என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    ஆலந்தூர்- 59.77%
    காஞ்சிபுரம்-60.45%
    ஸ்ரீபெரும்புதூர்-74.03%
    உத்திரமேரூர்-69.50%
    சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி (வயது 32), முகமது (40) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    2 பேரிடம் இருந்தும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், தனது தாயாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
    ஆவடி:

    சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ (வயது 19). பி.காம் படித்துள்ளார். இவருக்கும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச்சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    பாலமுருகனும், அவருடைய தாயார் அம்சாவும் தங்களது வீடு கடன் வாங்கி கட்டப்பட்டுள்ளது. எனவே பணம் தேவைப்படுவதால் உனது பெற்றோரிடம் கூடுதல் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஜோதிஸ்ரீ தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் இருவீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோதிஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனது சான்றிதழ்கள் மற்றும் துணிகளை எடுப்பதற்காக ஜோதிஸ்ரீ, திருமுல்லைவாயலில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மாமியார் அம்சா, மருமகள் ஜோதிஸ்ரீயை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

    அதையும் மீறி ஜோதிஸ்ரீ வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த ஜோதிஸ்ரீ, அந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய ஜோதிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தபோது ஜோதிஸ்ரீ தனது தாயாருக்கு எழுதியதாக கூறப்படும் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

    அதில் அவர், “நகை, பணத்துக்கு ஆசைப்படுபவருக்கு என்னை ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா?. பணம், நகை இருந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று என் கணவர் சொல்கிறார். எல்லாவற்றையும் நான் சொல்ல முடியவில்லை. நான் போகிறேன். எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவரும், மாமியாரும்தான். அவர்களை சும்மா விடாதீர்கள்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோதிஸ்ரீயின் தாயார் உமா அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார் அம்சா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் ஜோதிஸ்ரீக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 
    நிலத்தை நண்பரின் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்து துராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
    காஞ்சீபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் ஆதனஞ்சேரியை சேர்ந்தவர் பூங்கோதை. இவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம் படப்பை வஞ்சுவாஞ்சேரியில் உள்ளது. அந்த நிலத்தை மதுரமங்கலத்தை சேர்ந்த ரவுடி குணா(38) தனது நண்பருக்கு எழுதி கொடுத்துவிடு என்று கூறி பூங்கோதையின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து பூங்கோதை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகபிரியாவிடம் புகார் அளித்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடியான படப்பை குணாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
    தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா நேற்று உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
    சென்னை:

    தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அ.ம.மு.க. வேட்பாளர்கள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மொளச்சூர் பெருமாள், மனோகரன், ஆகியோர் பட்டாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அவருக்கு கோவில் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, கோவில் அர்ச்சகர் நடனம் சாஸ்திரிகள் ஆகியோர் குங்கும பிரசாதம் வழங்கினார்கள்.

    அதன் பின்னர் அவர் புகழ் பெற்ற காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அங்கு மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.
    தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
    அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சி உதவியாளரான குப்பன் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுடன் சென்று அவருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம், குப்பனிடம் விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்கம் செய்தார்.

    இதற்கு முன்பு தி.மு.க. வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் சதீஷ், திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மானாமதி ஊராட்சி உதவியாளர் குப்பன் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் ராமானுஜர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 62). இவரது மனைவி துரைராணி (56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    தற்போது மூர்த்தி, துரைராணி மட்டும் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள தனது மகள் வீட்டுக்கு மூர்த்தி, துரைராணி இருவரும் சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.53 ஆயிரம், 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மூர்த்தி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் 3 வாலிபர்கள் முக கவசம் அணிந்து வந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் சாலையில் நோட்டமிட்டு கொண்டிருப்பதும், 2 பேர் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று விட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்தது.

    கொள்ளையர்களுக்கு 15 முதல் 20 வயது வரை இருக்கும் என்று தெரிகிறது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒரகடம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 74). இவர் கடந்த 29-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ஒரகடம் கூட்டு சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சக்கரவர்த்தியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக அரசு ஈடுபடுத்த உள்ளது.

    எனவே இந்த பணிக்கு செல்ல விருப்பமும் உடல் திடகாத்திரமும் உள்ள 70 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

    அவ்வாறு பணிபுரிய விருப்ப மனு அளிக்கும் அனைவருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலமாக தபால் ஓட்டுக்கு வழிவகை செய்யப்படும். மேலும், தேர்தல் பணி ஆட்சேர்ப்பு நிமித்தமாக விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் இயங்கும் என்பதால் முன்னாள் படைவீரர்கள் அனைவரும் அந்த தினங்களிலும் அலுவலக நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை) தேர்தல் பணி விருப்ப விண்ணப்பத்தினை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு, காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநரை 044-2226 2023 என்ற எண்ணில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ்துறை சார்பில் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி அரசில் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு செய்து வருகின்றனர்.

    அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)தொகுதியில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், சுங்குவார் சத்திரம் அடுத்த சோகண்டி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபட்டு அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அமாவாசை ஆகியோரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.66ஆயிரத்து 500 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து காஞ்சீபுரம் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.

    ×