என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், அ.தி.மு.க. சார்பில் கே.பி.கந்தன் போட்டியிடுகிறார்கள்.
    திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 5,25,000
    2. அசையும் சொத்து- ரூ. 6,17,69,651.56
    3. அசையா சொத்து- ரூ. 6,35,63,842

    அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கந்தன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 3,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 1,87,47,294.38
    3. அசையா சொத்து- ரூ. 25,15,00,000


    தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தொகுதிகளில் சோழிங்கநல்லூர் தொகுதியும் ஒன்றாகும். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் மிகப்பெரிய பணக்கார தொகுதி என்றும் இதை சொல்லலாம். ஏனென்றால் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இந்த தொகுதியில்தான் இருக்கின்றன. பல பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

    சோழிங்கநல்லூர் தாம்பரம் தொகுதியின் ஒரு பகுதியில் இருந்தது. 2011-ம் ஆண்டுதான் சோழிங்கநல்லூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் உள்ளகரம், புழுதிவாக்கம் நகராட்சிகளும் பள்ளிக்கரணை, பெருங்குடி சோழிங்கநல்லூர் பேரூராட்சிகளும் உள்ளன.

    கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, செம்மஞ்சேரி, காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, மடிப்பாக்கம் போன்ற 10 ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியோடு இணைந்துள்ளன. 14வது 15 வது மண்டலத்தின் 20 வார்டுகளும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பரங்கிமலை ஒன்றியத்தை சேர்ந்த ஒட்டியம்பாக்கம், வேங்கை வாசல், பெரும்பாக்கம், மேடவாக்கம், நண்மங்கலம், கோவிலம்பாக்கம், 7 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளன.

    2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.பி. கந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற்றார். இதன்படி இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் கணிசமாக உள்ளனர்.

    சோழிங்கநல்லூர் தொகுதி

    தொகுதியில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீரும் பாதாள சாக்கடை திட்டம் மூலமாக வெளியேற்றப்படாமல் ஏரிகளில் கலக்கின்றது. இதற்கு உரிய தீர்வுகாண வேண்டும் என்று தொகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
    சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஓ.எம்.ஆர். சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது மற்றொரு முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

    ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் இருப்பதால் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்து வந்தாலும், போதுமான இடவசதிகள் இல்லை, அடிப்படை வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

    சோழிங்கநல்லூர் தொகுதியில் மாநகராட்சியில் வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை இல்லை. இதனால் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இதற்கு விரைவிர் தீர்வு காண வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். வடநெமிலியில் இருந்து கடல் நீர் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரிவர சீரமைக்காமல் சாலைகள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    சோழிங்கநல்லூர் தொகுதி

    தொகுதிகளில் உள்ள 7 ஊராட்சிகளில் துப்புறவு பணிகளை செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லை. தாம்பரம் மாநகராட்சி உருவாகும் போது இந்த ஊராட்சிகள் அதனோடு இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது காலதாமதம் ஆனதால் 7 ஊராட்சிகளிலும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நெடுஞ்சாலைகளில் மீண்டும் மதுபான கடைகள் இயங்கி வருவது பெண்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. அதை அகற்ற வேண்டும் என்பது அந்த தொகுதி மக்களின் முக்கியமான விருப்பமாக இருக்கிறது.

    தொகுதியில் ஐ.டி. நிறுவனங்களால் பெரும்பாலான பகுதிகள் சிங்கப்பூர் போல காட்சி அளிக்கிறது. ஆனாலும் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாதது மக்களின் மனக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது.

