என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
ஒரு டி.வி.யில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்கும் ஒரு நடிகை பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, குருநாதனின் செல்போன் நம்பரை இணைத்துள்ளனர்.
இதனால் அந்த நடிகை என நினைத்து, இரவு நேரங்களில் பல வாலிபர்கள் இவரை தொடர்புகொண்டு பேசுகின்றனர். மேலும், ‘‘நீங்க அழகா இருக்கீங்க”, ‘‘உங்கள நேர்ல பாக்கணும்” போன்ற வார்த்தைகள் பேசியும், தகாத வார்த்தைகளைப் பேசியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இரவு நேரங்களில் செல்போனில் வரும் அழைப்புகளை எடுப்பதற்கு பயமாக இருக்கிறது என்கிறார் குருநாதன்.
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த குருநாதன், ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் போலி முகநூல் கணக்கை முடக்கி, இவரது செல்போன் எண்ணை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
செல்போன் அழைப்புகளால் இரவு தூக்கம் தொலைத்த சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் திக்குமுக்காடி போயுள்ளார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மூஞ்சப்பன் என்கிற முத்துகவுண்டர்(வயது 94). அப்பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவில் முன்னாள் முதன்மைதாரர் ஆவார்.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட நபர்கள், அதே பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டுக்கு கொண்டு சென்று கிடத்தினார்கள்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகன்கள் லட்சுமணன், தங்கராசு ஆகியோர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், கோவில் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் முஸ்லிம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மதரசா பள்ளிக்கூட சாலையில் நேற்று மாலை முஸ்லிம்கள் திடீரென திரண்டு வந்தனர். இதில் பெண்களும் அதிக அளவில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் அதே பகுதியில் முஸ்லிம்கள் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி கவுரி (வயது35). இவர்களுக்கு தேவதிசா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது உறவினர்கள் ஜோதி (55), சுவர்ணலகரி (19), ஜீவிதா (23), அனுசியா தேவி (25), சுபாதேவி (39), லட்சுமி (50), மித்ரா (7) ஆகியோர் நேற்று காலை கார் மூலம் சேலத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் நள்ளிரவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் கார் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. காரில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
கார் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
பின்னர் மத்தியில் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறம் ரோட்டில் சென்றது. எதிர்ப்புறம் கோவையிலிருந்து கேரளா பதிவு எண் கொண்ட கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் மீது இவர்கள் வந்த கார் மோதி நின்றது இந்த விபத்தில் கவுரி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் படுகாயமடைந்து உயிருக்காக போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜோதி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நவீன்குமார் , ஜீவிதா, அனுசுயா தேவி, லட்சுமி, சுபா தேவி, சுவர்ண லகரி, 7 வயது குழந்தை மித்ரா, மற்றும் ஏழு மாத குழந்தை தேவதிசா ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் மற்றொரு காரில் வந்த கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த உசேன் மோன் (38), உறவினர் முஸ்தபா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் மோதியதில் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்திருந்தது.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு, எல்லப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(58). விவசாயியான இவர் தனது வீட்டில் இருந்து அந்த பகுதியில் தினமும் மாலை வேளையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று மாலை 7 மணிக்கு வழக்கம் போல் நல்லசாமி பெத்தாம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நல்லசாமியின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நல்லசாமியின் தலைமீது கிரேன் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன நல்லசாமிக்கு சரஸ்வதி என்ற மனைவியும், தர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் வரா கவுண்டன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 67). இவர்களுக்கு 2 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்கினர்.
அதிகாலை 2 மணியளவில் திடீரென எழுந்த பொன்னம்மாள் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டிலிருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவரும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பொன்னம்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்னம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி அருகே தனியார் லுங்கி, பனியன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் சூரம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார். இவர் மார்க்கெட்டிங் மற்றும் கலெக்ஷன் செய்து பணத்தை நிறுவனத்திடம் கொடுப்பார். இந்நிலையில் நேற்று இரவு இவர் நிறுவனத்தில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மற்ற ஊழியர்கள் இவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இறந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. அவர் சாவில் மர்மமும் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே அவர் எவ்வாறு இறந்தார்? என தெரிய வரும்.
