என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    இங்கிலாந்து, குவைத் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதியில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளில் தளா்த்தப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த அக்டோபா் மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுடன் வந்தால் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது.

    அதைதொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளான துபாய், குவைத், ஓமன், கத்தார் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று மீண்டும் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக தனியார் பரிசோதனை மையத்தின் மூலம் ரூ.1,200, ரூ.2,500 என 2 வீதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினா் கண்காணிப்பில் விமான நிலையத்தில் தங்கி இருக்க வேண்டும். கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்த பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று இல்லை என முடிவு வந்தால் வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், சுகாதார துறை துணை இயக்குனர் பிரியா ஆய்வு செய்தனர். கொரோனா பரிசோதனை செய்யும் இடங்களும் பயணிகள் தங்க வைக்கப்படும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ஒரு பயணி கழிவறைக்கு சென்றுவிட்டு நீண்டநேரமாக வெளியே வராததை அதிகாரிகள் கண்டனர். உடனே கழிவறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார்.

    அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் வேலூரை சேர்ந்த அஜ்மல்கான் (வயது 26) என்பதும், துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அதை கழிவறையில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், கழிவறையில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ எடைகொண்ட 2 தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணம் செய்ய வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரகுமான் அமீது (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டனர்.

    அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தையும், ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரி. இவர் தன்னுடன் சித்தாள் பணிக்காக மகாத்மா காந்தி சாலையை சேர்ந்த இந்திரா (35) என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில், காஞ்சீபுரத்தில் ஒரு கட்டுமான பணியை முடித்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மாகரல் போலீஸ் நிலையம் அருகே இவர்கள் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இந்திரா படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், இவர் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும் தன்னுடைய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.

    சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்படி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை அரவிந்த் ரமேசுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    அப்போது எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டார். இதனால் திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேசுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
    செல்போன் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    பீகார் மாநிலம கயா மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னா குமார் (வயது 30). இவரும் இவரது உறவினரான ஹரிலால் குமார் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சென்னகுப்பம் ராஜாஜி தெருவில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி கொண்டு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த நபருடன் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ஒரகடம் போலீசில் முன்னாகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக செரப்பணஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த .18, 17, 14 வயது சிறுவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குன்றத்தூர் அருகே வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:  

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் ஜெகன்நாத சாமி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). அதே பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு அங்கேயே பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு கடையில் இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் கடைக்குள் அமர்ந்து இருந்த செல்வராஜை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். செல்வராஜ் எவ்வளவோ போராடி உள்ளார். இருப்பினும் மர்ம நபர்கள் விடாமல் கடைக்குள் இருந்து அவரை வெளியே இழுத்துபோட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி்ச் சென்று விட்டனர். அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெட்டுபட்டு கிடந்த செல்வராஜை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ், போரூர் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோனி சகாய பாரத், விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் கடையின் அருகில் உள்ள டீக்கடையில் 3 பேர் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் செல்வராஜை அந்த நபர்கள் தாக்கி உள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில் 18 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் காரணமாக கொலை நடந்ததா? என விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

    செல்வராஜ் குடும்பத்தினரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தவர் ஈசாக் என்ற சூர்யா. தற்போது அங்கு வேலையில் இருந்து நின்று விட்டார். கார் டிரைவராக அடிக்கடி வெளியூர் சென்று விடும் ஈசாக்கை செல்வராஜ் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈசாக் தனது நண்பர்களான பிரகாஷ், சச்சின், அஜித், சசிகுமார் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    5 பேரையும் திருவண்ணாமலையில் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் அவர்களை சென்னை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை அழைத்து வந்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    மாங்காடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 37), பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் கோவர்தினி என்ற வர்தினி (16). பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் சூர்யா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்து.

    நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது கோவர்தினி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று கோவர்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் சூர்யாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து தாயின் பராமரிப்பில் இருந்த கோவர்தினி இந்த வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு செல்லலாம் என கூறி வந்ததாகவும் இதனை தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் உறவினர்கள் அதிக அளவில் அவர்களிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும் இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோவர்தினி தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மூங்கில்மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காஞ்சீபுரம் வரதராஜபுரம், வி.என்.பெருமாள் தெருவை சேர்ந்த சசிகுமார் (வயது40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் பூட்டை உடைத்து ரூ.500 திருடியதை ஒப்புக்கொண்டார். காந்தி ரோட்டில் உள்ள முத்தீஸ்வரர் கோவிலின் கோவில் அலுவலக அறை பூட்டை உடைத்து ரூ.500 திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர் திருட்டில் ஈடுபட்ட சசிகுமாரை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
    உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் வயலூர் கூட் ரோடு அருகே உள்ள ஏட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சவுரிராஜ். இவரது மனைவி பாத்திமா ராணி (வயது 49). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் பிரமியாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளை பார்ப்பதற்காக செய்யாறு சென்றதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை பாத்திமா ராணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாத்திமா ராணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக செய்யாறில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெருநகர் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் காலனியில் அரசு பள்ளி கட்டுமான பணியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரியில் பா.ஜ.க அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது. கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் செய்ததை போல தமிழகத்திலும் அநாகரிக அரசியலை செய்ய துடித்து கொண்டிருக்கிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது’ என்றார்.
    நீலாங்கரை அருகே பட்டப்பகலில் புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி மாநிலம் லால்பேட்டையை சேர்ந்தவர் ஜெரோம் என்ற பிரபு (வயது 36). ரவுடியான இவர், சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி புதுகணேஷ் நகர் 5-வது தெருவில் வசித்து வந்தார்.

    நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெரோமை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெரோம் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சாலையிலேயே ஜெரோமை சரமாரியாக வெட்டியது.

    இதில் முகம் முழுவதும் பலத்த வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ரவுடி ஜெரோம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்துவந்த நீலாங்கரை போலீசார் கொலையான ஜெரோம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி முத்தியால்பேட்டையில் அன்பு ரஜினி என்பவரை ஒரு கும்பல் ஜெரோம் உதவியுடன் குண்டு வீசி கொலை செய்தது. இந்த வழக்கில் ஸ்ரீராம், ஜெரோம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிறையில் இருந்து வெளியே வந்த ஜெரோம் புதுச்சேரியில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்பதால் தனது குடும்பத்தை மட்டும் வெட்டுவாங்கேணியில் உள்ள இந்த வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சென்ற அவர், தனது மகள் பெரிய மனுஷியானதால் வெட்டுவாங்கேணியில் உள்ள மகளை பார்க்க மீண்டும் இங்கு வந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி வந்திருந்த ஜெரோமை அன்பு ரஜினியின் கோஷ்டியினர் பார்த்துவிட்டனர். பின்னர் அவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

    கொலையாளிகளை பிடிக்க அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் தலைமையில் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் விஷ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியை பிடிக்க புதுச்சேரிக்கு ஒரு தனிப்படை விரைந்து உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சர்தார். இவரது மகன் விக்னேஷ் (வயது 20). இவர் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருந்து வருகிறார். இவர் செங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர் அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. கடந்த 14-ந்தேதி சிறுமியை காணவில்லை என்று அவரது தாய் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் விக்னேஷ் அந்த சிறுமியை கடத்தி சென்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரிபூரணம் திருவள்ளூர் பகுதியில் அந்த சிறுமியுடன் பதுங்கி இருந்த விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனை முடித்து அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
    ×