என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் போக்குவரத்து முடங்கியது
    X

    காஞ்சீபுரம்-திருவள்ளூரில் போக்குவரத்து முடங்கியது

    ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பஸ் சேவை பெருமளவில் முடங்கி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், மதுராந்தகம், கல்பாக்கம், தாம்பரம், உத்தரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 பணிமனைகளில் இருந்து நாள் தோறும் 510 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 100 பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

    காஞ்சீபுரம் பணிமனையில் இருந்து தினந்தோறும் 51 பஸ்கள் இயக்கப்படும் நிலையில் இன்று காலை 21 பஸ்கள் ஓடின.

    ஓரிக்கையில் உள்ள 2 பணிமனைகளில் இருந்த 73 பஸ்களில் 15 பஸ்களே இயங்குகின்றன. பஸ் சேவை குறைந்ததால் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர். அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    காஞ்சீபுரம் பஸ்நிலை த்தில் இருந்து அதிக அளவிலான பயணிகள் சென்னை தாம்பரத்துக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். ஸ்டிரைக் காணமாக அருகில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிக அளவில் தாம்பரத்துக்கு இயக்கப்பட்டன.

    திருவொற்றியூர், எண்ணூர் பஸ் பணிமனையில் இருந்து குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.

    திருவொற்றியூர் பணிமனையில் 107 பஸ்கள் உள்ளன. இதில் 20 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. எண்ணூர் பணிமனையில் 67 பஸ்கள் உள்ளன. இதில் 10 பஸ்கள் மட்டுமே ஓடின.

    இங்கிருந்து பாரிமுனை வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படவில்லை.

    பூந்தமல்லி போக்குவரத்து பணிமனையில் 160 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 34 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. குன்றத்தூர் பணிமனையில் 29 பஸ்கள் உள்ளன. இதில் 7 பஸ்கள் மட்டுமே ஓடின.

    கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா, பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லி வழியாகவே செல்கின்றன. இதனால் பூந்தமல்லியில் இருந்து இந்த பஸ்களில் பயணிகள் ஏறுவது வழக்கம்.

    இன்று குறைவான பஸ்களே இயக்கப்பட்டதால் பூந்தமல்லியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ் கிடைக்காமல் அவர்கள் தவித்தனர். பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருவான்மியூர் போக்குவரத்து பணிமனையில் 100 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 5 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அடையாறு போக்குவரத்து பணிமனையில் 142 பஸ்கள் உள்ளன. இதில் 56 பஸ்கள் ஓடின. அந்த பஸ்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

    பாரிமுனையில்இருந்து கோவளத்துக்கு மாநகர பஸ் புறப்பட்டு சென்றது. திருவான்மியூர் சிக்னல் அருகே அந்த பஸ்சை போக்குவரத்து தொழிலாளர்கள் மறித்தனர். அதில் இருந்த பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டனர்.

    இதனால் போக்குவரத்து ஊழியர்களுடன் பயணிகள் தகராறு செய்தனர். கோவளம் செல்ல வேண்டுமானால் ஆட்டோவுக்கு ரூ. 500 வரை கேட்பார்கள். பஸ்சை இயக்குங்கள் அல்லது ஆட்டோவில் செல்ல ரூ. 500 கொடுங்கள் என்று பயணிகள் போக்குவரத்து தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தாம்பரம் பணிமனையில் 190 பஸ்கள் உள்ளன. இதில் 48 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. குரோம்பேட்டை பணிமனையில் 200 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலையில் 50 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் திருவள்ளூரில் 64, திருத்தணியில் 76, ஊத்துக்கோட்டையில் 46, பொன்னேரியில் 50, பொதட்டூர்பேட்டையில் 13, கோயம்பேடு பகுதி-2ல் 28 என மொத்தம் 277 பஸ்கள் உள்ளன.

    போராட்டம் காரணமாக திருவள்ளூரில் 8, ஊத்துக்கோட்டையில் 10, திருத்தணியில் 13, பொன்னேரியில் 26, கோயம்பேடு பகுதி-2ல் 28 பஸ்கள் என மொத்தம் 85 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் பஸ்சுக்காக காத்திருந்த பொது மக்களும், மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் சாலைகளில் தவித்தனர்.

    திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு இயங்கும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. சிலர் பல மணி நேரம் காத்திருந்து வேன், ஷேர் ஆட்டோக்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கட்டணத்தை வசூலித்தனர்.

    மதுராந்தகம் பணிமனையில் இருந்து 54 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று காலை 17 பஸ்கள் தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்கப்பட்டது. போக்குவரத்து பணிமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு அரசு பணிமனையில் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம், கல்பாக்கம், காஞ்சீபுரம், உத்தரமேரூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் 17 பஸ்கள் மட்டுமே இன்று ஓடின. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையங்களில் ஏராளமானோர் காத்துக் கிடந்தனர்.

    பொன்னேரி பணிமனையில் இருந்து 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. பழவேற்காடு, அண்ணாமலைசேரி, கள்ளூர், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    ஷேர் ஆட்டோ, ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் மொத்தம் 56 பஸ்கள் உள்ளன. இதில் இன்று காலை 5 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ, வேன் டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்தனர்.
    Next Story
    ×