    வாக்காளர்கள்

    மொத்தம்- 6,94,845
    ஆண்கள்- 3,48,262
    பெண்கள்- 3,46,476
    3-ம் பாலினம்- 107
    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பெ. மகுஷ்குமார், திமுக சார்பில் எழிலரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கோபிநாத், நாம் தமிழர் சார்பில் சா. சால்டின், அமமுக சார்பில் என். மனோகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    பாமக வேட்பாளர் பெ. மகுஷ்குமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 90,000
    2. அசையும் சொத்து- ரூ. 26,50,000
    3. அசையா சொத்து- ரூ. 20,00,00

    திமுக வேட்பாளர் எழிலரசன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 9,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 60,83,402.71
    3. அசையா சொத்து- ரூ. 53,00,000

    தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் ஒன்றாக திகழ்வது காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி. இது பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்ற பெருமையும், அவர் வெற்றி பெற்ற தொகுதி என்ற பெருமையையும் பெற்றது.

    காஞ்சீபுரம் தொகுதி

    அதுமட்டுமல்ல ஆதிசங்கரர் தோற்றுவித்த சங்கரமடத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. பல புகழ் பெற்ற சங்கராச்சாரியார்கள் இங்கு வாழ்ந்து உள்ளனர்.

    இந்த ஊரை தலைமையிடாக கொண்டு பல மன்னர்கள் ஆட்சி புரிந்த பழம்பெருமைகளும் இதற்கு உண்டு. காமாட்சி அம்மன், அத்திவரதர் கோவில், ஏதாம்பரநாதர் கோவில் என பல கோவில்களை கொண்ட நகரமாகவும் காஞ்சீபுரம் திகழ்கிறது.

    காஞ்சீபுரம் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 569. இதில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 532 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 24 பேர். மூன்றாம் பாலினத்தினர் 13 பேர் உள்ளனர்.

    காஞ்சீபுரம் தொகுதி

    தொகுதியில் காஞ்சீபுரம் நகரம், பாலுசெட்டி சத்திரம், தாமல், பரந்தூர் ஆகியவை பெரிய ஊர்களாகும். இவற்றுடன் ஏராளமான சிறிய கிராமங்கள் தொகுதியில் அடங்கி உள்ளன.

    காஞ்சீபுரம் பெருநகராட்சி, காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இதில் உள்ளன. காஞ்சீபுரம் பெரு நகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றன.

    இங்கு வன்னியர்கள், முதலியார்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இத்துடன் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். இவர்களின் வன்னியர் மற்றும் முதலியார் தலா 30 சதவீதம் பேர் உள்ளனர். ஆதிதிராவிடர் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்.

    காஞ்சீபுரம் தொகுதி

    தேசிய விடுதலைக்கு பிறகு காஞ்சீபுரம் தொகுதியில் 1952-ல் முதல் முறையாக தேர்தல் நடந்தது. அதன்பிறகு இதுவரை 16 தடவை தேர்தல் நடந்துள்ளது. 2005-ம் ஆண்டு மட்டும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ், பா.ம.க., கே.எம்.பி.பி. தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    காஞ்சீபுரம் பட்டு துணிக்கு புகழ்பெற்றதாகும். எனவே பட்டு தொடர்பான தொழில்களும், வர்த்தகங்களும் அதிகமாக உள்ளன. இதே போல விவசாயமும் அதிகம் கொண்ட பகுதி ஆகும். பட்டு தொழில் தொடர்பாக இன்னும் கூட தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

    காஞ்சீபுரம் தொகுதி

    பட்டு சேலை, நெசவு மற்றும் விற்பனைக்கு ஊக்கமும், தேவையான உதவிகளும் அதிகமாக தர வேண்டும். பட்டு கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்த ஒருங்கிணைந்த பட்டுபூங்கா அமைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

    தொகுதி மக்களின் 50 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் உள்ளது. ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே அவற்றை தூர்வாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    நெல்விளைச்சல் பகுதி என்பதால் நிரந்தர கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

    காஞ்சீபுரம் தொகுதி

    பாலாற்றின் குறுக்கே பெரும்பாக்கம் பகுதியில் பாலம் அமைக்க வேண்டுமென்பது தொகுதி மக்களின் மிக முக்கிய கோரிக்கை ஆகும். மேலும், காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி போதிய வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    காஞ்சீபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். நகரின் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதும் அவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. நகரில் பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    காஞ்சீபுரம் தொகுதி

