என் மலர்tooltip icon

    ஈரோடு

    தாயுடன் படுத்திருந்த ஆண் குழந்தை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவரது மனைவி பிரியா (20).

    இவர்களுக்கு வெற்றி என்ற 4 வயது மகனும் பிரபாஸ் என்கிற 1½ வயது ஆண் குழந்தையும் உள்ளனர். முருகன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் மகன்களுடன் ஊர் ஊராக சென்று பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அந்தந்த பகுதியில் உள்ள கடைகள் அருகே குழந்தைகளுடன் படுத்து தூங்குவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வியாபாரத்திற்காக புஞ்சை புளியம்பட்டி வந்தனர். அவர்கள் இரவு புளியம்பட்டி வார சந்தை பகுதியில் தங்கி வியாபாரம் செய்தனர். பிறகு அங்கே படுத்து தூங்கினர்.

    காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது அவர்கள் பக்கத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த பிரபாஸை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கம் தேடினர்.

    ஆனால் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து குழந்தையின் தாய் பிரியா புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்தார்.

    குழந்தை பிரபாஸ் இரவில் படுத்திருந்தபோது தவழ்ந்து எங்கேயாவது சென்று விட்டானா? அல்லது மர்ம ஆசாமிகள் யாராவது குழந்தையை கடத்தி சென்று விட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது என்றும் அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் வணிகர் பேரமைப்பு மாநில தலைவர் கூறினார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைச்செயலாளர் சிவனேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

    தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விதிகளில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை கவனித்தால் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பொருள் பேக்கிங் செய்யவும் விற்பனை செய்யவும் இந்த அறிவிப்பு பாதகமாக உள்ளது.

    மையம் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து பேக்கிங் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் தடை இல்லை என்று அறிவித்துள்ளது. உதாரணமாக சிறு குறு மளிகை வியாபாரிகள் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வணிகத்திற்கு ஏற்றவாறு பேக்கிங் செய்து இதுவரை விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது தடை அறிவிப்பின்படி பொருட்களை மேற்கூறியவாறு பேக்கிங் செய்யவும் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களது தொழில் மிகவும் பாதிக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

    இது சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர ஓட்டல் மற்றும் சிறு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரி நிறுவனங்கள், பொருட்களை பேக்கிங் செய்வதற்கு இதுவரை பிளாஸ்டிக் பொருளை உபயோகித்து வந்தனர். தற்போது இந்த தடையால் மாற்று பொருள் தெரியாமல் பேக்கிங் செய்ய சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான விழிப்புணர்வை தந்து மறுசுழர்ச்சிக்கு குப்பைகளை சேகரித்து பயன்படுத்தும் பொழுது குப்பைகளின் அளவும் முற்றிலும் குறையும்.

    அதேசமயம் மறுசுழற்சி நிறுவனங்களும் பெருகி நிறைய வேலை வாய்ப்புகளும் உண்டாகும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்கு ஏதுவான உதவிகளை செய்து அவர்கள் தொழில் முனைய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    இந்த தடையால் பல கோடி வியாபாரிகளும் எங்களை போன்ற உற்பத்தியாளர்களும் பாதிப்படைவார்கள். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும் வழி வகுத்து விடும்.

    எனவே இந்த பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது .அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு 100 சதவீதம் தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயற்குழு உறுப்பினர் ராமசாமி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் துணைத்தலைவர் ஜெப்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஈரோட்டில் ஓடும் பஸ்சில் இருந்து டாக்டரிடம் லேப்-டாப் மற்றும் செல்போன் அடங்கிய பையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் அடுத்த புது உடையம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37). இவர் அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இதற்காக அவர் தினமும் அவினாசிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த பஸ் சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வழியாக ஈரோடு வந்து அவினாசிக்கு செல்லும்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜ்குமார் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ராஜ்குமார் தனது லேப்-டாப், செல்போன் அடங்கிய பொருட்களை ஒரு பையில் வைத்திருந்தார்.

    ராஜ்குமாரின் பின் பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த பையை திடீரென பிடுங்கி கொண்டு ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் திருடன் திருடன் என கத்தினார். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு அடுத்த தாமரை பாளையம் புது காலனியைச் சேர்ந்த மயில்ராஜ் (வயது39) என தெரியவந்தது.

