என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம், சித்தேரி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரையரசன் (வயது 38). ரெயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நேற்று காலை துரையரசன் எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காஞ்சீபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் பேர் வந்தனர்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இது தற்போது குறைந்து நேற்று சுமார் 5,500 பேர் மட்டுமே வந்தனர்.
இதைப்போல் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், மாவட்டத்திற்கு ஒரு நாளுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் பேர் பயணித்தனர். தற்போது அது குறைந்து நேற்று சுமார் 6,500 பேர் மட்டுமே பயணித்தனர்.

இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன.
பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூர் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டிலிருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூர்-1, மதுரை-1, பாட்னா-1 ஆகிய 9 விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனா். அதன்பிறகு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுபிடித்தனா்.
அந்த பாா்சல்களை வெளியே எடுத்து பிரித்து பாா்த்தனா். அதில் தங்க கட்டிகள் இருந்தது. 2 பாா்சல்களிலும் இருந்த ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யாா்? என விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்தது.
வெளியூரில் இருந்து வந்து தேர்தல் பணிபுரிந்த ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போடுபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஆலந்தூர் தொகுதியில் ஆயுதப்படை போலீசார், தனிப்படை போலீசார், தீயணைப்பு படையினர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் தினத்தில் பணியாற்றினார்கள்.
இவர்கள் தபால் வாக்கு போடுவதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆலந்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தனர்.
இதில், 200-க்கும் அதிகமான மனுக்கள் ஏற்கப்படவில்லை. இதுகுறித்து முறையான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தபால் வாக்கு போட முடியாமல் தவித்து வருகிறார்கள். தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் கமிஷனரும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தபால் வாக்குகளை உடனடியாக செலுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் தெரிவித்தால் எந்த தொகுதியில் ஓட்டு இருக்கிறது என்பது தெரியும். இதன் மூலம் தபால் வாக்குகளை போடலாம்.
மே மாதம் 2-ந் தேதி தான் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே, மே 1-ந் தேதி வரை தபால் வாக்குகளை போட முடியும். எனவே இவர்கள் தபால் வாக்கு அளிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.51 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 37), முகமது அலி அக்பர் (61), தேனியை சேர்ந்த முகமது அப்துல்லா (37), சென்னையை சேர்ந்த அபு ஜாவித் (27), சிவகங்கையை சேர்ந்த ஷாஜகான் (57) ஆகிய 5 பேர் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், 5 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது சூட்கேசின் டிராலி கைப்பிடி சற்று கனமாக இருந்தது.
உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கழுற்றி பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக சவுதி ரியால், குவைத் தினார், அமெரிக்க டாலர், ஓமன் ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
5 பேரிடம் இருந்து ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் (வயது 28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர் ஒருவித பதற்றத்துடனும், பரபரப்பாகவும் காணப்பட்டார். எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் அணிந்து இருந்த பேண்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர், விமான இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டதாகவும், பின்னர் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் ஏறிய தான் இருக்கையின் அடியில் இருந்த தங்கத்தை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதபோல் துபாயில் இருந்து லக்னோ வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (30) என்பவர் வந்தார். இவரும் அதேபோல் விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தை தனது கால் உறைக்குள்(சாக்ஸ்) மறைத்து எடுத்து வந்தார். அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






