என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 23), சென்னையை சேர்ந்த புஷ்பராஜ் (28), ஜாபர் அலி (43) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து காஜா மொய்தீன், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து தலா 560 கிராமும், புஷ்பராஜிடம் இருந்து 300 கிராமும் என 3 பேரிடம் இருந்தும் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    பின்னர் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர் அந்த விமானத்துக்குள் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் ஒரு இருக்கையின் அடியில் அவசரகால உபகரணங்கள் வைக்கும் பகுதியில் உள்ள பொருட்கள் கலைந்து இருந்ததை கண்டனர்.

    அதை சரி செய்ய முயன்றபோது காகிதத்தால் ஆன குளியல் சோப் உறை ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அந்த உறைக்குள் சோப்புக்கு பதிலாக கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    ரூ.35 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 730 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் விமானத்தில் அந்த இருக்கையில் அமர்ந்து வந்தது யார்? என்பதை ஆய்வு செய்தபோது கடைசியாக வந்த பயணியை கண்டுபிடித்தனர்.

    அந்த பயணி, இ-பாஸ் வாங்கும் அறையில் இருப்பது தெரியவந்தது. உடனே இ-பாஸ் அறையில் இருந்த மதுரையை சேர்ந்த யாசர் அரபாத் (வயது 22) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்தான் துபாயில் இருந்து சோப்பு காகித உறைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்ததாகவும், சுங்க இலாகா சோதனைக்கு பயந்து அதை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டார். யாசர் அராபத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    1½ ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான தனியார் நிறுவன ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பீப்பாயில் அடைத்து சிமெண்டால் பூசி கிணற்றில் வீசப்பட்ட உடல் மீட்கப்பட்டது.
    படப்பை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கான் (வயது 40). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் 1999-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலே சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார்.

    இவருடைய உறவினர்களான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கொஞ்சி அடைக்கான் (50). அவரது மனைவி சித்ரா (47) மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2009-ம் ஆண்டு அழைத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது சித்ராவுக்கும் கொஞ்சி அடைக்கானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. சித்ராவிடம் இருந்து பிரிந்து சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கே கொஞ்சி அடைக்கான் சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கொஞ்சி அடைக்கானுக்கு பெற்றோர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனியம்மாள் (34), என்பவருடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் காஞ்சீபுரம் பகுதியில் வசித்து வந்தனர்.

    இவர்களுக்கு 3½ வயதில் தனுஷியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3-8-2019 அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தனது கணவரை காணவில்லை என்று பழனியம்மாள் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    தன்னுடைய கணவர் மாயமானது குறித்து பழனியம்மாள் போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கரை சந்தித்து தனது கணவர் காணமால் போனது குறித்து மனு அளித்தார். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி., இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக சோமங்கலம் போலீசார் சித்ரா (47), எழுமலை, (35), ரஞ்சித்குமார் (30), டார்ஜன் (33), விவேகனந்தன் (30), ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் தனியார் நிறுவன ஊழியர் கொஞ்சி அடைக்கானை கொலை செய்து இரும்பு பீப்பாயில் சிமெண்டு் கலவையுடன் கலந்து படப்பை அடுத்த மலைப்பட்டு பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வீசி உள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மலைப்பட்டு பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    குன்றத்தூர் தாசில்தார் லட்சுமி, டாக்டர்கள் முன்னிலையில் விவசாய கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றி பீப்பாயில் அடைத்து வைக்கப்பட்ட உடலை வெளியே எடுத்தனர். பீப்பாயை வெல்டிங் எந்திரம் மூலமாக பிளந்து அதில் இருந்த எலும்புகளை எடுத்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை நகரின் நுழைவு வாயிலாக உள்ள தொகுதி தாம்பரம் தொகுதி. தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய தொகுதியாக இருந்த தாம்பரம் தொகுதி சீரமைக்கப்பட்ட பிறகு சிறிய தொகுதியாக மாறியது.
    தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் பொருளாதார மண்டலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த வளாகத்தில் உள்ளது. நூற்றாண்டுகளை கடந்த சென்னை கிறிஸ்தவ கல்லூரி தாம்பரம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.

    தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் என முக்கிய அரசுத்துறை நிறுவனங்கள் தாம்பரம் தொகுதியில் உள்ளன.

    தாம்பரம் தொகுதி

    தாம்பரம் விமானப் படைத்தளம், வரலாற்று புகழ்பெற்ற மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய வர்த்தகப் பகுதியான தாம்பரம் மார்க்கெட் உள்ளன. தாம்பரம் தொகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்றுமதி வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    தொகுதியில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் புதிய ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    தாம்பரம் தொகுதி

    தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 2016 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வெற்றிபெற்றார்.