    1952 தெய்வநாயகம் (கே.எம்.பி.பி.)
    1957 பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)
    1962 நடேச முதலியார் (காங்கிரஸ்)
    1967 கிருஷ்ணன் (தி.மு.க.)
    1971 சி.வி.எம். அண்ணாமலை (தி.மு.க.)
    1977 பாலாஜி (அதிமுக)
    1980 வெங்கடசுப்பிரமணியன் (அதிமுக)
    1984 பாலாஜி (அதிமுக)
    1989 முருகேசன் (திமுக)
    1991 பட்டாபிராமன் (அதிமுக)
    1996 முருகேசன் (திமுக)
    2001 எஸ்.எஸ். திருநாவுக்கரசு (அதிமுக)
    2005 மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக- இடைத்தேர்தல்)
    2006 கமலாம்பாள் (பாமக)
    2011 சோமசுந்தரம் முதலியார் (அதிமுக)
    2016 எழிலரசன் (திமுக)
    அதிமுக சார்பில் எஸ் கணிதாசம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி பனையூர் பாபு போட்டியிடும் செய்யூர் தொகுதி கண்ணோட்டம்.
    வாக்காளர்கள்

    மொத்தம்- 2,26,346
    ஆண்கள்- 1,11,270
    பெண்கள்- 1,15,019
    3-ம் பாலினம்- 57

    அதிமுக வேட்பாளர் எஸ் கணிதாசம்பத் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,52,500
    2. அசையும் சொத்து- ரூ. 81,92,651
    3. அசையா சொத்து- ரூ. 65,65,000

    விசிக வேட்பாளர் பனையூர் பாபு சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 20,000
    2. அசையும் சொத்து- ரூ. 3,67,70,852
    3. அசையா சொத்து- ரூ. இல்லை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் செய்யூர் தனி தொகுதியாக உள்ளது. முழுவதிலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமங்கள் பலவும் செய்யூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

    இத்தொகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கடபாக்கத்தில் கிழக்கு கடற்கரை ஒட்டி உள்ள பழங்கால ஆலம்பரை கோட்டை, முதலியார் குப்பத்தில் உள்ள அரசின் படகு குழாம் கல்பாக்கம் அனுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.

    மதுராந்தகம் பொதுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட இலத்தூர் ஒன்றியம், அச்சிறுபாக்கம் தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 கிராமங்களை உள்ளடக்கி செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி 2011-ல் உருவாக்கப்பட்டது.

    இத்தொகுதியில் லத்தூர் ஒன்றியத்திலுள்ள 41 ஊராட்சிகள், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகள், இடைக்கழி நாடு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகள், திருக் கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    செய்யூர் தொகுதி

    2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். ராஜி முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர், 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர். ஆர்.டி. அரசு, அ.தி.மு.க. வேட்பாளரை விட 304 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து சட்டமன்ற உறுப்பினரானார்.

    இத்தொகுதியில் வன்னியர் 25 சதவீதமும், ஆதிதிரா விடர்கள் 30 சதவீதமும், மற்ற சமுதாயத்தினர் 30 சதவீதமும், முஸ்லிம் கள் 10 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 5 சதவீதமும் உள்ளனர். தொகுதியின் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம், உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில் ஆகியவையாகும்.

    தொகுதியின் தலைமையிடமாக இருக்கக்கூடிய செய்யூர் ஊராட்சி மன்றமாக உள்ளது. செய்யூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது செய்யூர் தாலுகா உருவானதில் இருந்து 20 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது. செய்யூரில் தாலுகா அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து தரப்பிலான சிறு மற்றும் பெரு வணிக கடைகள் உள்ளன.

    தினசரி செய்யூருக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். ஆனால், தொகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து செய்யூர் வருவதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. 
    பெரும்பான்மையான கிராமங்களில் விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் செய்யூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் எல்லை அம்மன் கோயில் வரை உள்ள உப்பளம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிற்பகுதியில் இருந்து ஜூன் மாதம் வரை உப்பு உற்பத்தி தொழில் நடைபெறும். உப்பு உற்பத்தி தொழிலுக்கு அரசின் சார்பாக மீதமுள்ள 6 மாத காலங்களில் உப்பு உற்பத்தி செய்பவர்கள் மற்றும் உப்பு தொழிலாளிகளுக்கு போதிய நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை என்பது தான் தொகுதியின் நீண்டகால பிரச்சினையாக உள்ளது.

    இத்தொகுதியில் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. புதிதாக தொழிற்சாலை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தொழிற்சாலைகள் வந்தால் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு பெருகும். செய்யூர் அனல் மின் நிலையம்(4000 மெகாவாட்) திட்டம் தீட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, முழுவதுமாக அனல் மின்நிலையம் இயங்க முழு வீச்சில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    தொகுதி முழுக்க கிராமங்களை உள்ளடக்கியது. கிராமங்களுக்குள் செல்லும் சாலைகள் பெரும்பாலும் குண்டு குழியுமாக உள்ளது. சாலைகளை செப்பனிட்டு புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும் என்பதே தொகுதி மக்களின் கோரிக்கை.

    செய்யூர் தொகுதி

    தொகுதியிலுள்ள செய்யூர், பவுஞ்சூர், சூனாம்பேடு, கயப்பாக்கம், கடப்பாக்கம் உள்ளிட்ட பெரிய கிராமங்களில் மட்டும் சுகாதார நிலையங்கள் உள்ளன.நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறிய கிராமங்களிலும் துணை சுகாதார நிலையங்களை நிறுவ வேண்டும்.

    தொகுதியில் உள்ள ஏரி பாசனத்தால் பயன்பெறும் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது அவற்றை அகற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. மேல்மருவத்தூரில் 2 ஏரிகள் முழுவதுமாக தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவற்றை மீட்டு ஏரியில் நீர் சேமித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

    செய்யூர் தொகுதியில் இப்போது அ.தி.மு.க. சார்பில் கனிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    2016 தேர்தல் விவரம்:-

    ஆர்.டி.அரசு (தி.மு.க.)- 63446
    முனுசாமி (அ.தி.மு.க.)- 63142
    எழில் கரோலின் (விடுதலை சிறுத்தைகள்)- 17927
    சடையப்பன் (பா.ம.க.)- 17892
    சம்பத் (பா.ஜ.க.)- 1559
    தசரதன் (நாம் தமிழர்)- 919
    முனுசாமி (சுயேட்சை)- 803
    ரமேஷ் (பகுஜன் சமாஜ்)- 722
    நோட்டா-1825
    அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் கே. பழனி, காங்கிரஸ் சார்பில் கே. செல்வபெருந்தகை ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் வா.பா.அ. சார்பில் தணிகை வேல், நாம் தமிழர் சார்பில் புஷ்பராஜ், அமமுக சார்பில் மொளச்சூர் ரா. பெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அதிமுக வேட்பாளர் கே. பழனி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 68,975
    2. அசையும் சொத்து- ரூ. 38,68,067
    3. அசையா சொத்து- ரூ. இல்லை

    காங்கிரஸ் வேட்பாளர் கே. செல்வபெருந்தகை சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,25,000
    2. அசையும் சொத்து- ரூ. 1,51,83,396
    3. அசையா சொத்து- ரூ. 22,43,62,000

    தமிழகத்தின் பெயர் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. சென்னை பெருநகரை ஒட்டி அமைந்துள்ள இந்த தொகுதி முன்னாள் முதல்-அமைச்சர் ஒருவரை உருவாக்கிய தொகுதி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

    முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்றுள்ளார். ஆன்மீக மகான் ஸ்ரீராமானுஜர் பிறந்த ஊர் என்ற பெருமையும் இதற்கு உண்டு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் இங்கு அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மிகப்பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது. இங்கு அந்நிய நாட்டு தொழில் நிறுவனங்கள் பல தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளன.

    ஹூண்டாய் மற்றும் நிசான் கார் தொழிற்சாலைகள், செயின்ட் கோபெய்ன் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை, அப்போலோ மற்றும் எம்.ஆர்.எப். டயர் தயாரிக்கும் தொழில் சாலைகள் உள்பட 2500&க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தனி தொகுதி ஆகும். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 514. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 68 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 76ஆயிரத்து 396 பேர். மூன்றாம் பாலினத்தவர் 50 பேர் உள்ளனர்.

    தொகுதியில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை போன்ற பெரிய ஊர்கள் உள்ளன. இதை தவிர நிறைய சிறிய கிராமங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி, மாங்காடு பேரூராட்சி, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், மாங்காடு பேரூராட்சியில் 15 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும் உள்ளன.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

    தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முதலியார்கள், மற்றும் சில சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். தேசிய விடுதலைக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1952-ல் முதல் முறையாக தேர்தல் நடைபெற்றது. 

    அதன் பிறகு 15 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 7 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் 7 முறை வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது.

    தொழில் நகரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூரில் நீண்ட காலமாக மக்கள் பிரச்சினையாக இருப்பது மேம்பாலம். சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் பகுதியை கடந்து செல்கிறது. இங்கு தொழில் சாலைகள் நிறைந்து இருப்பதால் கனரக வாகனங்கள் செல்வதால் இங்கு போக்கு வரத்துநெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. சென்னைக்கு நுழைவு- வாயிலாக இருப்பதால் பண்டிகை காலங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல பல மணிநேரம் ஆகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

    ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டை இணைக்கும் சாலையில் மேம்பாலம் அமைக்க பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் சுங்குவார் சத்திரம் பகுதியில் அடிப்படை வசதிகள் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளன.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

    ஸ்ரீபெரும்புதூரையொட்டி உள்ள சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கின்றனர். போதிய வசதி ஆஸ்பத்திரியில் இல்லாததால் சென்னை, செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அனுப்பி விடுகின்றனர். 

    போக்குவரத்து நெரிசலை கடந்து செல்வ தற்குள் பலர் இறந்து விடுகின்றனர். எனவே இங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி நவீன மயமான உயிர் காக்கும் ஆஸ்பத்திரியாக மாற்றி அமைக்க வேண்டும் என பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி

    1952- டி.சண்முகம் (சுயேட்சை)
    1957- எம்.பக்தவச்சலம் (காங்கிரஸ்)
    1962- எம்.பக்தவச்சலம் (காங்கிரஸ்)
    1967 டி.ராஜரத்தினம் -(தி.மு.க.)
    1971- டி.ராஜரத்தினம் (தி.மு.க.)
    1977- என்.கிருஷ்ணன் -(அ.தி.மு.க.)
    1980- டி.யசோதா (காங்கிரஸ்)
    1984- டி.யசோதா (காங்கிரஸ்)
    1989- இ.கோதண்டம் (தி.மு.க.)
    1991- போளூர் வரதன் (காங்கிரஸ்)
    1996- இ.கோதண்டம் (தி.மு.க.)
    2001- டி.யசோதா (காங்கிரஸ்)
    2006- டி.யசோதா (காங்கிரஸ்)
    2011- ஆர்.பெருமாள் (அ.தி.மு.க.)
    2016- கே.பழனி (அ.தி.மு.க.)
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 75-ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 75-ஆக உயர்ந்துள்ளது.

    காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 50 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவ கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு விடுதிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
    வேட்பாளர்கள் தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை, தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆய்வு செய்ய இருப்பதால் வேட்பாளர்கள் நேரிலோ அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ தங்களது தினசரி தேர்தல் செலவின பதிவேடு மற்றும் பட்டியல், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நாளை(வியாழக்கிழமை), வருகிற 30-ந்தேதி, அடுத்த மாதம் 4-ந்தேதிகளில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

    வேட்பாளர்கள் தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் செலவு பதிவேட்டை தாக்கல் செய்யத் தவறிய காரணத்திற்காக தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வாழை இலை கட்டுகள் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
    தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 55), திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார்.

    குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது, முன்னாள் வாழை இலை கட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், சாலையில் கவிழ்ந்தது. அப்போது கவிழ்வதற்கு முன்னதாக லாரியிலிருந்து சரிந்த வாழை இலை கட்டுகள் பழனி மீது விழுந்ததில், அவர் சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன பழனி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சிவராஜ் (37), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
    சென்னை விமான நிலையத்தில் தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் மற்றும் சார்ஜா விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த மெகபூப் அக்பர் அலி (வயது 35), சென்னையை சேர்ந்த சுபைர் உசேன் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களின் தலைமுடி வித்தியாசமாக இருந்ததால் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர்கள், தங்களது தலையின் மேல் பகுதியில் முடியை சவரம் செய்து, அதற்கு பதிலாக ‘விக்’ வைத்து இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த ‘விக்’கை பிரித்து பார்த்தபோது, ‘விக்’கின் அடியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அகமதுல்லா (22), சேலத்தை சேர்ந்த சந்தோஷ் செல்வம் (33), சென்னையை சேர்ந்த அப்துல்லா (35) ஆகியோரும் இதே பாணியில் தலை முடி ‘விக்’கில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.96 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 80 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் துபாயில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (24) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.43 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 933 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

    துபாயில் இருந்து வந்த விழுப்புரத்தை சேர்ந்த அன்பழகன் (24) என்பவர் காலுறை(சாக்ஸ்) மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்த தமீம் அன்சாரி (25) என்பவரையும் மடக்கி பிடித்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல வந்த 4 பேரின் தலைமுடி ‘விக்’குகளில் மறைத்து கடத்திச்செல்ல முயன்ற ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகளால் கடத்தல் கும்பல் தற்போது புதுவிதமாக தலைமுடி ‘விக்’கில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் புதிய விதமான கடத்தலையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் தங்கம், ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பூக்கடை சத்திரத்தில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர், இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நடக்கும் தேர்தல். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு நடைபெறும்.

    போலி கூட்டுறவு சங்கங்கள் உருவாகும். அதன் மூலம் கொள்ளை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வலைதள உதவி மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு, 1950 வாக்காளர் வலைதள உதவி மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆலந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராகேஷ் குமார் வர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலமுருகன், (வேளாண்) கணேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமாரை ஆதரித்து வாலாஜாபாத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரூ.1,500 அறிவித்துள்ளது. தற்போது தமிழக அரசு முதியோர் உதவி தொகையை கொடுக்க முடியாமல் ரூ.7 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருகிறது. இவர்கள் எப்படி இது போன்ற திட்டங்களை கொடுக்க முடியும்.

    மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கல் குவாரிகள் இயங்கும் பகுதிகளில் தரமான சாலைகள் மற்றும் வாகன விபத்தை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    செய்யாறு, பாலாறு ஆகிய ஆறுகள் இணையும் ஆற்றுப்பகுதியில் குறுக்கே, தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருந்து சாலவாக்கம் தனி ஒன்றியமாக பிரிப்பதற்கு முழுமூச்சில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் என்.மனோகரன், அ.ம.மு.க. நிர்வாகிகள் தம்மனூர் இ.தாஸ், ஆலஞ்சேரி கமலக்கண்ணன், வேளியூர் எம்.தனசேகரன், மணிமாறன், கூரம் பச்சையப்பன் மாவட்ட மகளிரணி செயலாளர் வரலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. காய்கறி கடை அருகே வந்த வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பையை அங்கேயே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. கேட்பாரற்று கிடந்த பையை காய்கறி கடைக்காரர் பிரித்து பார்த்த போது அதில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மருந்துகள் நிரப்பப்பட்டு திரி வெளியே தெரியும் அளவுக்கு வெடிகுண்டு இருந்ததை பார்த்தார்.

    உடனடியாக காய்கறி கடைக்காரர் அதை எடுத்து அங்குள்ள கால்வாயில் போட்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கால்வாயில் இருந்த வெடிகுண்டை எடுத்து பத்திரமாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த பிறகே அது என்ன என்பது தெரிய வரும். தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×