என் மலர்
ஈரோடு
பவானி:
பெங்களூர், எண்ணூர், கல்யாண் நகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன் மகன் ஷாம்பிரகாஷ் (வயது 21) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் நண்பர்கள் ஜாபர், டேனியல், சுராஜ் 4 பேருடன் பெங்களூரில் இருந்து வால்பாறை செல்வதற்காக 2 பைக்கில் வந்து உள்ளார்கள்.
பவானி, லட்சுமி நகர் சேலம்-கோவை தேசிய நெடுஞ் சாலை காவிரி ஆற்றில் புது பாலம் கீழ் குளிப்பதற்கு இறங்கிய போது ஷாம்பிரகாஷ் கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் ஷாம் பிரகாஷை கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அதிகமாக தண்ணீர் குடித்ததினால் மயக்கமாக இருந்தார். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி திடீரென உத்தரவை வெளியிட்டது. அதன்படி குவாட்டர் ரூ.10, ஆப். ரூ.20, புல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதைப்போல் பீர் விலையும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 197 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் சில கடைகள் பார் உடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் விலை உயர்வு பற்றி விவரம் தெரியாத குடிமகன்கள் கடைக்கு சென்ற போது வழக்கம் போல் பழைய விலைக்கான பணத்தைக் கொடுத்தனர்.
விலை உயர்ந்துள்ள விபரத்தை விற்பனையாளர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்த சில குடிமகன்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல டாஸ்மாக் கடைகளிலும் இதே நிலைதான் நீடித்தது. சில குடிமகன்கள் அது என்ன? எதற்கெடுத்தாலும் டாஸ்மாக் விலையை மட்டும் உயர்த்துகிறார்கள்.
எங்களைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது. முதலீடு இல்லாமல் அரசுக்கு வருமானத்தை நாங்கள்தான் கொடுத்து வருகிறோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்துவதே விற்பனையாளர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில்,
திடீரென இந்த விலை உயர்வு அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் விவரம் தெரியாமல் டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் தான் வேண்டுமென்றே விலையை உயர்த்தி விற்பனை செய்கிறோம் என்று எங்களிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள்.
விலைப்பட்டியலை கடைக்கு முன்பாக ஒட்டியும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தகராறு செய்து வருகின்றனர். இதனால் நாங்கள் என்ன செய்யவதன்று தெரியவில்லை என்றனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டாங்கி பட்டி பகுதியில் வசிக்கும் மந்தகாளை மகன் சதீஷ்குமார் (வயது 21) டிப்ளமோ படித்துள்ளார். தற்போது ஆப்பகூடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவகங்கையை சேர்ந்த ஹரிதாஸ் மகள் சினேகாதாரணி (வயது 20) டி.பார்ம் படித்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5-ம் தேதி பவானி கூடுதுறையில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய மகளிர் போலீசார் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மணமகன் வீட்டார் வசம் மணமகளை அனுப்பிவைத்தனர்.
இதே போல் பவானி, ஜம்பை கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் மகன் மனோஜ்குமார் (வயது 27) பட்டதாரி இவரும் பவானி, பாலக்கரை வீதி பகுதியை சேர்ந்த மாது மகள் மோகனா (வயது 23) பன்னிரண்டாம் வகுப்பு படித்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில் 7-ம் தேதி மேட்டூர், கொளத்தூரிலுள்ள அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் மணமகன் வீட்டார் வசம் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
பவானி, சித்தோடு சமத்துவபுரம் மூர்த்தி மகன் சூரியபிரகாஷ் (வயது 26). இவரும் சித்தோடு பகுதியை சேர்ந்த சினேகாவும் சேலம் மாவட்டம், காக்காபாளையம் செல்லியம்மன் கோவிலில் 7-ம் தேதி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் விசாரணையில் மணமகன் வீட்டார் வசம் மணமக்களை அனுப்பி வைத்தனர்.
அதேபோல், பவானி ஒலகடம் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மகன் ஹரிஹரன் (வயது 21) பட்டதாரி. இவரும் ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியில் வசிக்கும் நசீர் மகள் சஹானா (வயது 22). இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 7-ம் தேதி ஒலகடம், அய்யனாரப்பன் கோவிலில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இருவீட்டாரையும் அழைத்து பேசிய போலீசார் பெண் வீட்டார் திருமணத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மணமகன் வீட்டார் வசம் மணமக்களை அனுப்பி வைத்தனர்.
