என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு தினமும் அதிக அளவு பூக்கள் வருகிறது. பூக்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாக வாங்கி செல்கிறார்கள்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை நிலவரம் வருமாறு:-
மல்லிப்பூ 1 கிலோ ரூ.350 முதல் 630 வரையும், முல்லைப்பூ 1 கிலோ ரூ.460 முதல் 540 வரையும், காக்காடா ரூ.250 முதல் 300 வரையும், செண்டு மல்லி ரூ.13 முதல் 30 வரையும், பட்டு பூ ரூ.10 முதல் 26 வரையும், ஜாதி ரூ.450 முதல் 500 வரையும், கனகாம்பரம் ரூ.240 முதல் 260 வரையும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.100-க்கும் விற்பனையானது.
ஆப்பக்கூடல்:
அந்தியூர் திருநீலகண்ட நீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 29). இவர் தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
ராஜா, நேற்று இரவு சுமார்12:30 மணியளவில் ஆப்பக்கூடல் அடுத்த கருவில் வாடி புதூரில் தனது நண்பரை பைக்கில் வந்து இறக்கி விட்டுவிட்டு திரும்பி அந்தியூர் நோக்கி வந்தார்.
அப்போது ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி நோக்கி வந்த ஈச்சர் லாரியை சவுண்டப்பூர் சொசைட்டி வீதியை சேர்ந்த பாலரமேஷ் என்பவர் ஓட்டி வந்த போது சென்னிமலை கவுண்டன் புதூர் அருகே இருவரும் வந்தபோது எதிரே எதிரே மோதிக்கொண்டனர்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரது உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈச்சர் லாரி ஓட்டி வந்த பாலரமேஷ் ஆப்பக்கூடல் போலீசில் சரணடைந்தார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பவானி, சங்கர கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் சித்தோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் டையிங் கம்பெனியில் மினிடோர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் விஜயமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனிக்கு டையிங் பொருட்களை லோடு இறக்கி விட்டு மீண்டும் சித்தோடு சென்று கொண்டிருந்தார். சிப்காட் அருகே உள்ள ஏரிக் கருப்பராயன் கோவில் அருகே அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக வேனின் பின்பகுதியில் மோதியது. இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் மணிக்கு தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டது.
அவரை அக்கம் பக்கத்தி னரால் மீட்கப்பட்டு பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவர மாட்டோம் என்று கூறி உள்ளனர். இது தமிழக மக்களுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும் .
மதத்தால் மொழியால் கலாச்சாரத்தால் இந்த குடியுரிமை சட்டத்தினால் பிரிக்கும் சூழ்ச்சி நடக்கிறது. இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடியின் சகாப்தம் முடிந்து விடும்.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.400க்கு விற்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் இப்போது மோடியின் ஆட்சியில் ஆயிரத்தை எட்டி உள்ளது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஏழை எளிய மக்கள் சமைப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்டக்கூடியதாக இருந்தாலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கூறுவதினால் அவருக்கு உள்ள நல்ல பெயருக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுத்தனர்.
பின்னர் கலெக்டர் கதிரவன் தனது காரில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது கலெக்டரின் காரை மறித்து பெருந்துறை கிரேசி நகரை சேர்ந்த ஒருவர் கண்ணீர் மல்க மனு கொடுத்தார் .
எனது பெயர் ராஜ்(வயது 63) கூலி வேலை செய்து வருகிறேன் எனக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் தனியாக வசித்து வருகிறேன்.
எனக்கு இளைய மகள் உதவிகள் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 18 -ந் தேதி கீழே விழுந்ததில் எனக்கு கால் ஒன்று உடைந்தது. இளைய மகள் திடீரென எனது நிலம் சொத்து பணம் ஆவணங்களை என்னிட மிருந்து அபகரித்துக்கொண்டார்.
தற்போது வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறேன். எனவே எனது இளைய மகள் என்னிடம் அபகரித்த சொத்துகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை அவரிடமிருந்து வாங்கி கொண்ட கலெக்டர் கதிரவன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் மேலும் அந்த தொழிலாளியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறினார்.
இதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த தொழிலாளி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஈரோடு:
கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர் குறிப் பாக ஏழை நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அவித்திருந்தார். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்குகிறார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகிக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கொங்கு நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும் என பலமுறை கேட்டு கொண்டார்களாம். மனுவும் கொடுத்தார்களாம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். சத்தியமங்கலம் வடக்குப் பேட்டையில் உள்ள அத்தாணி ரோட்டில் பொதுமக்கள் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்தனர்.சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்கள் கூறும் போது, “30 வருடமா எங்களுக்கு எந்தவித கழிப்பிட வசதி இல்லை நகராட்சியிலும் பலமுறை கேட்டு உள்ளோம் மனுக்களும் கொடுத்து உள்ளோம்.