    கோரிக்கைகள்

    அதிக அளவு மக்கள் வரும் தாம்பரம் பகுதியில் நிரந்தரமான பஸ் நிலையம் இல்லை. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் சென்னை மாநகர பகுதிகள் மற்றும் காஞ்சீபுரம், வேலூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது.

    அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ஒரு முறையான பஸ் நிலையம் அமைக்க ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்தும் இதுவரை தாம்பரத்தில் பஸ் நிலையம் அமைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

    தாம்பரம் தொகுதி

    2 லட்சம் மக்கள் வசிக்கும் தாம்பரம் நகரத்தில் விமானப்படைக்கு சொந்தமான நிலத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என 20 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நாள்தோறும் தாம்பரம் நகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரை, படப்பை முதல் மேடவாக்கம் வரை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தாம்பரத்தில் பஸ் போக்குவரத்தை நம்பியே வந்து செல்கின்றனர்.

    தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக பஸ்கள் நிற்கிறது. நிரந்தரமான அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் வேண்டும் என்பதே தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை.

    தாம்பரம் தொகுதி

    தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தாம்பரம் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, சிட்லபாக்கம் பேரூராட்சி, மாடம்பாக்கம் பேரூராட்சி, அகரம் பேரூராட்சி, திருவஞ்சேரி ஊராட்சி, முடிச்சூர் ஊராட்சி ஆகிய பகுதிகள் உள்ளன.

    தாம்பரத்தில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பாலாற்று குடிநீர் தாம்பரம் நகராட்சி பகுதி மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பாலாற்று குடிநீர் திட்டத்தை கொண்டு வருவோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் அளித்தும் இதுவரை அந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.

    தாம்பரம் தொகுதி முழுவதும் நிலத்தடி நீர் குடிக்க பயன்படுத்த முடியாத வகையில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது. பாலாற்று குடிநீரை தாம்பரம் நகராட்சி, சிட்லபாக்கம் பேரூராட்சி மட்டுமல்லாது தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாம்பரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் அந்த திட்டம் இன்னும் முடியவில்லை. தாம்பரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தும் தார் சாலைகள் அமைக்க முடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தாம்பரம் தொகுதி

    கடந்த 2009-ம் ஆண்டு 174 கோடி ரூபாய் செலவில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆட்சிமாற்றம் மற்றும் பணிகள் முறையாக நடக்காததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

    தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த இடத்திலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாததால் அதிகளவு மழை பெய்தாலும் ஏரி மற்றும் குளங்களில் கழிவு நீர் மட்டுமே தேங்கி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மழை நீரால் எந்த பயனும் இல்லாமல் போகிறது.

    நீர் நிலை ஆதாரங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. தாம்பரம் தொகுதியில் புதிதாக ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்ட நிலையில் மின்னழுத்தம் பல இடங்களில் உள்ளது. இதனால் துணை மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாம்பரம் தொகுதியை பொறுத்த வரை வன்னியர்கள், நாயுடு சமூகத்தினர், ரெட்டியார்கள், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிராமணர்கள், யாதவர்கள் கணிசமாக உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.

    தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, கல்வியாளர் ஆதிமாறன் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோல் பா.ஜ.க. சார்பில் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் களத்தில் உள்ளார்.

    மொத்தம்வாக்காளர்கள்- 4,14,118
    ஆண்கள்- 2,06,019
    பெண்கள்- 2,08,046
    3-ம் பாலினம்- 53

    இதுவரை வெற்றி நிலவரம்:-

    தாம்பரம் தொகுதி

    1977- முனு ஆதி (அ.தி.மு.க.)
    1980- பம்மல் நல்லதம்பி (தி.மு.க.)
    1984- எல்லா ராஜமாணிக்கம் (அ.தி.மு.க.)
    1989- எம்.ஏ.வைத்தியலிங்கம் (தி.மு.க.)
    1991- எஸ்.எம்.கிருஷ்ணன் (காங்கிரஸ்)
    1996- எம்.ஏ.வைத்தியலிங்கம் (தி.மு.க.)
    2001- எம்.ஏ.வைத்தியலிங்கம் (தி.மு.க.)
    2006- எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)
    2011- டி.கே.எம்.சின்னையா (அ.தி.மு.க.)
    2016- எஸ்.ஆர். ராஜா (தி.மு.க.)
    மின்கசிவு காரணமாக மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே படுத்து இருந்த வியாபாரி, உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நீலாங்கரை பாரதியார் நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசபாண்டியன் (வயது 28). தந்தையை இழந்த இவர், தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.

