என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வாழை இலை கட்டுகள் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
    தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 55), திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார்.

    குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது, முன்னாள் வாழை இலை கட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், சாலையில் கவிழ்ந்தது. அப்போது கவிழ்வதற்கு முன்னதாக லாரியிலிருந்து சரிந்த வாழை இலை கட்டுகள் பழனி மீது விழுந்ததில், அவர் சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன பழனி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சிவராஜ் (37), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
    சென்னை விமான நிலையத்தில் தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் மற்றும் சார்ஜா விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த மெகபூப் அக்பர் அலி (வயது 35), சென்னையை சேர்ந்த சுபைர் உசேன் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களின் தலைமுடி வித்தியாசமாக இருந்ததால் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர்கள், தங்களது தலையின் மேல் பகுதியில் முடியை சவரம் செய்து, அதற்கு பதிலாக ‘விக்’ வைத்து இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த ‘விக்’கை பிரித்து பார்த்தபோது, ‘விக்’கின் அடியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அகமதுல்லா (22), சேலத்தை சேர்ந்த சந்தோஷ் செல்வம் (33), சென்னையை சேர்ந்த அப்துல்லா (35) ஆகியோரும் இதே பாணியில் தலை முடி ‘விக்’கில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.96 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 80 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் துபாயில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (24) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.43 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 933 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

    துபாயில் இருந்து வந்த விழுப்புரத்தை சேர்ந்த அன்பழகன் (24) என்பவர் காலுறை(சாக்ஸ்) மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்த தமீம் அன்சாரி (25) என்பவரையும் மடக்கி பிடித்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல வந்த 4 பேரின் தலைமுடி ‘விக்’குகளில் மறைத்து கடத்திச்செல்ல முயன்ற ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகளால் கடத்தல் கும்பல் தற்போது புதுவிதமாக தலைமுடி ‘விக்’கில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் புதிய விதமான கடத்தலையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் தங்கம், ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பூக்கடை சத்திரத்தில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர், இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நடக்கும் தேர்தல். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு நடைபெறும்.

    போலி கூட்டுறவு சங்கங்கள் உருவாகும். அதன் மூலம் கொள்ளை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வலைதள உதவி மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு, 1950 வாக்காளர் வலைதள உதவி மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆலந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராகேஷ் குமார் வர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலமுருகன், (வேளாண்) கணேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமாரை ஆதரித்து வாலாஜாபாத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 அறிவித்துள்ளது. தற்போது தமிழக அரசு முதியோர் உதவி தொகையை கொடுக்க முடியாமல் ரூ.7 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருகிறது. இவர்கள் எப்படி இது போன்ற திட்டங்களை கொடுக்க முடியும்.

    மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கல் குவாரிகள் இயங்கும் பகுதிகளில் தரமான சாலைகள் மற்றும் வாகன விபத்தை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    செய்யாறு, பாலாறு ஆகிய ஆறுகள் இணையும் ஆற்றுப்பகுதியில் குறுக்கே, தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருந்து சாலவாக்கம் தனி ஒன்றியமாக பிரிப்பதற்கு முழுமூச்சில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் என்.மனோகரன், அ.ம.மு.க. நிர்வாகிகள் தம்மனூர் இ.தாஸ், ஆலஞ்சேரி கமலக்கண்ணன், வேளியூர் எம்.தனசேகரன், மணிமாறன், கூரம் பச்சையப்பன் மாவட்ட மகளிரணி செயலாளர் வரலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. காய்கறி கடை அருகே வந்த வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பையை அங்கேயே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. கேட்பாரற்று கிடந்த பையை காய்கறி கடைக்காரர் பிரித்து பார்த்த போது அதில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மருந்துகள் நிரப்பப்பட்டு திரி வெளியே தெரியும் அளவுக்கு வெடிகுண்டு இருந்ததை பார்த்தார்.