    மயில்ராஜிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள காசிபாளையம் பணிமனையில் இன்று புதிதாக 5 பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம். கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனவரி மாதத்திற்கு பிறகு பாலிதின் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே அனைவரையும் அழைத்துப் பேசி இருக்கிறார்கள். அதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிலும் மிக விரைவில் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

    ஒவ்வொரு பள்ளியிலும் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையாக பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்ற நிலைவரும். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போக்குவரத்து துறை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக் காலம் பொற்காலமாக அமைந்துள்ளது. ஈரோடு மண்டலத்திற்கு மட்டும் 112 புதிய வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 51 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    மேலும் 56 வாகனங்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.


    மனித நேயத்தோடும் மக்களின் நலன் கருதி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் இந்த பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

    போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்கள் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து கேட்டபோது அமைச்சர் கூறியதாவது:-

    இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. என்னை பொறுத்த வரை இந்த அரசு சிறப்பான முறையில் எந்த பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதுகிறதோ அதை ஆற்றி வருகிறது

    எதிர்க்கட்சி என்ற முறையில் பல கருத்துக்கள் சொல்கின்றது. அதை நேரடியாக கருத்துக்கள் பரிமாறும் போதுதான் சட்டமன்றத்தில் பதில் அளிக்க இயலும். மற்றபடி இப்போது நான் கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்ளனரா? என போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். #Maoist

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்ளனரா? என போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுப்படி நக்சல் பிரிவு போலீசார், சிறப்பு அதிரடி படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மற்றும் ஆதி வாசிகளை குறி வைத்து அவர்களை மூளை சலவை செய்து தங்கள் வசப்படுத்த மாவோயிஸ்டுகள் திட்ட மிட்டு செயல்படுவதாக தகவல் வந்தது.

    இதன் அடிப்படையிலேயே சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியை தமிழக போலீசார் முடக்கி விட் டுள்ளனர்.

    கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்கம் வன கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நக்சல் மற்றும் அதிரடிப்படை போலீசார் 25-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர்.

    புதிய நபர்கள் யாராவது வருகிறார்களா? பண உதவி செய்கிறோம் என கூறி ரேசன் கார்டு, ஆதார் கார்டுகள் கேட்கிறார்களா? என கேட்டறிந்தனர்.

    அப்படி யாராவது வந்தால் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடி மக்களை கேட்டு கொண்டனர்.

    கடம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார வன கிராமங்கள் மற்றும் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. #Maoist

    பெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரள அரசு ஊழியரின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40), இவர் கேரள மாநில அரசு ஊழியராக உள்ளார்.

    இவர் தனது தந்தை தாமோதரன் (75), தாய் ராதா (60), மனைவி தீபா (36) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை தேவராஜ் ஓட்டினார். முன் சீட்டில் தாமோதரனும், பின் சீட்டில் ராதா, தீபா ஆகியோரும் இருந்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் வந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்தது.

    திடீரென கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் முன் சீட்டில் இருந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் தாமோதரன் பக்கத்தில் பொருத்தப்பட்ட பலூன் வேலை செய்யாததால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் தேவராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

    பின் சீட்டில் அமர்ந்திருந்த தீபாவும், ராதாவும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்த தீபாவையும், ராதாவையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சித்தோடு அருகே மொபட் விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பவானி:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). தொழிலாளி.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தோடு நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டில் ராமசாமி உள்பட 3 பேர் இருந்தனர். சித்தோடு அருகே உள்ள அமராவதி நகர் பக்கம் சென்றபோது அந்த வழியாக நடந்து சென்ற கோமதி என்ற பெண் மீது மொபட் மோதியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய மொபட்டில் இருந்து ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ராமசாமி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மனைவி தனிக்குடித்தனத்துக்கு வலியுறுத்தியதால் மனமுடைந்த தறிப்பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது40).இவரது மனைவி பூமதி (30). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கார்த்தி ஈரோட்டில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். கார்த்தி- பூமதி கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் பூமதி தனது கணவரிடம் தனிக்குடித்தனம் போகலாம் என்று வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலையும் இது சம்பந்தமாக பூமதி கார்த்திக்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அருகே வீட்டுக்குள் படுத்திருந்த நிலையில் பிணமாக கிடந்தவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானி தொழிலாளர் வீதியை சேர்ந்தவர் பாபு என்கிற சீனிவாசன் (வயது 45).