ஆனால் அவர்கள் உங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதி வராது என்று கூறிவிட்டனர். கழிவு தண்ணீரை வீட்டிலிருந்து நாங்களே வெளியே கொண்டு வந்து ஊற்றுகிறோம்.
இதனால் எங்களுக்கு பலவிதமான தொற்று நோய்களால் அவதிபடும் நிலை உள்ளது.
இதனால் எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்“ என்று கூறினர்.
இது குறித்து உங்கள் கோரிக்கையினை நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் கூறியதை தொடர்ந்து சமாதானம் ஆன பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த திருட்டு குற்ற வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ராஜு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சகாதேவன், பாலசுப்பிரமணியம் லோகநாதன், அறிவழகன் ஆகியோர் திருட்டுக் குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இந்நிலையில் ஈரோடு சோலார் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஸ் என்கிற வெங்கடேஸ்வரன்(வயது 30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் (32) என்பதும் இவர்கள் கோபி போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து 51 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களின் இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மாமரத்து பாளையம் பகுதியில் தங்கியிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூரை சேர்ந்த முத்துராஜ்(31), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் (28), ராமநாதபுரத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து 52 பவுன் நகைகள் மீட்கப்பட்டன இதைப்போல் சித்தோடு ஆப்பக்கூடல் ஆகிய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய சென்னிமலை பகுதியை சேர்ந்த பாலாஜி (22) கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
மொத்தம் குற்றவாளிகளிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன இவற்றின் மதிப்பு ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது ராமநாதபுரம் தர்மபுரி கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் வேலூர் கோவை போன்ற பகுதிகளிலும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மீட்கப்பட்ட நகைகள் காட்டப்பட்டது குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசாரை எஸ்பி சத்தி? கணேசன் பாராட்டி அவர்களுக்கு ரொக்கப் பணம் கொடுத்தார்.
இதுகுறித்து எஸ்.பி. சத்தி கணேசன் கூறும்போது, “நடந்து முடிந்த குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி கேமரா முக்கிய ஆதாரமாக இருந்தது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும்” என்றார்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 44).
இவர் தனது மகன் சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த நந்தினி (25) என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் விஜயமங்கலம் செட்டிவீதி, பகுதியை சேர்ந்த அய்யப்பன் (35). ஆட்டோ டிரைவர். இவர் மஞ்சுளாவின் வீட்டிற்கு வந்தார். மஞ்சுளாவிடம் நான் திருமணம் செய்து கொள்ள நினைத்த நந்தினியை நீ எப்படி உனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம்? என கேட்டு தகராறு செய்தாராம்.
அப்போது அய்யப்பன் நந்தினியை கையை பிடித்து இழுக்க முயற்சி செய்தார். அப்போது அய்யப்பனை மஞ்சுளா தடுத்தார். அதற்கு அய்யப்பன் மஞ்சுளாவை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த கட்டையை எடுத்து அடிக்க முயன்றாராம்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்தனர். அதற்குள் அங்கிருந்து அய்யப்பன் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தார்.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அய்யப்பனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் பொருளாதார பிரச்சனை, விவசாயம், கொங்கு மண்டலத்தில் அழிந்து வரும் தொழில்களையும் காப்பாற்ற எந்த விதமான அறிவிப்பும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் மறந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என நினைத்து குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் நினைத்தது போல் தற்போது இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் சில மாதங்களாக நடைபெற்ற போட்டி தேர்வுகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பது தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு நடந்ததில் தெரிய வருகிறது. படித்த ஏழை- எளிய மாணவர்களுக்கு படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.
ஈரோடு மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் அமைச்சர்கள் இதை கிண்டலடித்து பேசி வருகிறார்கள்.
ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் கருத்து கூறி வருகிறார்கள். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் ரஜினியுடன் சென்று விடுவார்கள். ரஜினியின் கட்சி தொடக்கத்துக்காக அமைச்சர்கள் காத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது50). கூலி தொழிலாளி. இவரது மனைவி அழகரசி. இவர்களது ஒரே மகன் அலெக்சாண்டர் (14). அவல்பூந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
அலெக்சாண்டர் தன்னுடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதால் பள்ளி முடிந்து நேற்று மாலை 5 மணி அளவில் நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது அலெக்சாண்டரின் சட்டையில் கேக் ஒட்டியது. அதை சுத்தம் செய்வதற்காக தோட்டத்தில் உள்ள கிணற்றில் அலெக்சாண்டர் மட்டும் இறங்கினார். குனிந்து சுத்தம் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் கூச்சல் போட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து மாணவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மாணவனை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு அலெக்சாண்டர் உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






