search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவோயிஸ்டு ஊடுருவல் - ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை
    X

    மாவோயிஸ்டு ஊடுருவல் - ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

    மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியிலும் வனப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக கேரள மாநில எல்லையிலும் வனப்பகுதியிலும் இவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. கோவையில் இவர்களின் நடமாட்டம் குறித்து 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து அந்தந்த மாவட்ட போலீசார் ரகசிய விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளான சத்தியமங்கலம், கடம்பூர் ஆகிய வனப் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்ட வனப்பகுதி தவிர மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் கிடையாது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து ஈரோடு போலீசாருக்கு ஒரு ரகசிய கடிதம் வந்ததாகவும் அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தங்கி இருப்பதாகவும், அவர்களால் எந்த அபாயமும் ஏற்படலாம், கொரில்லா தாக்குதலிலும் ஈடுபடலாம் எனவும் கூறப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதனால் ஈரோடு மாவட்ட போலீசார் இடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாரிடம் கேட்டபோது, “இது குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை. கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்களும் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் இன்று மாலைமலர் நிருபர் கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது:-

    எனது பார்வைக்கும் இது வந்தது. மாவோயிஸ்டு ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் கொரில்லா தாக்குதல் நடத்த இருப்பதாகவும் சொன்னார்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை.

    மேலும் இதுபற்றி கியூ பிராஞ்சு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். நாங்களும் மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை மாவோயிஸ்ட் யாரும் சிக்கவில்லை.

    வனப்பகுதிகளான சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளிலும் 24 மணி நேரம் போலீசார் விழிப்புடன் உள்ளனர்.

    இவ்வாறு எஸ்.பி.சக்தி கணேசன் கூறினார்.
    Next Story
    ×