொடுக்கிறார்கள்.
பின்னர் ஒரு ஆட்டோவில் 2 பயணிகள் மட்டும் செல்ல அனுமதித்து ஆட்டோ வழங்கப்படுகிறது. ஒரு வாரத்தில் 950 கி.மீட்டர் ஆட்டோ ஓட்டி பயணிக்க அனுமதி அளிக்கிறார்கள். அந்த ஆட்டோவை வெளிநாட்டு பயணிகளே ஓட்டி தாங்கள் செல்லும் இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.
சென்னையில் இருந்து புறப்படும் அவர்கள் மெரினா கடற்கரை, மாமல்லபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஏற்காடு உள்ளிட்ட இடங்களை பார்த்த பின்னர் மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.
இந்த பயணத்துக்கு “ரிச்சா சேலஞ்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறும்போது, “இந்த ஆட்டோ பயணம் திரில்லாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சுற்றுலா செல்லும் அனுபவம் கிடைத்தது. இதனை நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பா நாடுகளில் பிரபலமான இந்த ஆட்டோ சுற்றுலா இப்போது தமிழ்நாட்டிலும் பிரபலமாகிறது” என்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆட்டோவில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மற்றும் நவீன கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews






