என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆளுங்கட்சியை பயன்படுத்தி ஒருசிலர் இரவில் டிராக்டர் மூலமாக மணல் கடத்துகிறார்கள்.
இதை மாவட்ட கலெக்டர், தாசில்தார் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி அடித்து துரத்தி விட்டு அவர்களின் படகுகளை எடுத்து சென்று விடுகின்றனர். மீனவர்களையும் கைது செய்கின்றனர். பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மீனவர்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பா.ஜனதா. ஆனால் காங்கிரஸ் ஆட்சியின்போது மீனவர்களையும், படகுகளையும் பிடித்து செல்வார்கள். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களை விடுதலை செய்வார்கள்.

ஆனால் பா.ஜனதா ஆட்சியில் பிடிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகள் பயனற்று போய்விட்டது. மேலும் ஒருசில படகுகளை மீட்டு கொண்டு வந்தாலும் அதை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மீனவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது. மத்திய- மாநில அரசுகளின் ஊழல்கள் பொய்களை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் இந்தமாத இறுதியில் நடத்த இருக்கிறோம்.
சபரிமலையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் சமம் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வருகிற பெண்களை தாக்குவது, கார் கண்ணாடியை உடைப்பது என்று வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்றம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து அதை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஒரு முதல்-அமைச்சர் மீதே சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் பல அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் முன்பிருந்த ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதுபோல் பேசுவது சரியானதல்ல. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #SabarimalaVerdict #Thirunavukkarasar
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஷேர் ஆடடோவுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர். அப்போது சென்னையில் இருந்து வேலூரை நோக்கி ஊர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி வேகமாக சென்றது.
சாலையின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க லாரிய டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிங்காடிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செண்பகவள்ளி (45), இவரது மகள் கனிமொழி (20), லாரி டிரைவர் அரவிந்தன் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை சுங்குவார்சந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மீட்டு சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ். இவருடைய வீடு அங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ளது.
நேற்று ராஜேஷ், தனது வீட்டின் அருகே எரு போடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் பெரிய கற்கள் இருப்பது போல தெரிந்தது. மேலும், தோண்டியபோது 4 கற்சிலைகள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது அவை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் சாமி சிலைகள் என்பது தெரிய வந்தது. அவை 2 அடி உயரம் இருந்தன.
உடனே இதுகுறித்து திருப்போரூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் ராஜ்குமார் நேரில் சென்று சிலைகளை பார்வையிட்டார்.
இதையடுத்து 4 சிலைகளும் திருப்போரூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
தாசில்தார் அலுவலகத்தில் இருந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். சிலர் சிலைகளை தொட்டு வணங்கினார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த மினி லாரி நிற்காமல் சென்றது. போலீசார் அதனை விரட்டிச்சென்றனர். உடனே லாரியை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 145 பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் ஆகும். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். #GudkhaSeized
மாமல்லபுரம்:
கல்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தவர் துரை (வயது 56). கடந்த 15-ந் தேதி இரவு அவர் பூஞ்சேரியில் ரோந்து பணியை முடித்துவிட்டு மறைமலை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருக்கழுக்குன்றம் அடுத்த குச்சிச்காடு பகுதியில் வந்த போது, எதிரே வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இன்ஸ்பெக்டர் துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது இதயம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், கிட்னி மலர் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலையூர், நியூபாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தங்கி இருந்த வாலிபர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது.
அந்த வீட்டில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினார்கள். அங்கு தங்கி இருந்த 5 பேர் கஞ்சா போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சா வைத்திருந்ததாக யோகேஷ், மெல்வின், ராஜு, கிருஷ்ணன், மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் என்ஜினீயரிங் மாணவர்கள். ஒருவர் கலைக்கல்லூரி மாணவர்.
இவர்கள் அனைவரும் இந்த வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் கைது ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கல்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது54). பி.எஸ்.என்.எல். ஊழியர். இன்று மதியம் அவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈகை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பலியானார். #tamilnews
மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் கடந்த 13-ந் தேதி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் பல்லாவரத்தை சேர்ந்த வடிவேல் (வயது 40) என்பது தெரிந்தது. பண பிரச்சினையில் வடிவேலை நண்பரான பல்லாவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து ராஜியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும், வடிவேலும் நண்பர்கள். எனக்கும் அவருக்கும் ஆட்டோ வாடகை மற்றும் ஆட்டோ வாங்கி விற்கும் தொழிலில் கொடுக்கல் வாங்கள் பிரச்சினை இருந்து வந்தது.
நாங்கள் அடிக்கடி கோவளம் சென்று மது அருந்தி விட்டு விலைமாதுகளுடன் உல்லாசமாக இருப்போம். இதேபோல் சம்பவத்தன்றும் கோவளம் சென்றுவிட்டு அங்கிருந்து மாமல்லபுரம் சென்றோம்.
வழியில் சூலேரிக்காடு அருகில் மது அருந்தும் போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேலை கழுத்தை நெரித்து கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ராஜியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஆலந்தூர்:
நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையில் கரூர் வைசியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
கடந்த 15-ந்தேதி இங்கு கொள்ளை முயற்சி நடந்ததாக நங்கநல்லூர் கரூர் வைசியா வங்கி உதவி மேலாளர் ஞானபிரபு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து நங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
தீவிர விசாரணையின் போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது நங்க நல்லூர் பி.வி.நகரை சேர்ந்த செல்வமணி (24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சம்பவம் நடந்த அன்று செல்வமணி, தனது மனைவியை அதிகாலையில் பஸ் ஏற்றிவிட வந்ததும், வீடு திரும்பும் வழியில், ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை திறக்க முயன்றார். அப்போது மும்பையில் உள்ள வங்கியின் தலைமை கிளையில் எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து நங்கநல்லூர் வங்கி கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரின்படி வாலிபர் செல்வமணி கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு நேற்று மாலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஒரு பெட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது, இதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீஸ்காரர் சந்திரசேகர் அந்த மாணவர்களை தட்டிக் கேட்டார்.
‘‘மற்ற பயணிகளுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள்? அமைதியாக வாருங்கள்’’ என்று கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்த போது, தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீஸ்காரர் சந்திரசேகரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீஸ்காரரை தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்கள் அஜித், வின்சென்ட், சுமன்குமார், ஷியாம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கைதான 4 மாணவர்கள் மீதும் போலீஸ்காரரை தாக்கியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #arrest
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கெலட்டிப்பேட்டை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பக்தன். இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 20). இவர், சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் பிரவீன்குமார், தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு பிரவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், தூக்கில் தொங்கிய பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரவீன்குமார் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






