search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இல.கணேசன்.
    X
    இல.கணேசன்.

    விஜய் வீட்டின் வருமானவரி சோதனைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பில்லை- இல.கணேசன்

    நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் எந்த ஒரு இந்தியனுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த வி‌ஷயத்தில் நாட்டு நலனை நினைக்காமல் ஓட்டு நலனை கருத்தில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் நடத்திவரும் தி.மு.க.வின் கையெழுத்து இயக்கம் மக்களின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

    தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சீமான் கேட்பது வேடிக்கையாக உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு அதிர்ச்சி அளிக்க கூடியது. தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி தொடரும். ராஜீவ் காந்தி கொலையை சாதாரண கொலையாக கருத முடியாது. விடுதலை என்ற கோரிக்கை எழுந்தபோது ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆளுநரின் முடிவு குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

    நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் சம்பந்தம் இல்லை. வருமான வரித்துறை சோதனை வி‌ஷயத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. எந்த பின்னணியிலும் மத்திய அரசு இல்லை.

    நெய்வேலி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி. தடை செய்யப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்றுதான் பா.ஜ.க. தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். விஜய் என்பதற்காக மட்டுமல்ல.

    பாஜக

    தமிழகத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் நியமனம் குறித்து நாங்களே கவலைப்படவில்லை. யாராக இருந்தாலும் பாஜகவை சேர்ந்த ஒருவரே தலைவராக வருவார். தலைவராக வர பத்தாண்டு காலம் கட்சியில் இருக்க வேண்டும் என்பது கட்சி விதியில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில சட்டத்துறை அமைப்பாளர் பழனிச்சாமி, மாநில செயலாளர் டாக்டர் சரஸ்வதி, மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் விஸ்வ பாலாஜி, முன்னாள் மண்டல தலைவர் சின்னதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் மொடக்குறிச்சி ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×