என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு பெரியார் நகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ தெற்னுகு ரெயில்வே மின் பாதையில் உயர் அழுத்த மின் புதை வடம் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு பெரியார் நகர், பட்டேல் வீதி, எஸ்கே.சி. ரோடு, சிதம்பரம் காலனி மற்றும் பெரியார் நகர் ஹவுசிங் போர்டு முழுவதும்.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் செயற் பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ளது கோவிந்த நாயக்கன் பாளையம். இந்த ஊரில் எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல் பூஜை வழிபாடு முடிந்து பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

    இன்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்த பூசாரி அதிர்ச்சி அடைந்தார். கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. மர்ம ஆசாமிகள் கடப்பாறையால் நெம்பி உடைத்து பெயர்த்து உண்டியலை தூக்கி சென்று உள்ளனர்.

    இது பற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர்.

    கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உண்டியல் கிடந்தது. கொள்ளையர்கள் உண்டியலை காட்டு பகுதிக்கு தூக்கி சென்று உள்ளே இருந்த சுமார் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு வெறும் உண்டியலை அப்பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்று உள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழா நடந்தது. விழாவில் பேசிய கேரள கவர்னர் சதாசிவம், கவர்னர் பதவியைவிட விவசாயம் பார்க்கத்தான் ஆர்வமாய் இருந்தேன் என்று கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில கவர்னருமான சதாசிவம் கலந்து கொண்டார். நான் ஒரு சாதாரண கிராமத்தில்... சாதாரண குடும்பத்தில்.. பிறந்து வளர்ந்தவன்.

    ஈரோடு மாவட்டம் சிங்கம் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன். கல்லூரி படிப்பை ஈரோடு சி.எம்.சி. கல்லூரியில் முடித்தேன். சட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்தேன்.

    நாம் எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும். நாம் வந்த வழியை திரும்பி பார்க்க வேண்டும். நான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முதல்நாளில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்னை தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தனர். மகிழ்ச்சியாக இருந்தது.

    முயற்சி செய்தால் கண்டிப்பாக பெரிய பதவிக்கு யாராலும் வர முடியும். பெண்கள் பள்ளியில் படிக்கும் போதே சமுதாயத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை குறித்து தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்ய வேண்டும் எனதான் நினைத்தேன். அது பற்றி அறிவித்தும் இருந்தேன்.

    அதே சமயம் கேரள கவர்னர் பதவி வந்தது. முதலில் கவர்னர் பதவியை ஏற்க தயங்கினேன். பின்னர் என் நலம் விரும்பிகள் உங்களை போல் பலர் ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் ஆகி உள்ளனர். நீங்களும் பதவி ஏற்கலாம் என கூறினர். அதன்படி கேரள கவர்னர் ஆனேன். கேரளா மாநிலம் 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலம் ஆகும்.

    மேலும் கேரளாவில் கல்வி தரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகிறேன்.

    இவ்வாறு கேரள கவர்னர் சதாசிவம் கூறினார்.

    முன்னதாக கல்லூரி அறக்கட்டளை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் எஸ்.டி.சந்திர சேகர் வாழ்த்தி பேசினார்.

    கேரள கவர்னர் சதாசிவம் கல்வி ஆராய்ச்சி அருங்காட்சியகம் தற்காப்பு திரன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து ஆசிரியர்களை அவர் கவுரவித்தார். முடிவில் கல்லூரி பொருளாளர் அருண் நன்றி கூறினார்.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மொடவாண்டி பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயி.

    இவருக்கு 3 மகள்கள். 2-வது மகள் கோகுல சிவரஞ்சனி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    மாணவி கோகுல சிவரஞ்சனி தன்னை பெற்றோர் மற்ற மகள்களை போல் பார்க்கவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சைக்கிளுடன் பள்ளிக்கு போன கோகுல சிவரஞ்சனி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அலிங்கியம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் மாணவி கோகுல சிவரஞ்சனி உடல் மிதந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகே மாணவி வந்த சைக்கிள் இருந்தது. அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கடத்தூர் போலீசார் விரைந்து வந்து அக்கம்-பக்கத்தினர் உதவியுடன் மாணவி உடலை மீட்டனர். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.

    போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம் மற்றும் கோபியில் பலத்த மழை பெய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    சத்தியமங்கலத்தில் சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மழை வெள்ளம் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் மேற்கு வீதியில் 3 வீடுகளுக்குள் புகுந்தது. மழையால் அந்த வீடுகளின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்படன் வெளியேறினர்.

    சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தவசியப்பன் நேரில் வந்து பார்வையிட்டார். சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 45 மி.மீ. மழை பெய்தது.

    இதேபோல் கோபி, கொடிவேரி, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழை தண்ணீர் ஓடியது.

    மேலும் நம்பியூர், பவானிசாகர், கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பெய்த பலத்த மழையால் இன்று காலை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 500 கனஅடியாக வந்த தண்ணீர் இன்று 3586 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.47 ஆயிரம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது25). வியாபாரி. சம்பவத்தன்று அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் வியாபாரத்தில் வசூலான ரூ .47 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

    வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரூ.47 ஆயிரம் பணப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் யாரோ பணப்பையை திருடிக் கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அய்யப்பன் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    தனது கடையில் வேலை பார்த்து வரும் ரங்கம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் மட்டும் பிரகாஷ் என்பவர்கள் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து டவுன் போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவிலைச் சேர்ந்த பாலகுமார் என்பவருடன் சேர்ந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே, பவானி ரோடு பூவம்பாளையம்தேவி நெடுஞ்சாலை பிரிவில் நேற்று மதியம் ஒரு முதியவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இரவு பரிதாபமாக இறந்தார். 60 வயதான அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் குடற்புழு நோயால் ஆண் குட்டி யானை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கடம்பூர் கிழக்கு காவல் சுற்று பகுதியில் ஒரு ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது.

    டிஎன்.பாளையம் வனசரக காப்பாளர்கள் டி.என்.பாளையம் வகுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டரைப்பள்ளம் என்ற வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானையின் உடல் மீட்கப்பட்டது.

    இந்த யானை குட்டியை சதாசிவம் மருத்தவ குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குடல் புழு நோயால் யானை இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.

    யானை குட்டியின் குடல் புழு மாதிரிகளை கோவையில் உள்ள தடயவியல் மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மருத்துவ ஆய்வுக்கு பின்பே யானை குட்டி எப்படி இறந்தது என்று தெரியும் என தெரிவித்தனர்.
    டி.என்.பாளையம் அருகே சோளக்காட்டில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே, டிஎன்.பாளையம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாரஸ்ட்ரோடு அருகேயுள்ள சோளக்காட்டில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு நேற்று மாலை 6-மணிக்குமேல் தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ரமேஷ் என்பவரின் சோளக்காட்டில் குத்தகைக்கு எடுத்த நபர் வேலை ஆட்களுடன் சோளப்பயிரை அறுத்து கொண்டிருந்த போது ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் இறந்து கிடந்தவரின் சட்டை பையில் செல்போன் அடித்துள்ளது.

    அங்கு வேலை செய்து கொண்டிருந்த நபர் செல்போனை எடுத்து பேசியதில் இறந்தவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இறந்தவரின் உடலை வந்து போலீசார் பார்த்த போது தலையில் அடிபட்ட ரத்த காயமும் முகத்தில் ரத்தம் படிந்தவாறும் வாலிபர் உடல் கிடந்துள்ளது.

    மேலும், இறந்த கிடந்த வாலிபரின் வலது காதுக்கு மேல் தலையில் அடிபட்ட காயமும், வலது கணுக்காலில் வெட்டப்பட்டது போன்று ரத்த காயத்துடன் புண் புரையோடியும் இருந்துள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கடம்பூர் பெரியசாலட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரகா‌ஷ(வயது 30) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரேவதி, மகன் நிசாந்(வயது 7), மகள் நிசாந்தினி (வயது 6) உள்ளனர்.

    இறந்து கிடந்த பிரகாஷ் ரத்த காயங்களுடன் காணப்பட்டதால் அடித்து கொல்லப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். சட்டை பையில் செல்போன் கிடைத்துள்ளதால் பிரகா‌ஷ் கடைசியாக யார்-யாரிடம் பேசினார்? போன்ற தகவல்கள் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே வாலிபர் சாவில் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோடு சூரம்பட்டியில் வீட்டில் தூங்கிய மாணவி திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி சாஸ்திரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேனாதிபதி இவரது மகள் மேத்தா ஸ்ரீ (வயது 16). வெப்படையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு மேத்தா ஸ்ரீ தனது குடும்பத்துடன் தூங்கினார். 18 ஆம் தேதி காலை சேனாதிபதி எழுந்து பார்த்த போது தனது மகள் மேத்தா ஸ்ரீ மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை .

    இதுகுறித்து சேனாதிபதி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    சென்னிமலையில் பல லட்ச ரூபாய் கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    சென்னிமலை காட்டூர் ரோட்டை சேர்ந்த தாமோதரன் மகன் பாஸ்கரன் (வயது 38). இவர் கட்டிட ஒப்பந்ததாரர். இவரது தொழில் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது.

    இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் கடன் இருந்தது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாத மனவேதனையில் இருந்த பாஸ்கரன் சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது மனைவி கவிதா (வயது 35),அவரை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் பாஸ்கரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதல்வர் பழனிசாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசர் காலத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன அதுபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். 60 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 700 கோடி ஒதுக்கிய அரசு இந்தியாவிலேயே தமிழகம்தான்.

    பில்கேட்ஸ் ஒருமுறை கூறும்போது பிறக்கும் போது ஏழையாக பிறப்பது தவறு இல்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறப்பது தவறு என்றார். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு முதல்வர் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் கருப்பணன் கூறியதாவது:-

    குடிமராமத்து திட்டம் உலக மக்களால் போற்றப்படும் மகத்தான திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலம் பல்வேறு இடங்களில் மாயமாக இருந்த குளம் குட்டைகள் மீண்டும் விட்டு எடுக்கப்பட்டுள்ளன.

    நமது முதல்வர் இந்தியாவிலேயே எளிமையாக உள்ள முதல்வராக திகழ்கிறார். பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நமது முதல்வர் தந்துள்ளார். முதல்வராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள். பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் திட்டம் திருமண உதவி தொகை கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-

    தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினார். அவருடைய வழியில் ஆட்சி செய்து வரும் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். உயர்கல்வி படிப்பில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மொத்தம் ஆயிரத்து 666 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவிகள் கல்லூரி தேர்வில் வெற்றிபெற்று விடலாம் ஆனால் வாழ்க்கை தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×