search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் குவிந்த 4 காதல் ஜோடிகள்

    பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகூர்த்த தினமான நேற்று ஒரே நாளில் 4 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பவானி:

    சிவகங்கை மாவட்டம் கண்டாங்கி பட்டி பகுதியில் வசிக்கும் மந்தகாளை மகன் சதீஷ்குமார் (வயது 21) டிப்ளமோ படித்துள்ளார். தற்போது ஆப்பகூடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிவகங்கையை சேர்ந்த ஹரிதாஸ் மகள் சினேகாதாரணி (வயது 20) டி.பார்ம் படித்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5-ம் தேதி பவானி கூடுதுறையில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய மகளிர் போலீசார் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மணமகன் வீட்டார் வசம் மணமகளை அனுப்பிவைத்தனர்.

    இதே போல் பவானி, ஜம்பை கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் மகன் மனோஜ்குமார் (வயது 27) பட்டதாரி இவரும் பவானி, பாலக்கரை வீதி பகுதியை சேர்ந்த மாது மகள் மோகனா (வயது 23) பன்னிரண்டாம் வகுப்பு படித்த இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில் 7-ம் தேதி மேட்டூர், கொளத்தூரிலுள்ள அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் மணமகன் வீட்டார் வசம் மணமக்களை அனுப்பிவைத்தனர்.

    பவானி, சித்தோடு சமத்துவபுரம் மூர்த்தி மகன் சூரியபிரகாஷ் (வயது 26). இவரும் சித்தோடு பகுதியை சேர்ந்த சினேகாவும் சேலம் மாவட்டம், காக்காபாளையம் செல்லியம்மன் கோவிலில் 7-ம் தேதி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் விசாரணையில் மணமகன் வீட்டார் வசம் மணமக்களை அனுப்பி வைத்தனர்.

    அதேபோல், பவானி ஒலகடம் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மகன் ஹரிஹரன் (வயது 21) பட்டதாரி. இவரும் ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியில் வசிக்கும் நசீர் மகள் சஹானா (வயது 22). இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 7-ம் தேதி ஒலகடம், அய்யனாரப்பன் கோவிலில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இருவீட்டாரையும் அழைத்து பேசிய போலீசார் பெண் வீட்டார் திருமணத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மணமகன் வீட்டார் வசம் மணமக்களை அனுப்பி வைத்தனர்.

    முகூர்த்தநாளான நேற்று ஒரே நாளில் 4 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
    Next Story
    ×