search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    இங்கிலாந்து, குவைத் நாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

    இங்கிலாந்து, குவைத் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதியில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளில் தளா்த்தப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த அக்டோபா் மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுடன் வந்தால் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. அதைப்போல் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது.

    அதைதொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளான துபாய், குவைத், ஓமன், கத்தார் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று மீண்டும் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக தனியார் பரிசோதனை மையத்தின் மூலம் ரூ.1,200, ரூ.2,500 என 2 வீதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினா் கண்காணிப்பில் விமான நிலையத்தில் தங்கி இருக்க வேண்டும். கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்த பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று இல்லை என முடிவு வந்தால் வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், சுகாதார துறை துணை இயக்குனர் பிரியா ஆய்வு செய்தனர். கொரோனா பரிசோதனை செய்யும் இடங்களும் பயணிகள் தங்க வைக்கப்படும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×