    முருகேசபாண்டியன், அவரது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். வியாபாரம் முடிந்ததும் இரவில் மளிகை கடைக்குள் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அவரது மளிகை கடையில் தீப்பிடித்து எரிந்தது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி மளிகை கடையில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு படுத்து இருந்த முருகேச பாண்டியன் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தார்.

    இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான முருகேச பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் போலீசார் தடவியல் நிபுணர்களை கொண்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    ஆலந்தூர்:

    கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டு தற்போது முழு அளவில் விமான சேவைகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதையடுத்து நாளொன்றுக்கு வருகை, புறப்பாடு விமானங்கள் 250-ல் இருந்து 260 வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல பயணிகள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.

    ஆனால் நேற்று பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை பயணிகள் சுமார் 18,500 போ் மட்டுமே பயணித்தனர். அதேபோல் புறப்பாடு, வருகை விமானங்கள் என 231 விமானங்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.

    இதற்கிடையே சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    அதைபோல் இந்த இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் பயணிகள் இல்லாமல் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட செல்போன்கள், வௌிநாட்டு சிகரெட்டுகள், மடிக்கணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது துபாய் விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த நைனா முகமது (வயது 41), திருச்சியை சேர்ந்த ஜாகீர் உசேன் (49), அஜித் அகமது (26) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 19 விலை உயர்ந்த செல்போன்கள், 51 சிகரெட்டு பாக்கெட்டுகள், 15 ஏர்பேடுகள், 18 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 420 கிராம் எடை கொண்ட தங்கத்தையும் கைப்பற்றினர்.

    இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜாபாத் அருகே குடும்பத்தகராறில் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்: 

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மையன் பேட்டை ஊராட்சி வன்னியர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும் ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுப்பில் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் நதியா 4 நாட்களுக்கு முன்னர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த ராணுவவீரர் செந்தில்குமார் குடிபோதையில் நேற்று வீட்டு வரண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி தலைமையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தேர்தல் பணிகள் தொடர்பாக கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-

    தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக 044-27236205, 27236206, 27236207, 27236208 என்ற தொலைபேசி எண்களும் 18004257087 என்ற இலவச தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய விரிவாக்க திட்ட தனித்துணைஆட்சியர் எஸ்.சாந்தி (9488470006) நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் டி.முத்து மாதவன் (9444964899) நியமிக்கப்பட்டுள்ளார்.

    உத்திரமேரூர் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி (9445000168) நியமிக்கப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் தொகுதிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி (9445000413) நியமிக்கப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 8,983 பேரும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட 2,100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு தணிக்கை குழு, உதவி செலவின மேற்பார்வையாளர் குழு, செலவு கண்காணிப்பு பிரிவு குழு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு உள்ளிட்ட 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 39). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தமிழ்செல்வன் மற்றும் உறவினர்கள் பவானி (27), அம்பிகா (55), அற்புதம் (46), ஆகியோர் காரில் கர்நாடகாவில் இருந்து சென்னை நோக்கி உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

    காரை தமிழ்செல்வன் ஓட்டி வந்தார். கார் ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது பழுதாகி நின்றது. தமிழ் செல்வன் காரை சாலை ஓரமாக நிறுத்தி பழுது பார்த்து கொண்டிருந்தார்.

    பவானி காரில் இருந்து இறங்கி தமிழ்செல்வனுக்கு உதவியாக இருந்தார். அம்பிகாவும், அற்புதமும் காரிலேயே அமர்ந்து இருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி பழுதாகி நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தமிழ்செல்வனும், பவானியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அம்பிகாவும், அற்புதமும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தமிழ்செல்வன், பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துவிபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே வீட்டில் பால் வியாபாரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த நத்தம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சசிகுமார் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று சசிகுமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்துபோன சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பால் வியாபாரம் செய்துவரும் சசிகுமார் திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பால் ஊற்றுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அங்கு ஒரு வீட்டில் பால் ஊற்ற சென்ற போது, ஏற்பட்ட தகராறில் சசிகுமாரை குடியிருப்புவாசிகள் திட்டியதாகவும் இனி இங்கே ஒரு வாரத்திற்கு பால் ஊற்ற கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சசிகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே முன் அறிவிப்பின்றி தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வந்தது. இந்நிலையில் நிர்வாகம் பள்ளியை மூடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு காரணமாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அறிவிப்பு வெளியான உடன் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி திடீர் என பள்ளியை மூடினால் பிள்ளைகளின் படிப்பு கேள்விகுறியாகிவிடும் எனக்கூறி முறையிட்டனர்.

    அதற்கு நிர்வாகம் திட்டவட்டமாக பள்ளி மூடப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×