முகூர்த்தநாளான நேற்று ஒரே நாளில் 4 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. அறச்சலூரில் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னிமலை அருகே கரட்டுப்பாளையத்தில் நார் மில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இங்கு கயிறு தயாரிப்பதற்காக மிஷின் மூலம் நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 12 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது மாலை 5 மணியளவில் திடீரென எந்திரத்தில் தீப்பொறி பறந்து தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.பின்னர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் நார் மற்றும் எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் எந்த ஒரு இந்தியனுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த விஷயத்தில் நாட்டு நலனை நினைக்காமல் ஓட்டு நலனை கருத்தில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் நடத்திவரும் தி.மு.க.வின் கையெழுத்து இயக்கம் மக்களின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சீமான் கேட்பது வேடிக்கையாக உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு அதிர்ச்சி அளிக்க கூடியது. தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி தொடரும். ராஜீவ் காந்தி கொலையை சாதாரண கொலையாக கருத முடியாது. விடுதலை என்ற கோரிக்கை எழுந்தபோது ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆளுநரின் முடிவு குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை. வருமான வரித்துறை சோதனை விஷயத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. எந்த பின்னணியிலும் மத்திய அரசு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில சட்டத்துறை அமைப்பாளர் பழனிச்சாமி, மாநில செயலாளர் டாக்டர் சரஸ்வதி, மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் விஸ்வ பாலாஜி, முன்னாள் மண்டல தலைவர் சின்னதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் மொடக்குறிச்சி ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
கோவை அருகே உள்ள விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு சாவித்திரி, நாகமணி, திலகவதி, ராசாத்தி ஆகிய 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர்.
கார்த்திகேயன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனைவி கோபித்து கொண்டு மகனுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் 5 வருடங்களாக தாய் தந்தையுடன் வசித்து வந்தார். அடிக்கடி குடித்து விட்டு பெற்றோரிடமும் தகராறு செய்வார். இது தொடர்பாக தந்தை சுந்தரம் ஆலாந்துறை போலீசில் புகார் கொடுத்து வந்தார்.
போலீசார் கார்த்திகேயனை அழைத்து எச்சரித்து அனுப்பி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். பெற்றோருடன் தகராறு செய்தார்.
ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அரிவாளால் தாய் துளசியின் காலில் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக சுந்தரம் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மனம் மாறிய சுந்தரம் மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொள்வதாக கூறினார்.
மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற துளசியும் வீடு திரும்பினார்.
நேற்று இரவு சுந்தரம், துளசி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இரவு 9 மணியளவில் கார்த்திகேயன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டார். அவர்கள் கொடுக்க மறுத்தனர்.
இதனால் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுந்தரமும், துளசியும் தூங்க சென்று விட்டனர். கார்த்திகேயனும் படுத்து விட்டார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் எழுந்த அவர் குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெற்றோரை கொலை செய்ய முடிவு செய்தார்.
தந்தை சுந்தரம், தாய் துளசி ஆகியோரை சரமாரியாக வெட்டினார். அவர்களது கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் பலமாக வெட்டினார். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
பின்னர் கார்த்திகேயன் வீட்டின் கதவை சாத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இன்று காலை வெகுநேரமாகியும் சுந்தரம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அவர்கள் சுந்தரம் வீட்டின் கதவை தள்ளி பார்த்தனர். அப்போது சுந்தரம் கட்டிலுக்கு அடியிலும், துளசி கட்டிலிலும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய கார்த்தி கேயனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோட்டில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் பாசன, நீர் மேலாண்மை திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அத்திக்கடவு -அவினாசி திட்டத்துக்காக, டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபயணம், போராட்டம் நடத்தப்பட்டது.
தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. எவ்வளவு விவசாயிகள் பயன்பெறுவர் என கூறினோமோ, அந்த அளவு பயன்பெறும் வகையில், திட்டம் வகுக்கப்படுகிறது.
சிறுவாணி அருகே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதால், தமிழகம் பாதிக்காதவாறு, கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு, கோவை, கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்கள், ஜவுளி, பின்னலாடை, நெசவு, மின்மோட்டார் தொழில்கள் கடுமையாக பாதிக்கிறது. இம்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு அரசு தேவையான முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, வேளாண் உற்பத்திக்கான தொழிற்சாலை அமைத்தால், வேளாண் துறையும் சிறக்கும்.
தமிழக அரசு, 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. நாங்கள் வைத்த கோரிக்கையால், இந்த ரத்து உத்தரவு வந்துள்ளது.
இடஒதுக்கீட்டின் அளவை, ஜாதி வாரி கணக்கெடுப்பு தான் நிர்ணயிக்கும். தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விரைவில் நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன், இதனையும் நடத்த வேண்டும்.