    உடனடியாக காய்கறி கடைக்காரர் அதை எடுத்து அங்குள்ள கால்வாயில் போட்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கால்வாயில் இருந்த வெடிகுண்டை எடுத்து பத்திரமாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த பிறகே அது என்ன என்பது தெரிய வரும். தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்தவர் வரதராஜன். இவர் உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வந்திருந்தார். வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த அவரது குழந்தை பிரித்திகா ஸ்ரீ அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தையை காணாது தேடி வந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து உடனடியாக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார்.
    காஞ்சீபுரம் அருகே 55 பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி தலைமையில் அலுவலகத்தில் கணக்கீடு செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    காஞ்சீபுரம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு ஜங்சனில் திருவண்ணாமலை மாவட்டம் அசனமாபேட்டை பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த 2 கார்களை, செவிலிமேடு ஜங்சனில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 14 பட்டு சேலைகள், மற்றொரு வாகனத்தில் ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் 41 பட்டு சேலைகள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 800 மதிப்பிலான 55 பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி தலைமையில் அலுவலகத்தில் கணக்கீடு செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    காஞ்சீபுரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், சேதுராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரிடம் சோதனை செய்ததில், 75 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஆரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (36), நீர்வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25), மணிகண்டன் (26), பெருமாள் (45) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திமுக உறுதியாக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 234 தொகுதிதான் இலக்கு. ஆனாலும் 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று டெல்லி சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களுக்கு வாரி வாரி வழங்கக்கூடிய அட்சய பாத்திரம்போல் அமுதசுரபி. மகத்தான அறிக்கையாக அமைந்து உள்ளது. 17-ந் தேதி ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. 18-ந் தேதி மாலை 5 மணியில் இருந்து கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.

    தி.மு.க. உறுதியாக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 234 தொகுதிதான் இலக்கு. ஆனாலும் 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். உடல்நலம் இல்லாமல் இருந்ததால் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்துக்கு செல்லாமல் இருந்தேன். 60 நாட்கள் சபைக்கு செல்லாமல் இருக்க முடியாது. நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து தேர்தல் பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் பல வீடுகளில் கழிப்பறையே இல்லாத நிலையில், அதனை சரிசெய்ய முடியாமல் இலவசமாக வாஷிங்மிஷின் கொடுப்பேன் என கூறுவது நகைச்சுவையாக உள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.
    காஞ்சீபுரம்:

    வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசார பயணத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார்.

    அதற்கு முன்னதாக பிரசார பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சீபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இறங்கு தளத்திற்கு வந்தடைந்தார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரும், காஞ்சீபுரம் வேட்பாளருமான கோபிநாத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்தார்.

    பின்னர் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே அவர் பேசுகையில் கூறியதாவது:-

    எனக்கு கட்சி நடத்த பணம் வேண்டும் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தேன். இளம் வயதில் அம்மாவை இழந்தவன் நான். இதுவரை அதை யாரும் ஈடு செய்ய முடியவில்லை. அதனால் தான் இல்லத்தரசிகளை போற்றும் வகையில் சலுகைகள் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

    சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன் இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள். பல வீடுகளில் கழிப்பறையே இல்லை. அதனை சரிசெய்ய முடியவில்லை. அதற்குள் இலவசமாக வாஷிங்மிஷின் கொடுக்கின்றனர். இரு கட்சியிலும் 33 சதவீதம் கிரிமினல் ஆட்கள் இருக்கின்றனர். சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாதவர்கள், இந்த தேர்தலில் மட்டும் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்கள்? ‘ஐந்து வருடங்களுக்கு உங்களை குத்தகைக்கு எடுத்துவிட்டு உங்களுக்கு வாஷிங்மிஷின் கொடுக்கிறேன்’ என சொல்வது நகைச்சுவையாக உள்ளது. உங்கள் வீட்டின் விளக்காக என்னை ஏற்றி வையுங்கள், நான் சினிமா வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்.

    கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மக்கள், அவர்களிடம் கேட்டால், ஓடி விடுவார்கள். தமிழக கஜானாவை காலி செய்து விட்ட இவர்கள், ரூ.5 லட்சம் கோடி கடனை ரூ.10 லட்சம் கோடி கடனாக மாற்றுவார்கள். நான் நிரந்தர முதல்-அமைச்சராக அமர்வதற்கு இங்கு வரவில்லை. நான் நேர்மையானவன், நான் முறையாக வருமான வரிக்கட்டியவன். எனக்கு கட்சி முக்கியமில்லை. மக்கள் தான் முக்கியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கமல்ஹாசன், தேர்தல் பிரசாரம் முடிந்து அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார். அப்போது மர்மநபர், அவரது கார் கண்ணாடியை தனது கைகளால் தட்டினார். அவரது கையில் கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் அழைத்துச்சென்ற காட்சி.
    உடனே கமலின் பாதுகாப்புக்கு வந்திருந்தவர்களும், அக்கட்சி தொண்டர்களும் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் அவரிடம் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    காஞ்சிபுரம்,

    தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில், காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

    கமல்ஹாசனின் கார் காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மர்ம நபர் காரை தாக்க முற்பட்டுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது. 

    இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ×