என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட செல்போன்கள், வௌிநாட்டு சிகரெட்டுகள், மடிக்கணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது துபாய் விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த நைனா முகமது (வயது 41), திருச்சியை சேர்ந்த ஜாகீர் உசேன் (49), அஜித் அகமது (26) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 19 விலை உயர்ந்த செல்போன்கள், 51 சிகரெட்டு பாக்கெட்டுகள், 15 ஏர்பேடுகள், 18 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 420 கிராம் எடை கொண்ட தங்கத்தையும் கைப்பற்றினர்.

    இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜாபாத் அருகே குடும்பத்தகராறில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்: 

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மையன் பேட்டை ஊராட்சி வன்னியர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும் ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுப்பில் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் நதியா 4 நாட்களுக்கு முன்னர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த ராணுவவீரர் செந்தில்குமார் குடிபோதையில் நேற்று வீட்டு வரண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி தலைமையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தேர்தல் பணிகள் தொடர்பாக கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-

    தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விரிவாக்க திட்ட தனித்துணைஆட்சியர் எஸ்.சாந்தி (9488470006) நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் டி.முத்து மாதவன் (9444964899) நியமிக்கப்பட்டுள்ளார்.

    உத்திரமேரூர் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி (9445000168) நியமிக்கப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் தொகுதிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி (9445000413) நியமிக்கப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 8,983 பேரும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட 2,100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவின மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு உள்ளிட்ட 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 39). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தமிழ்செல்வன் மற்றும் உறவினர்கள் பவானி (27), அம்பிகா (55), அற்புதம் (46), ஆகியோர் காரில் கர்நாடகாவில் இருந்து சென்னை நோக்கி உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

    காரை தமிழ்செல்வன் ஓட்டி வந்தார். கார் ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது பழுதாகி நின்றது. தமிழ் செல்வன் காரை சாலை ஓரமாக நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்தார்.

    பவானி காரில் இருந்து இறங்கி தமிழ்செல்வனுக்கு உதவியாக இருந்தார். அம்பிகாவும், அற்புதமும் காரிலேயே அமர்ந்து இருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி பழுதாகி நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தமிழ்செல்வனும், பவானியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அம்பிகாவும், அற்புதமும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தமிழ்செல்வன், பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துவிபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே வீட்டில் பால் வியாபாரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த நத்தம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சசிகுமார் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று சசிகுமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்துபோன சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பால் வியாபாரம் செய்துவரும் சசிகுமார் திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பால் ஊற்றுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அங்கு ஒரு வீட்டில் பால் ஊற்ற சென்ற போது, ஏற்பட்ட தகராறில் சசிகுமாரை குடியிருப்புவாசிகள் திட்டியதாகவும் இனி இங்கே ஒரு வாரத்திற்கு பால் ஊற்ற கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சசிகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே முன் அறிவிப்பின்றி தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வந்தது. இந்நிலையில் நிர்வாகம் பள்ளியை மூடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு காரணமாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அறிவிப்பு வெளியான உடன் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி திடீர் என பள்ளியை மூடினால் பிள்ளைகளின் படிப்பு கேள்விகுறியாகிவிடும் எனக்கூறி முறையிட்டனர்.

    அதற்கு நிர்வாகம் திட்டவட்டமாக பள்ளி மூடப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மாங்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அருகே வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக மாற்றுத்திறனாளியாக ஆனார். இந்த நிலையில் அவரது தாயார் நேற்று முன்தினம் மகளை வீட்டில் பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    இதற்கிடையே பெண் வீட்டில் யாருமில்லை என்பதை தெரிந்து கொண்டு, அருகில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து (வயது 36), என்பவர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து தன்னை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது தாயிடம் சைகை மூலம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, டிரைவர் முத்துவை பிடித்து விசாரணை செய்தபோது, மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம், தாம்பரம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த். எலக்ட்டீசியன். இவருடைய மனைவி ஜெபசெல்வி. இவர்களுக்கு 3 வயதில் சாய்சரண் என்ற ஆண் குழந்தை இருந்தது.

    விஜயகாந்த், வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜெபசெல்வி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

    நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சாய்சரண், திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெபசெல்வி, பல இடங்களில் தேடியும் குழந்தையை காணாமல் கதறி அழுதார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் குழந்தை சாய்சரண், விழுந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகேயுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீட்டில் விளையாடிய குழந்தை சாய்சரண், கழிவுநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து இறந்ததாக தெரிகிறது.

    குழந்தையின் உடலை பார்த்து அதன் தாய் ஜெபசெல்வி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஒரகடம் அருகே 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 38), இவரது மனைவி இலக்கியா (33). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வல்லம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இலக்கியா அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
    சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முதியவரை கைது செய்தனர்.
    சென்னை

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அந்த விமானத்தில் பயணம் செய்ய காஞ்சீபுரத்தை சேர்ந்த நூர் முகமது சுல்தான் (வயது 60) என்பவர் வந்தார். பாதுகாப்பு சோதனைகள் முடித்துவிட்டு விமானத்தில் ஏற காத்திருந்த அவரிடம் சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் விசாரித்தனர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது. மேலும் விமானத்தில் ஏற்ற அனுப்பப்பட்ட அவரது உடைமைகளும் கொண்டு வரப்பட்டு சோதனை செய்தனர்.

    அதில் இருந்த ஒரு அட்டை பெட்டியில் புத்தகங்களுக்கு இடையே அமெரிக்கா டாலர்கள் மற்றும் சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதியவர் நூர் முகமது சுல்தானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அப்பாவு நகர் அப்பர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரத்தில் இருந்து ஓரிக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேளிங்கைபட்டரை கீழ்ரோடு என்ற இடத்தில் சென்ற போது பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். 

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கனடாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து இருந்து 3 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக 3 பார்சல்களில் மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

    அதில், 3 பார்சல்களிலும் தலா 100 கிராம் என 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் காய்ந்த இலைகள் இருந்தன. இதையடுத்து, இவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில், பார்சலில் இருந்த இலைகள் உயர்ரக கஞ்சா என தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பார்சல்களில் இருந்த முகவரிகளுக்கு சென்று விசாரித்த போது, அந்த முகவரியில் யாரும் இல்லாததால் அவை போலியானது என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை சென்னைக்கு அனுப்பி வைத்தது யார்? இந்த கடத்தல் சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×