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த அடிப்படையில் நடந்தது என தெரியாது. இது, தேசிய அளவில் பல இடங்களில் நடத்தப்படுகிறது. அதுபோலத்தான் இதுவும் ஒன்று.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய, தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறுகிறது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு கனிவாகவே நடந்து கொள்கிறது. எனவே, கவர்னர் தான் முடிவை விரைவில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மலை உச்சியில் திம்பம் மலை உச்சி உள்ளது.
திம்பத்தில் இருந்து நேராக சென்றால் ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லலாம். இதேபோல் இடதுபுறமாக சென்றால் தலமலை போய் தாளவாடி போகலாம். இந்த தலமலை வனப்பகுதி அடர்ந்த காடாகும்.
தலைமலை செல்ல திம்பத்தில் உள்ள வனசோதனை சாவடியில் முன்அனுமதி பெற்றுதான் போக வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திம்பம் வனசோதனை சாவடியில் இரவில பணியில் இருந்த கிருஷ்ணனை அங்கு வந்த சிறுத்தை அடித்து கொன்று பாதி உடலை தின்றது. இந்த சம்பவம் இன்றும் வனஊழியர்களை பீதியில் ஆழ்த்தும்.
வனசோதனை சாவடியில் இருந்து 50 அடி தூரமே தள்ளி சிறுநீர் கழிக்க சென்ற வனகாப்பாளர் கிருஷ்ணன் மீது அருகே உள்ள மரத்தில் இருந்த சிறுத்தை பாய்ந்து அவரை கொன்றது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு திம்பம் வனசோதனை சாவடியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
சிறுத்தையால் கொல்லப்பட்ட கிருஷ்ணன் நினைவாக தலமலை ரோட்டுக்கு கிருஷ்ணன் ரோடு என பெயரிடப்பட்டு உள்ளது.
அதே திம்பம் மலைப் பாதையில் மேலும் சிலரை சிறுத்தைகள் கொன்று வேட்டையாடி உள்ளது.
கடந்த சில நாட்களாக திம்பம் வனசோதனை சாவடி அருகே சிறுத்தை நடமாட்டத்தை அந்த வழியாக சென்ற பயணிகளும் கடைகாரர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பொதுவாக அந்த பகுதியாக தாளவாடி, கர்நாடகா மாநிலம் செல்லும் பல வாகனங்கள் திம்பத்தில் நின்று செல்லும்.
வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனத்தை நிறுத்தி திம்பத்தில் டீ, காபி, ராகி வடை, சுண்டல் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.
இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் திம்பத்தில் பயணிகளும் பொது மக்களும், கடை ஊழியர், உரிமையாளர்களும் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
இரவு நேரத்தில் பஸ் நிறுத்தத்தை விட்டு ரோட்டில் இறங்கி நடக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் வட்ட வழங்கல் அதிகாரி குமரகுருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது பாலு என்பவர் வீட்டில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாரிகள் வருவதைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடினர். அதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரிகள் பாலு என்பதும் வீட்டில் சோதனையிட்ட போது வீட்டின் முன்புறம் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி மூட்டைகள் கிடந்தது. மேலும் மினி லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது அதனை கைப்பற்றி வட்ட வழங்கல் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் 75 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த எடை சுமார் 6 டன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் யார்? எங்கே கொண்டு செல்லபடுகிறது? என்பது குறித்து குற்றவாளிகளை கைது செய்து பின்பு தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் வரை கூடிக்கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது சில நாட்களாக கொஞ்சம்... கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.
இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.97-க்கு விற்கப்பட்டது. இன்று 22 காசுகள் குறைந்து ரூ.75.97-க்கு விற்கப்பட்டது.
இதே போல் டீசல் நேற்று ஒரு லிட்டர் ரூ.70.09-க்கு விற்கப்பட்டது. இன்று 26 காசுகள் குறைந்து ரூ.69.83-க்கு விற்கப்பட்டது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “பெட்ரோல் விலை குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம் தான். எங்கே திடீரென மேலும் உயர்த்தி விடுவார்களோ.... என்ற பயமும் உள்ளது. இதை அப்படியே கட்டுக்குள் இருந்தால் மிக நன்றாக இருக்கும்” என்று கூறினர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (7-ந்தேதி) காலை 9 மணி நிலவரப்படி 101.80 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1378 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று 1091 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று சற்று அதிகரித்துள்ளது.
ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி தண்ணீரும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால்களுக்கு 800 கனஅடியும் காளிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.






