என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 23.12.2019 முதல் 22.01.2020 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6, தேர்தல் படிவம் 7 (நீக்கல்) படிவம் 8 ( திருத்தம்) மற்றும் படிவம் 8 ஏ (இடமாற்றம்) ஆகிய படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

    இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 84 ஆயிரத்து 395 பேரும், மற்றவர்கள் 94 பேரும் அடங்குவார்கள்.

    சிறப்பு வாக்காளர்கள் முகாம் நடத்தி புதிதாக 42 ஆயிரத்து 920 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 6601 பேர் பல்வேறு காரணங்களால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 875 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 12 என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 11 பேர் உள்ளனர்.

    மேற்கு தொகுதியில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 580 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 265 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 28 என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 873 பேரும்,

    மொடக்குறிச்சியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 150 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 17 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 19 என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 186 பேரும்,

    பெருந்துறை தொகுதியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 922 பெண் வாக்காளர்களும், மற்றவர் நாலு பேரும் என மொத்தம் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 130 பேரும்,

    பவானி தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 143 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 99 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 249 பேரும் ,

    அந்தியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 449 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 117 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள்1 1 பேர் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 577 பேரும்,

    கோபி தொகுதியில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 99 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 609 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 716 பேரும்,

    பவானிசாகர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 491 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 5 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 926 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேர் உள்ளனர்.
    விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதி முகாசிபுதூர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் மேட்டூரில் ஐ.டி.ஐ இறுதி ஆண்டு படித்து வந்தார். மணிகண்டனும் பூவரசனும் நண்பர்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டூருக்கு சென்று பூவரசனை அழைத்துக் கொண்டு அம்மாபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். வண்டியை மணிகண்டன் ஓட்ட பின்னால் பூவரசன் அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.

    அம்மாபேட்டை அருகே சின்னபள்ளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி மணிகண்டன் சென்ற போது எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் இடித்து மணிகண்டன், பூவரசன் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். பூவரசன் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொணடு இருந்த பூவரசனை மீட்டு மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பூவரசன் பரிதாபமாகஇறந்தார்.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்தி- ஆலத்துக்கோம்பை பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சிலர் பணம் வைத்து சூதாட்டி கொண்டிருந்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த மணி(27), சத்தியமங்கலம், ஆலத்து கோம்பை பகுதியை சேர்ந்த கோபால்(41), மாதன்(50), குழந்தைவேல்(37) என தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் நால்வர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரிகளிடம் இருந்து பணம், சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    பெருந்துறை:

    பெருந்துறை காந்தி கோவில் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் என்கிற பிரவீன் (வயது30).

    நேற்று இரவு 8.30 மணிக்கு இவர் தனது நண்பர் கணேஷ் என்பவரின் மனைவி சாலம்மாள்(25) மற்றும் சாலம்மாளின் குழந்தைகள் முகுந்த்(5), ஹேமந்த்(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்ட முன்னால் 3 வயது சிறுவன் ஹேமந்த் அமர்ந்திருந்தான். பின்னால் சாலம்மாள், முகுந்த் அமர்ந்து வந்தனர்.

    பெருந்துறை அருகே பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது எதிரே விவேக்(25) என்ற வாலிபர் பெங்களூரிலிருந்து கோவை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் அனைவரும் கீழே விழுந்து துடித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதில் மேல் சிகிச்சைக்காக குழந்தை ஹேமந்தை கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தான்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு அருகே தோ‌ஷம் கழிப்பதாக கூறி வாலிபர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு ரோடு நாலாவது வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது53). இவரது மனைவி திலகவதி.

    நேற்று லோகநாதன் பகலில் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் திலகவதியிடம் சென்று தோ‌ஷம் இருப்பதாக கூறினார். மேலும் தோ‌ஷம் கழிக்க ரூ.12 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

    பின்னர் அவர் கெமிக்கல் கலந்த விபூதியை தண்ணீரில் கலந்து சிவப்பு நிறமாக மாறியதை காண்பித்து தோ‌ஷம் கழிந்து விட்டதாக நம்ப வைத்தார். இதையடுத்து அந்த வாலிபர் ரூ.6,000 வாங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் வீட்டுக்கு திரும்பிய லோகநாதனிடம் நடந்த விவரம் குறித்து திலகவதி கூறினார். யோகநாதன் தனது மகனுடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபர் சூரம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு, பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்கிற முன்னா(32) என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாவை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். தோ‌ஷம் கழிப்பதாக கூறி வாலிபர் மோசடியில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கொலையில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவர், சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (49) கடந்த 3-ம் தேதி பட்டப்பகலில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

    காரில் தப்பிய ஒடிய சென்னை சேர்ந்த கூலிபடையினர் சரவணன், பாலமுருகன், ராஜேஷ் ஆகியோரை கவுந்தப்பாடி அருகே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    இதில் தப்பியோடிய சிவா, முத்துமாரி ஆகியோரும் ஆப்பக்கூடல் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கரபாளையத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவரின் தந்தையின் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக ராதாகிருஷ்ணனை கொன்றதாகவும், இதற்கு அரவிந்த் தங்களை ஏவியதாகவும் அவர்கள் தொரிவித்தனர்.

    இதனை அடுத்து கடந்த 6-ம் தேதி, அரவிந்த் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, அவரை நேற்று முன்தினம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டே‌ஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    மேலும் கூலிப்படையினர் சொன்ன தகவலின் பேரில், இக்கொலையில் தொடர்புடைய அரவிந்த் மாமாவான, சங்கரபாளையத்தை சேர்ந்த, பிரபாகரன் (42)இவர் சக்தியமங்கலத்தில் போலீஸ் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    அவரை தேடி வந்துள்ளதை அடுத்து அவர் நேற்று சென்னிமலை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இருவரையும் பவானி ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

    பஞ்சாயத்து தலைவர் கொலையில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சத்தியமங்கலம் பட்டதாரி விக்னேஷ் புதியதாக மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த திருநகரில் காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன் இவரது மகன் விக்னேஷ்.

    இவர் பிஇ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி இவர் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் கார்பன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    அதன்பின்பு கார்மெண்ட்ஸ் குறித்து அதிக ஆர்வம் கொண்டு இணைய தளம் மூலமாக பல்வேறு ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் வீட்டில் இருந்த படியே செய்து வந்தார்.

    இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் மற்றவர்களை பாதிக்காமல் இருப்பதற்காக மாஸ்க் அணியும் படி சீன அரசு அறிவிக்கப்பட்டது.

    இதனால் சீனாவில் மாஸ்க் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் நாளடைவில் அதிக மக்களை பாதிப்படைய செய்து பல உயிரிழப்பு ஏற்பட்டன தொடர்ந்து ஆயிரக்கணக்கான பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் விக்னேஷ் அன்றாடம் பயன் படுத்தப்படும் பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்து புதியதாக மாஸ்க் கண்டுபிடித்துள்ளார்.

    இவர் கண்டு பிடித்த மாஸ்க் பென்சில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி மாஸ்க் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக மாஸ்க் மீது ஒட்டவைத்தால் அதன் துகள்கள் 0.142 என்.எம். அளவுக்கு மட்டுமே இருக்கும்.

    இதனால் கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றாமல் இருக்கும் அந்த மாஸ்க்கை பயன்படுத்தினால் 95 சதவீதம் தொற்றுவது குறையும் என்று தான் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வை research gate  என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதை அந்த இணைய தளத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இதை சீனா அரசு பரிந்துரைக்கலாம் என்று அந்த இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் இது சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பொறியியல் பட்டதாரி விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது.
    ஈரோடு:

    எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு நிறுவனத்தின் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எரிவாயு விற்பனை அதிகாரி சுகன்யா தலைமை தாங்கினார்.

    ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு கொங்கு கலை அரங்கம் முன்பு தொடங்கிய ஊர்வலம் சம்பத்நகர் ரோடு வழியாக சென்று நசியனூர் ரோட்டில் முடிவடைந்தது.

    முன்னதாக ஆர்.டி.ஓ. முருகேசன் முன்னிலையில் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கியாஸ் வினியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
    சத்தியமங்கலம் அருகே ரோட்டில் கரடி நடமாட்டம் இருப்பதால் அதன் அருகே யாரும் சென்று விட வேண்டாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது.

    பண்ணாரி அருகே குய்யனூரில் ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் தினமும் காலை, மாலை என எப்போதும் ஒரு கரடி நடமாடி கொண்டிருக்கிறது.

    இந்த கரடி ரோட்டிலும் நடமாடுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் உஷாராக கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இதே போல் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களும் கவனமாக இருக்கும் படி கேட்டு கொண்டுள்ளனர்.

    வன விலங்குகளில் கொடிய விலங்கு கரடி. ஆகவே கரடி நடமாடினால் அதன் அருகே யாரும் சென்று விட வேண்டாம் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    குய்யனூர் பகுதியில் முன்பு குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்து பொதுமக்களை தாக்கி உள்ளதை அப்பகுதி மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

    ஒரு விவசாயியை ஒரு கரடி மிகவும் கொடூரமாகவும் தாக்கியது. இந்த நிலையில் குய்யனூர் பாலம் அருகே பாலத்தின் கீழ் தற்போது கரடி நடமாட்டத்தால் குய்யனூர் பகுதி மக்கள் கலக்கத்துடன் உள்ளனர்.
    ஈரோடு அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பையா வீதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது46). நேற்று கருப்பையா ஈரோடு பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.

    பஸ் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது கருப்பையா பின்னால் நின்ற மர்ம நபர்கள் இருவர் திடீரென அவர் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் பணத்தை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா திருடன்..திருடன் என கத்தினார்.

    பஸ்சில் இருந்த பயணிகள் அந்த நபர்களை மடக்கிபிடித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கருணைநாதன்(25), பூபதி(28) என தெரிய வந்தது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழகத்தில் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது என்றும் அந்த ஆளுமையை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் கவிஞர் சினேகன் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு தென் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மண்டல நகர ஒன்றிய செயலாளர் அறிமுக விழா நடந்தது. விழாவில் மாநில இளைஞர் அணி செயலாளரும், கவிஞருமான சினேகன் பேசினார்.

    மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நான் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்த போது கண்ட எழுச்சியை இப்போதும் காண முடிகிறது. நமது இலக்கு 2021ல் நம்மவரை முதல்வராக்க வேண்டும் என்பது தான். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

    தமிழகத்தில் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது. அந்த ஆளுமையை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும். எங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி என்று யாருமில்லை. எதிரிக்கட்சிகள் தான் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரும் 2021 சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனை முதல்வராக்க கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஈரோடு மக்களின் நீண்ட கால குறைகளை கண்டறிந்து நீக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். கமல்ஹாசனின் தொலைநோக்கு திட்டம் செயல்பாடு குறித்து பிரசாரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டனர்.
    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மணமேடையில் புதுமண தம்பதியினர் கையெழுத்திட்டனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி திமுக மாணவரணி அமைப்பாளர் சபீர் அன்சில் என்பவருக்கும், சாஜிதா பர்வீன் என்பவருக்கும் நேற்று புளியம்பட்டி ஹரிணி மகாலில் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணம் முடிந்ததும் மணமேடையில் மணமகன், மணமகள் இருவரும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.

    இதேபோல் திருமணத்திற்கு வந்த பெரும்பாலான பெண்களும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், புளியம்பட்டி நகர செயலாளர் சிதம்பரம், இ.கம்யூ முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இளங்கோ உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×