பங்களாபுதூர் அருகேயுள்ள நஞ்சை புளியம்பட்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 19). இவருக்கு திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையம் கூனம்பட்டியை சேர்ந்த சம்பத் (30) என்பவருடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பத், மஞ்சுளா தம்பதியருக்கு சிவசங்கரன் என்கிற 4 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனது தந்தை வீடான நஞ்சைப்புளியம்பட்டிக்கு குழந்தையுடன் இரண்டு நாட்களுக்கு முன் வந்த மஞ்சுளா நேற்று மதியம் அருகிலுள்ள நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றுள்ளார்.
ஆற்றில் இறங்கி கரையோரம் துணி துவைத்து கொண்டு இருந்த மஞ்சுளா எதிர்பாராது நீரில் மூழ்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் அருகில் இருந்தோர் தீயணைப்பு துறை மற்றும் பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஆற்றில் மூழ்கி இறந்த மஞ்சுளா உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும், இவருக்கு திருமணமாகி 2 வருடமே இருக்கும் நிலையில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 4 மாத கைக்குழந்தை இருக்கும் நிலையில் மஞ்சுளா இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
அரச்சலூர் அடுத்த வெட்டு காட்டு வலசு, கஸ்தூரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் வீட்டில் இருந்தார். அவரது தந்தை தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவரது தந்தை வீட்டுக்கு வந்த போது கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது.
கதவை தட்டியும் பதில் வராததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிவகுமார் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி பிரிந்த காரணத்தால் சிவகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டாரா? என்பன போன்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் உள்ள கல்மணடிபுரம். இந்த ஊரை சேர்ந்த மாதையன் என்பவரது மகள் ஹேமாவதி (வயது 17). இவர் தாளவாடி அருகே உள்ள பனகள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
வழக்கம் போல் இன்று காலை ஹேமாவதி அரசு பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டார். பஸ்சில் 50- மாணவ - மாணவிகள் இருந்தனர். கல்மண்டிபுரத்தில் பஸ்சில் மாணவி ஏறி சிறிது நேரம் சென்ற போது ஒரு வளைவில் பஸ் திரும்பியது.
அப்போது பஸ்சின் உள்ளே நின்ற மாணவி ஹேமாவதி திடீரென நிலைகுலைந்து தவறி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார்.இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட மாணவியை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, “இந்த பகுதியில் காலை நேரத்தில் அதிக மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆகவே கூடுதல் பஸ் இயக்க வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் ஈரோடு வழங்கல் அலுவலரின் இருந்த பரிமளா ஈரோடு தாசில்தாராகவும், ஈரோடு தாசில்தாராக இருந்த ரவிச்சந்திரன் மொடக்குறிச்சி தாசில்தாராகவும், பெருந்துறை தாசில்தாராக இருந்த துரைசாமி முத்திரைத்தாள் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த மாசிலாமணி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளரகவும், மொடக்குறிச்சி தாசில்தாராக இருந்த கவுசல்யா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கவும், பெருந்துறை தாசில்தாராக முத்துகிருஷ்ணன், ஈரோடு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளராக செந்தில்ராஜாவும் மாற்றப்பட்டனர்.
கோபி தாசில்தாராக சிவசங்கர், பவானி நத்தம் செட்டில்மென்ட் தாசில்தாராக விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று ஈரோடு தாசில்தாராக பரிமளா பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஈரோடு எல்லப்பாளையம் கொளத்து பாளையம் பேத்தாங்காடு வீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28) துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (26) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை இவர்களின் குடிசை வீட்டில் நந்தினி இருந்தார். மகன்கள் பள்ளிக்கு சென்று விட்டனர். கணவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது. தொடர்ந்து வீட்டில் இருந்த சிலிண்டரும் டமார் என்ற சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.வீட்டில் தீயில் சிக்கிய மனைவியை மீட்க கணவர் ரமேஷ் முயன்றபோது அவரது முகம் மற்றும் உடலிலும் தீ பிடித்தது. வீட்டின் உள்ளே நந்தினி தீயில் உடல் கருகி கரிகட்டையாக பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
பிறகு அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு ஈரோடு மேற்கு வருவாய் ஆய்வாளர் கயல்விழி, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுமாதா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