    இவரது மனைவி பெயர் தமிழரசி. சசிகுமார் என்ற மகனும் சுபரஞ்சனி என்ற ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டுக்கு வந்த சீனிவாசன் தனது அறையில் போய் படுத்து தூங்கிவிட்டார். அப்போது அவர் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று 9-ந்தேதி அவரது மகள் சுபரஞ்சனி தந்தை அறைக்கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கு சீனிவாசன் படுத்திருந்த நிலையிலேயே பிணமாக கிடந்தார்.

    இது குறித்து பவானி போலீசுககு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    7-ந்தேதி இறந்து கிடந்த சீனிவாசன் 2 நாட்களுக்குப் பிறகே அவரது உடல் மீட்கப்பட்டது.

    பவானி போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இவரது மகள் சித்ரா(வயது32).

    சித்ராவை சேலம் மாவட்ட, மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.

    சித்ரா அவ்வபோது சித்தோடு அடுத்த மணக்காடு பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    இதே போன்று நேற்றும் சித்ரா சேலத்தில் இருந்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடுக்கு பஸ்சில் வந்துள்ளார்.

    பின்னர் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சித்தோடு செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ் மணக்காடு பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது.

    பஸ்சில் இருந்து இறங்கிய சித்ரா தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது காமராஜர் தெரு அருகே சென்ற போது சித்ரா பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களில் பின்னால் உட்கார்ந்து வந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    சித்ரா திருடன்...திருடன் என்று கத்தினார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தாங்கள் வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து சித்ரா சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கனமழை எதிரொலியால் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது. #Rain

    கோபி:

    ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டத்தில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

    அம்மாபேட்டை பகுதியில் மட்டும் 63 மி.மீ மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத் ஓடியது.

    அடுத்தப்படியாக கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு மழை வெளுத்து கட்டியது.

    இதையொட்டி கோபி பஸ் நிலையம் அருகே உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அப்பகுதி மக்களும் பயணிகளும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

    இந்த மழையால் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.

    கோபி அருகே உள்ள கொளப்பலூர் குளம் 63 ஏக்கர் கொண்டது. கனமழையால் இந்த படர்ந்த குளமும் நிரம்பி வருகிறது. இன்னும் இரண்டொரு நாளில் இதேபோல் மழை பெய்தால் அந்த குளம் நிரம்பி விடும்.

    தொடர் மழையால் கோபி பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோபியில் 58.2 மி.மீ மழை பெய்தது.

    மேலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் இரவு இடி-மின்னலுடன் மழை கொட்டியது. 30 மி.மீ மழை பெய்திருந்தது.

    இதேபோல் பவானிசாகர், கொடுமுடி, வனப்பகுதியான தாளவாடி, நம்பியூர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

    இந்த கனமழையால் கோபி மற்றும் நம்பியூர் பகுதிகளில் 85 வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. அவற்றை பொதுமக்கள் வாரி வெளியே கொட்டினர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அம்மாபேட்டை -63.4, கோபி -58.2, பவானிசாகர் -15.6, வரட்டுப்பள்ளம் -13.6, பவானி -8.6 கவுந்தப்பாடி -7 . #Rain

    மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியிலும் வனப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக கேரள மாநில எல்லையிலும் வனப்பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. கோவையில் இவர்களின் நடமாட்டம் குறித்து 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து அந்தந்த மாவட்ட போலீசார் ரகசிய விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளான சத்தியமங்கலம், கடம்பூர் ஆகிய வனப் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்ட வனப்பகுதி தவிர மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் கிடையாது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து ஈரோடு போலீசாருக்கு ஒரு ரகசிய கடிதம் வந்ததாகவும் அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தங்கி இருப்பதாகவும், அவர்களால் எந்த அபாயமும் ஏற்படலாம், கொரில்லா தாக்குதலிலும் ஈடுபடலாம் எனவும் கூறப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதனால் ஈரோடு மாவட்ட போலீசார் இடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாரிடம் கேட்டபோது, “இது குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை. கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்களும் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் இன்று மாலைமலர் நிருபர் கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது:-

    எனது பார்வைக்கும் இது வந்தது. மாவோயிஸ்டு ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் கொரில்லா தாக்குதல் நடத்த இருப்பதாகவும் சொன்னார்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை.

    மேலும் இதுபற்றி கியூ பிராஞ்சு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். நாங்களும் மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை மாவோயிஸ்ட் யாரும் சிக்கவில்லை.

    வனப்பகுதிகளான சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளிலும் 24 மணி நேரம் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.

    இவ்வாறு எஸ்.பி.சக்தி கணேசன் கூறினார்.
    ×